Wednesday, April 12, 2023

1175. நீயும் உறங்கவில்லை, நானும் உறங்கவில்லை!

"ஏம்மா, நீ ராத்திரி முழுக்கத் தூங்கவே இல்லை போலிருக்கே!" என்றாள் நந்தினி, தன் தாயிடம்.

"ஆமாம். முதுகுவலி. மல்லாக்கப் படுத்தா உடம்பு வலிக்குது. ஒருக்களிச்சுப் படுத்தா கொஞ்ச நேரத்தில முழிப்பு வந்துடுது. இன்னொரு பக்கம் திரும்பிப் படுக்க வேண்டி இருக்கு. அதனால அடிக்கடி முழிச்சுக்கிட்டு, மாத்தி மாத்தித் திரும்பிப் படுத்துக்கிட்டிருந்தேன். அது சரி. நான் சரியாத் தூங்காதது உனக்கு எப்படித் தெரியும்? நீயும் சரியாத் தூங்கலியா என்ன?" என்றாள் நந்தினியின் தாய்

'சரியா இல்ல, சுத்தமாவே தூங்கல!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட நந்தினி, "தூங்கினேம்மா! ஒண்ணு ரெண்டு தடவை முழிப்பு வந்தப்ப, நீ புரண்டு படுத்துக்கிட்டிருந்ததைப் பார்த்தேன்" என்றாள் தாயிடம்.

தன்னைக் காதலித்த சதீஷ், காதலுக்கு விடைகொடுத்து விட்டு, வேறொரு பெண்ணை மணந்து கொண்டதிலிருந்து தனக்கு உறக்கம் போய் விட்ட உண்மையைத் தாயிடம் சொல்ல நந்தினிக்குத் துணிவு வரவில்லை.

"கையளவு உள்ளம் வைத்து
கடல் போல் ஆசை வைத்து
விளையாடச் சொன்னானடி - என்னை 
விளையாடச் சொன்னானடி - அவனே
விளையாடி விட்டானடி!"

கைபேசியில் ஒலித்த பாடல் நந்தினியின் மனதைப் பிழிந்தது. 

'கவிஞர் எழுதியதில் ஒரு பிழை இருக்கிறது. கையளவு உள்ளத்தில் கடலளவு ஆசை ஏற்படக் காரணம் இந்தக் கண்கள்தானே! ஏன் கண்களின் பிழையைக் கவிஞர் சுட்டிக் காட்டவில்லை?' என்று நினைத்துப் பார்த்தாள் நந்தினி.

மனதை அழுத்திக் கொண்டிருக்கும் துயரத்தைத் திசை திருப்ப இது போன்ற சிந்தனைகளை மனதில் வலுவில் உருவாக்கிக் கொள்ளும் பழக்கத்தை அவள் ஏற்படுத்திக் கொண்டிருந்தாள்.

தூக்கம் காணாத கண்கள் சோர்வை வெளிப்படுத்த, ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டிருந்தாள் நந்தினி..

பாடல் முடிந்து, அடுத்த பாடல் ஒலித்தது.

"கண்களே! கண்களே!
காதல் செய்வதை விட்டு விடுங்கள்!'

தன் மனதில் எழுந்த கேள்விக்கு விடையளிப்பது போல் அந்தப் பாடல் வந்ததைக் கேட்டு ஒரு நிமிடம் வியந்த நந்தினி, காதல் பற்றிய சிந்தனைகளிலிருந்து தன் மனதைத் திருப்ப எண்ணிப் பாட்டை நிறுத்தினாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118
கண்விதுப்பழிதல் (கண்கள் துயரில் துடித்தல்)

குறள் 1175
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.

பொருள்:
கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1174. கயல்விழியின் கண்கள்!

"போன முறை உன்னைப் பார்த்ததுக்கு, இந்த முறை நல்ல முன்னேற்றம் தெரியுது!" என்றாள் பவளக்கொடி.

"என்ன முன்னேற்றம்? உடல் பருத்திருக்கா?" என்றாள் கயல்விழி.

"உடம்பு பருக்கல. அது எப்பவுமே பருக்காது! ஆனா, போன தடவை நான் உன்னைப் பார்த்தப்ப, அழுது அழுது உன் கண் எல்லாம் வீங்கி இருந்தது. எத்தனை நாளைக்குடி அழுதுக்கிட்டே இருப்பேன்னு நான் கூடக் கேட்டேன். ஆனா இந்த முறை, உன் கண் ஈரமில்லாம கொஞ்சம் தெளிவா இருக்கு. மனசை சமாதானப்படுத்திக்கிட்டு, அழறதை நிறுத்திட்டேன்னு நினைக்கிறேன். இது எனக்கு ஆறுதலா இருக்கு!"

கயல்விழி மௌனமாக இருந்தாள். 

"கயல்! உன் நிலைமை எனக்குப் புரியுது. காதலிச்சவன் பிரிஞ்சு போயிட்டான்னா, அது பெரிய துயரம்தான். ஆனா, அதுக்காக எவ்வளவு நாள் அழுதுக்கிட்டிருந்த நீ! எனக்கு அது பொறுக்கல. அதான் ஒவ்வொரு தடவையும், 'அழறதை நிறுத்திட்டு அடுத்த வேலையைப் பாருடி!'ன்னு உங்கிட்ட சொல்லுவேன். உனக்கு என் மேல கோபம் கூட ஏற்பட்டிருக்கலாம். ரொம்ப நாள் கழிச்சு, இப்பதான் கண்ணீர் இல்லாத உன் கண்ணைப் பாக்கறேன். எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு!" என்றுபடியே, அன்புடன் தோழியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் பவளக்கொடி.

'அடி முட்டாள் பெண்ணே! நான் என் வருத்தத்தைப் போக்கிக்கிட்டு அழறதை நிறுத்திட்டதாவா நினைக்கற? உண்மை அது இல்ல. அழுது அழுது என் கண்ணில இருந்த தண்ணி அத்தனையும் வத்திப் போச்சு! ஆனா, என் கண்களுக்கு இந்த தண்டனை வேண்டியதுதான். அவைதானே எனக்குக் காதல் நோயை ஏற்படுத்தின?' என்று நினைத்துக் கொண்டாள் கயல்விழி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118
கண்விதுப்பழிதல் (கண்கள் துயரில் துடித்தல்)

குறள் 1174
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.

பொருள்:
தப்பிப் பிழைக்க முடியாத, தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Tuesday, April 11, 2023

1173. அதே கண்கள், வேறு செயல்கள்!

"நீயும் நானும் இந்தச் சாலையில நடந்து போய்க்கிட்டிருக்கறப்பதான் முதல்ல அவரைப் பார்த்தோம். ஞாபகம் இருக்கா?" என்றாள் காமினி.

"அப்படியா?" என்றாள் சந்திரகலா.

"என்ன அப்படியா? நீ கூட என்னைக் கேலி செய்யல - என்னடி, உன் கண்ணு அலை பாய்ஞ்சுக்கிட்டே இருக்குன்னு?"

"இப்ப ஞாபகம் வருது. ஆனா அப்ப, நீ மழை வருதான்னு பாக்கறதா இல்ல எங்கிட்ட சொன்னே? நான் கூட 'மழை வருதான்னு பாக்க எல்லாரும் வானத்தையில்ல பாப்பாங்க! ஆனா, நீ ஒரு பக்கமாத் திரும்பித் திரும்பிப்  பாத்துக்கிட்டே வரியே?' ன்னு கேட்டேன். ஓ, அவரைத்தான் திரும்பித் திரும்பிப் பாத்துக்கிட்டிருந்தியா?"

காமினி மௌனமாக இருந்தாள்.

"பாத்த, பழகின. காதலிச்ச. ஆனா, கல்யாணம் பண்ணிக்கறதுக்குள்ள அவர் எங்கேயோ காணமப் போயிட்டாரு. அதுதானே கதை?" என்றாள் சந்திரகலா.

"காணாம எல்லாம் போகல. எங்கேயோ தொலைதூரம் போய் வியாபாரம் செஞ்சு பணம் சேத்துக்கிட்டு வந்து, அப்புறம் என்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டுத்தான் போனாரு!" என்று காமினி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவள் கண்களில் நீர் வழிந்தது.

தெருவில் யாரும் பார்த்து விடக் கூடாதே என்று சேலைத் தலைப்பால் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் காமினி.

'அன்று இந்தக் கண்கள்தான் தாங்கள் காதலனைப் பார்ப்பது யாருக்கும் தெரிந்து விடக் கூடாதென்று மறைத்து மறைத்துப் பார்த்தன. இன்று அதே கண்கள் காதலனின் பிரிவை நினைத்து அழுகின்றன. அவை அழுவதை மறைக்க. அவற்றிலிருந்து வரும் கண்ணீரைக் கைகள் துடைக்கின்றன. ஒருபுறம், இதை நினைத்தால் எனக்குச் சிரிப்பு வருகிறது. மறுபுறம், பரிதாபமாகவும் இருக்கிறது!' என்று நினைத்துக் கொண்டாள் சந்திரகலா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118
கண்விதுப்பழிதல் (கண்கள் துயரில் துடித்தல்)

குறள் 1173
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

பொருள்:
அன்று காதலரைத் தாமே விரைந்து நோக்கிய கண்கள், இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத் தக்கது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Tuesday, April 4, 2023

1172. கலங்கிய கண்கள்

"நான் உனக்குப் பொருத்தமானவன் இல்லை!" என்றான் மணிமாறன்.

"ஏன் அப்படிச் சொல்ற?" என்றாள் காந்தவல்லி

"நீ ஒரு வணிகரோட மகள். நான் ஒரு மாலுமி. உனக்கும் எனக்கும் பொருத்தம் இல்லை!"

"என் கண்கள் நீதான் எனக்குப் பொருத்தமானவன் என்று சொல்கின்றன!"

"கண்கள் செல்லுமிடத்துக்கெல்லாம் மனதும் சென்றால்? மனம் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்!"

"இதில் சிந்திப்பதற்கு எதுவுமில்லை!"

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சந்தையில் மணிமாறனைச் சந்தித்து, முதல் பார்வையிலேயே அவன் மீது காதல் கொண்டு, அவனிடம் தன் காதலைத் தெரிவித்தபோது நிகழ்ந்த இந்த உரையாடல், காந்தவல்லியின் மனதில் வந்து போனது.

பெற்றோர்கள் தடுத்தும் கேளாமல் மணிமாறனை மணம் புரிந்த இந்த இரண்டு ஆண்டுகளில், மணிமாறன் அவளுடன் இருந்த நாட்களை விடக் கடலில் கழித்த நாட்கள்தான் அதிகம்.

மணிமாறன் கப்பலில் வேலை செய்ய வேண்டியதில்லை, தன் வணிகத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கலாம் என்று காந்தவல்லியின் தந்தை கூறியதை மணிமாறன் ஏற்கவில்லை. தான் வேலை செய்து பொருள் ஈட்டி, அதன் பிறகு காந்தவல்லியின் தந்தையின் வணிகத்தில் சிறிதளாவாவது முதலீடு செய்த பிறகுதான், அவர் வணிகத்தில் தானும் சேர்ந்து கொள்ள முடியும் என்று அவன் உறுதியாகக் கூறி விட்டான்.

"ஏன் உன் கண் இவ்வளவு சிவந்திருக்கு. அழுதியா என்ன?" என்றாள் காந்தவல்லியின் தாய்.

"பின்னே, புருஷன் என்னைத் தனியா விட்டுட்டுக் கடலுக்குப் போனா, நான் சிரிச்சுக்கிட்டா இருக்க முடியும்?" என்றாள் காந்தவல்லி, எரிச்சலுடன்.

"இந்தத் திமிர்ப் பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல! காதலிக்கறது பெரிசு இல்லடி. உன் புருஷன் சம்பாதிச்சுப் பொருள் சேர்க்கணுங்கறதுக்காகக் கப்பல்ல கஷ்டப்பட்டு வேலை செய்யறான். அவனோட அன்பு, அக்கறை, பொறுப்புணர்ச்சி இதையெல்லாம் புரிஞ்சுக்காம, அவன் உன்னை விட்டுப் பிரிஞ்சிருக்கறதை நினைச்சு அழறது முட்டாள்தனம்னு உனக்குப் புரியல!"

'ஒருவேளை அவனுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அதற்கும் சேர்த்துத்தான் என் கண்கள் கலங்குகின்றனவோ என்னவோ!" என்று நினைத்துக் கொண்டாள் காந்தவல்லி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118
கண்விதுப்பழிதல் (கண்கள் துயரில் துடித்தல்)

குறள் 1172
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.

பொருள்:
ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?

குறள் 1171
அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, March 19, 2023

1171. எங்கே அவன்?

"கண்களே, கண்களே! காதல் செய்வதை விட்டு விடுங்கள்!"

கைபேசியில் ஒலித்த பாட்டை அவசரமாக நிறுத்தினாள் சுமித்ரா. 'காலை வேளையில என்ன பாட்டுப் போடறாங்க, மனசில இருக்ற புண்ணைக் குத்தி வலியை அதிகமாக்கற மாதிரி!"

பல் விளக்கி விட்டு, காப்பி குடிக்க சமையலறைக்குப் போனாள் .

"என்னடி, கண்ணெல்லாம் சிவந்திருக்கு? ராத்திரி சரியாத் தூங்கலையா?" என்றாள் சுமித்ராவின் அம்மா, அவளிடம் காப்பிக் கோப்பையைக் கொடுத்தபடியே.

"ஆமாம். ஒரே கொசு. தூக்கமே வரல."

"ஏசி போட்டுக்கிட்டுத்தானே தூங்கின? அப்புறம் எப்படி கொசு வரும்?" என்றாள் அம்மா.

சுமித்ரா பதில் சொல்லவில்லை. பதில் சொல்ல முயன்றால், இரவு முழுவதும் கண்களில் நீர் சுரக்க வைத்த அழுகை மீண்டும் பீரிட்டு வந்து விடுமோ என்று அஞ்சிப் பேசாமல் இருந்தாள்.

சாத்விக் அவளை விட்டுப் பிரிந்து போய் ஒரு மாதம் ஆகி விட்டது. எங்கே போனான் என்று தெரியவில்லை. ஃபோன் செய்தால் எடுப்பதில்லை. குறுஞ்செய்திகளுக்கு பதில் இல்லை. முன்பு வாட்ஸ் ஆப் இணைப்பு பெற்றிருந்த அவன் தொலைபேசி எண்ணில், இப்போது அந்த இணைப்பு இல்லை.

தன்னுடன் தொடர்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கிறான். வேறு ஊரில் வேலை வாங்கிக் கொண்டு, தன்னிடம் சொல்லாமல் திடீரென்று ஊரை விட்டுப் போயிருக்கிறான். அவன் வீட்டு விலாசம் அவளுக்குத் தெரியாது. அவன் நண்பர்கள் யாரையும் தெரியாது. அவன் வேலை செய்வதாகச் சொன்னது ஒரு பெரிய நிறுவனம். அங்கே போய் அவனைப் பற்றி விசாரிக்க முடியுமா? விசாரித்தால்தான் என்ன பயன்? அவன் வேலையை விட்டுப் போய் விட்டதாகச் சொல்வார்கள்.

ஒருவேளை அவன் எங்கே இருக்கிறான் என்று தேடிக் கண்டு பிடித்து, அவனைப் போய்ப் பார்த்தாலும்...

'நான் வேண்டாம் என்றுதானே என்னை விட்டு விலகிப் போய் விட்டான்?'

கண்களில் குப்பென்று  கண்ணீர் நிரம்பி வழிந்தது.

கைக்குட்டையால் கண்களைத் துடைத்தபோது, 'ஏ கண்களே! நீங்கள்தானே அவனைப் பார்த்து அவன் மீது ஆசையை உருவாக்கினீர்கள். இப்போது அவனைக் காண முடியவில்லையே என்று நீங்களே அழுகிறீர்கள்! உங்களிடமிருந்து பெருகும் நீரைத் துடைத்துத் துடைத்து, எனக்கல்லவா வலி எடுக்கிறது!' என்று கண்களைக் கடிந்து கொள்வது போல், கண்களை மெல்லத் தட்டியது அவள் கை.

 காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118
கண்விதுப்பழிதல் (கண்கள் துயரில் துடித்தல்)

குறள் 1171
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.

பொருள்:
கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது! அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Saturday, January 28, 2023

1170. நெஞ்சம் அங்கே, கண்கள் இங்கே!

"வைத்தியரே! என் பொண்ணு கொஞ்ச நாளா எப்ப பாத்தாலும் கண்ணை மூடிக்கிட்டு தியானம் பண்ற மாதிரி இருக்கா. கண்ணை முழிச்சதும், கண்ணில தண்ணியாக் கொட்டுது. என்னடி பிரச்னைன்னு கேட்டா, பதில் சொல்லாம சிரிக்கறா. அவளுக்கு மூளை கலங்கிடுச்சோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு!" என்றாள் பொன்னி.

"அப்படியெல்லாம் இருக்காது. ஆமாம், உங்க பொண்ணுக்கு அஞ்சாறு மாசம் முன்னாலதானே கல்யாணம் ஆச்சு? என்னைக் கூடக் கூப்பிட்டிருந்தீங்க. ஆனா என்னால வர முடியல. அவ புருஷனோடதானே இருக்கா?" என்றார் வைத்தியர்.

"ஆமாங்க. கல்யாணம் ஆயிடுச்சு. ஆனா கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே, அவ புருஷன் மலைத்தோட்டத்தில வேலைக்குப் போயிட்டான். ஒரு வருஷம் கழிச்சுத்தான் வருவான். அதனால, அவ இப்ப எங்க வீட்டிலதான் இருக்கா. கணவனைப் பிரிஞ்சிருக்கறதால அவளுக்கு புத்தி பேதலிச்சுடுச்சோன்னு எனக்கு பயமா இருக்கு!" என்றாள் பொன்னி.

"கணவனைப் பிரிஞ்சு இருக்கறதால, ராத்திரியில சரியா தூங்காம இருந்திருப்பா. அதனால, பகல் நேரத்தில கண் எரிச்சல்ல அப்பப்ப கண்ணை மூடிக்கிட்டு உக்காந்துக்கிட்டிருக்கான்னு நினைக்கறேன். கண் எரிச்சலினால கண்ணில தண்ணி வரது இயல்புதானே! உங்க பொண்ணு வந்திருக்காளா?" என்றார் வைத்தியர்.

"வந்திருக்கா. வாசல்ல உக்காரச் சொல்லி இருக்கேன்."

"உள்ள வரச் சொல்லுங்க. நான் அவகிட்ட பேசிப் பாக்கறேன்."

"நானும் கூட இருக்கலாமா?" என்றாள் பொன்னி.

"கண்டிப்பா. அப்பதான் அவ பிரச்னை என்னன்னு உங்களுக்குப் புரியும்!"

"உன் பேர் என்னம்மா?" என்றார் வைத்தியர்.

"யமுனா."

"அம்மா பேரு பொன்னி, மகள் பேரு யமுனா. நல்ல பெயர்ப் பொருத்தம்... ராத்திரி நல்லா தூங்கறியாம்மா?" 

"ஓ, தூங்கறேனே!" என்றாள் யமுனா.

வைத்தியர் தன் அனுமானம் தவறாகப் போனதை உணர்ந்து, பொன்னியைப் பார்த்தார். பொன்னி மௌனமாக இருந்தாள்.

"அப்புறம் ஏன் பகல்ல அடிக்கடி கண்ணை மூடிக்கற? கண் எரிச்சலா இருக்கா?"

"என் புருஷன் ஏதோ ஒரு மலைத்தோட்டத்தில இருக்காரு. அது எங்கே இருக்குன்னு தெரியாது. ஆனா, என் மனசு முழுக்க அவர்கிட்ட இருக்கு. கண்ணை மூடிக்கிட்டா, மலைத்தோட்டத்தோட காட்சி என் மனசில தெரியுது. அதில அவர் வேலை செய்யற காட்சி தெரியுது. அவரைப் பாத்துக்கிட்டே இருக்கேன். அது மகிழ்ச்சியா இருக்கு. ஆனா கண்ணைத் திறந்தா, அதைப் பாக்க முடியலியே! என் மனசால அவர் இடத்துக்குப் போக முடியுது, ஆனா என் கண்களால அங்கே போக முடியலியே! அதை நினைச்சுதான் கண்ணில  தண்ணி வருது!"

என்ன சொல்வதென்று தெரியாமல் ஒரு நிமிடம் மௌனமாக இருந்த வைத்தியர், "ஆமாம். ராத்திரி நல்லாத் தூங்கறேன்னியே, அவரை நினைச்சுத் தூக்கம் வராம போகலியா?" என்றார்.

"இல்லையே! தூங்கினா, கனவில அவர்தானே வராரு? அதனாலதான்,  படுத்தவுடனேயே தூங்கிடறேன்!" என்றாள் யமுனா.

சட்டென்று எழுந்த பொன்னி, "வரேன் வைத்தியரே!" என்று வைத்தியரிடம் சொல்லி விட்டு, "வாடி போகலாம்!" என்று மகளின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 117
படர் மெலிந்திரங்கல் (பிரிவுத் துயரால் உடல் மெலிதல்)

குறள் 1170
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.

பொருள்:
என் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்த மாட்டா.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Thursday, January 26, 2023

1169. நீலாவின் கோபம்!

"ஹலோ! இப்பதாம்மா வேலைக்கு வந்திருக்கேன். சொல்லு, ஏதாவது முக்கியமான விஷயமா?" என்றான் மாணிக்கம்.

"உங்கிட்ட பேசணும். அதை விட முக்கியமான விஷயம் வேற என்ன வேணும்?" என்றாள் நீலா.

"நான் வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போனப்பறம் கூப்பிடறேனே! அப்ப நீயும் முழிச்சுக்கிட்டிருப்பே!"

"இப்ப நான் என்ன தூங்கிக்கிட்டா இருக்கேன்?"

"ராத்திரி பன்னிரண்டு மணிக்கு எனக்கு ஃபோன் பண்றியே! உனக்கும் தூக்கம் கெடும். என்னாலயும் வேலை நேரத்தில அதிகம் பேச முடியாது. அதனாலதான், வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போனப்பறம் பேசறேன்னு சொன்னேன். நீயும் தூக்கத்தைக் கெடுத்துக்காம, பகல் நேரத்தில பேசலாம்" என்றான் மாணிக்கம்.

"இங்கே பகலா இருக்கும்போது, அங்கே ராத்திரிதானே? நீ தூங்க வேண்டாமா?"

"என்ன நீலா, முட்டாள் மாதிரி பேசற? ராத்திரி பத்து மணிக்கு உங்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு, அப்புறம் தூங்க முடியாதா? இப்ப எனக்கு வேலை இருக்கு. ஃபோனை வச்சுடு. ராத்திரி நானே உனக்கு ஃபோன் பண்றேன்!" என்று கூறி ஃபோனை வைத்து விட்டான் மாணிக்கம்.

"என்ன நீலா இது? அங்க ராத்திரி ரெண்டு மணி! இப்ப ஃபோன் பண்ற?" என்றான் மாணிக்கம்.

"இப்ப உனக்கு லஞ்ச் டயம்தானே? அதனாலதான் ஃபோன் பண்ணினேன்!" என்றாள் நீலா.

"எங்களுக்கெல்லாம் லஞ்ச் டயம்னு தனியா கிடையாதும்மா. உக்காந்து ஒரு கையால கம்ப்யூட்டர்ல வேலை செஞ்சுக்கிட்டே, இன்னொரு கையால சாப்பிட வேண்டியதுதான். அந்த நேரத்தில பாஸ்கிட்டேந்து ஃபோன் வரும். 'இப்ப லஞ்ச் டயம்தானே, ஃப்ரீயாதானே இருக்கே, என் கேபினுக்குக் கொஞ்சம் வரியா?'ம்பாரு, ஏதோ நான் லஞ்ச் டயத்துல மத்தவங்களோட அரட்டை அடிச்சுக்கிட்டு உக்காந்திருக்கற மாதிரி! இதுல நீ வேற லஞ்ச் டயம்தானேன்னு கேக்கற!"

"சாப்பிட்டுக்கிட்டிருக்கேன்னா சொல்லு. பத்து நிமிஷம் கழிச்சு ஃபோன் பண்றேன். உன் பாஸ்கிட்ட பேசற மாதிரி, ஒரு கையில ஃபோனை வச்சுக்கிட்டு எங்கிட்ட பேசிக்கிட்டே ஒரு கையால சாப்பிட வேண்டாம்!"

"நான் லஞ்ச் முடிச்சுட்டேன். நான் சொல்ல வந்ததை நீ புரிஞ்சுக்கல. இப்படி ராத்திரியில கண் முழிச்சு எங்கிட்ட பேசறதை விடக் காலையில ஃப்ரீயா பேசலாமேன்னுதான் சொல்றேன்!"

"முட்டாளாடா நீ?" என்றாள் நீலா, கோபத்துடன். "உன் கம்பெனியில அமெரிக்காவுக்குப் போகச் சொன்னதும், நீ பாட்டுக்கு ஜாலியா போயிட்டே! உன்னைப் பிரிஞ்சு இருக்கறது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்குன்னு உனக்குத் தெரியுமா? உன் பிரிவைக் கூடப் பொறுத்துப்பேன். ஆனா, இந்த ராத்திரி நேரத்தை என்னால பொறுத்துக்கவே முடியவே இல்லை. பகல் நேரம்னா ஏதாவது வேலை இருக்கும், யாராவது வருவாங்க, போவாங்க. ஒரு மாதிரி நேரம் ஓடிடும். ஆனா இந்த ராத்திரி வந்தா, அது முடியவே மாட்டேங்குது! தூக்கம் வராம ராத்திரி பூரா கொட்டக் கொட்ட முழிச்சுக்கிட்டிருக்கறது எவ்வளவு நரகமா இருக்கு தெரியுமா? அதனாலதான், ராத்திரியில ரெண்டு மூணு தடவை உங்கிட்ட பேசி இந்த ராத்திரியோட கொடுமையிலேந்து கொஞ்சம் விடுபடலாம்னு பாத்தா, நீ அதைப் புரிஞ்சுக்காம எனக்கு அட்வைஸ் பண்ற! உனக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவுங்கறதே கிடையாதா?"

திடீரென்று நீலா கோபத்தில் வெடித்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில், சில விநாடிகள் என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாக இருந்தான் மாணிக்கம்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 117
படர் மெலிந்திரங்கல் (பிரிவுத் துயரால் உடல் மெலிதல்)

குறள் 1169
கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா.

பொருள்:
இந்த இரவுகள் நீண்டு கொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே, அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையை விடப் பெரிதாக உள்ளது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Wednesday, January 25, 2023

1168. இரவுக்கு நான் மட்டும் காவல்

"ஏண்டி, எனக்கு ஃபிரண்டுன்னு நீ ஒருத்திதான் இருக்கே. கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருக்கலாம்னா, அதுக்குள்ள வீட்டுக்குக் கிளம்பறேங்கறியே!" என்றாள் உமா.

"இப்ப போனாத்தான் வீட்டுக்குப் போய் ராத்திரிக்கு சாப்பாடு செஞ்சு எல்லாருக்கும் போட்டுட்டு, பத்து மணிக்குத் தூங்கப் போக முடியும். காலையில நாலு மணிக்கு எழுந்து, பால் பூத்துக்குப் போய், பால் பாக்கெட்களை வாங்கிக்கிட்டு வந்து, வீடுகளுக்குப் போட முடியும். உன்னை மாதிரி எட்டு மணி வரைக்கும் என்னால தூங்க முடியாது!" என்றாள் கலா.

"நான் எட்டு மணி வரைக்கும் தூங்கறேன்னு உனக்கு யார் சொன்னது?" என்றாள் உமா, சற்று சங்கடத்துடன்.

"அன்னிக்குக் காலையில எட்டு மணிக்கு நான் உன் வீட்டுக்கு வந்தப்ப, உங்கம்மா சொன்னாங்ளே, 'அவ இன்னும் தூங்கிக்கிட்டுத்தான் இருப்பா, போய் எழுப்பிக்கிட்டு வரேன்'னு!"

"இப்ப நான் எங்க அம்மா வீட்டில  இருக்கறதால, சீக்கிரம் எழுந்திருக்க வேண்டாங்கறதால, சும்மா படுத்துக்கிட்டிருப்பேன். நான் தூங்கறதா எங்கம்மா நினைச்சுக்கிட்டிருப்பாங்க. எங்க வீட்டில இருந்தா, நானும் அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்துடுவேன்!"

"உன் புருஷன் துபாய்லேந்து எப்ப வராரு?"

"இன்னும் ரெண்டு மாசம் ஆகுமாம்."

"அடிக்கடி கடுதாசி போடறாருல்ல?"

"எங்கே? எப்பவாவதுதான். அவருக்கு நேரம் கிடைக்கறதில்லையாம்! இங்கே ஃபோன் இருந்தா, ஃபோனாவது பண்ணச் சொல்லலாம்! அதுக்கெல்லாம் நமக்கு வசதி ஏது?" என்றாள் உமா, பெருமூச்சுடன்.

"கவலைப்படாதே! உன் புருஷன் துபாய்லேந்து நிறைய சம்பாதிச்சுட்டு வந்ததும், நீயும் கார், ஃபோன் எல்லாம் வச்சுக்கிட்டு வசதியா இருக்கலாம். அப்பல்லாம் என்னால உன்னை வந்து பாக்க முடியுமோ என்னவோ!" என்றாள் கலா, சிரித்தபடி.

"போடி, நீ வேற? பொண்டாட்டியைத் தனியா விட்டுட்டு அப்படி என்ன வெளிநாடு போய் சம்பாதிக்க வேண்டி இருக்குன்னு நான் ஏங்கிக்கிட்டிருக்கேன். யாருக்கு வேணும் வசதி எல்லாம்? அவர் என்னோட இருந்தா எனக்குப் போதும்!"

"என் புருஷனுக்கு வெளிநாடு போற வாய்ப்பு வந்தா, நான் சந்தோஷமா அனுப்பி வச்சுடுவேன். அவர் போய்ப் பணம் சம்பாதிச்சுட்டு வந்தா, அப்புறம் வசதியா இருக்கலாம் இல்ல?"

"இப்ப இப்படித்தான் சொல்லுவ. அவர் நிஜமாகவே உன்னைத் தனியா விட்டுட்டுப் போனா, அப்ப உணருவே!"

"எனக்கு நேரமாச்சு. நான் கிளம்பணும். ரொம்ப அலுப்பா இருக்கு. காலையில எழுந்ததிலேந்தே ராத்திரி எப்ப வரும், எப்ப படுத்து நிம்மதியாத் தூங்கலாம்னு இருக்கு. அப்படி ஒரு அலுப்பு!" என்று கூறியபடியே கிளம்பினாள் கலா.

'நீ கொடுத்து வச்சவடி! தூக்கத்தை நல்லா அனுபவிக்கற!' என்று தனக்குள் முணுமுணுத்தாள் உமா.

டுக்கையில் படுத்து நீண்ட நேரம் ஆகி விட்டது. இன்னும் தூக்கம் வரவில்லை. மணி என்ன இருக்கும் என்று தெரியவில்லை. அலாரம் வைத்த சிறிய கடிகாரம் முன்னறையில் இருந்தது. அங்கே போய் மணி பார்க்கலாம் என்றால், அம்மா காலடிச் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டு, "ஏண்டி சத்தம் போட்டு என்னை எழுப்பின?" என்று சத்தம் போடுவாள்.

இப்படியே ஏதாவது நினைத்துக் கொண்டு படுத்திருந்தால், எப்போதோ ஒரு சமயம் பொழுது விடிந்து விடும். ஆனால், அதற்குப் பிறகு பகல் முழுவதும் தூக்கக் கலக்கத்துடனும், கண் எரிச்சலுடனும்தான் இருக்க வேண்டும்!

இந்த இரவில் எல்லோரும் நிம்மதியாக உறங்குகிறார்கள் - கலாவைப்போல். ஆனால், நான் மட்டும் விழித்துக் கொண்டேதான் இருக்கிறேன். 

பாவம், இந்த இரவும் என்னைப் போல் தனியாகத்தானே இருக்கிறது! அதற்கு ஒரு துணை வேண்டாமா? அதனால்தான் என்னைத் துணையாக வைத்துக் கொண்டிருக்கிறது போலிருக்கிறது!

தான் அடிக்கடி நினைத்துப் பார்க்கும் பாட்டைத் தனக்குள் மெல்ல முணுமுணுத்தாள் கலா.

'இரவுக்கு நான் மட்டும் காவல்
எனக்கொரு துணை இந்தப் பாடல்.'

'கண்ணதாசன் இந்தப் பாட்டை எனக்காகவே எழுதின மாதிரி இருக்கு!' என்று நினைத்தபடியே, கண்ணை மூடித் தூங்க முயன்றாள் உமா.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 117
படர் மெலிந்திரங்கல் (பிரிவுத் துயரால் உடல் மெலிதல்)

குறள் 1168
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை

பொருள்:
இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிர்களையும் தூங்கச் செய்து விட்டு, என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Sunday, January 22, 2023

1167. செவ்வந்தியின் சந்தேகம்!

திருமணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகி விட்டன. ஆயினும், கோதைக்கு ஒவ்வொரு நாளும் ஒரு புது நாளாகத்தான் இருந்தது.

காலை எழுந்துடன், முதல்நாள் முழுவதும் கணவனுடன் கழித்த நேரத்தை எண்ணி அசை போட்டு மகிழ்ந்த பிறகும், அன்றுதான் தன் மண வாழ்க்கையின் முதல் நாள் என்பது போல் உணர்வாள் கோதை.

கணவன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவன் தன்னிடம் காட்டும் அன்பை உணர்ந்து, தானும் தன் அன்பைப் பேச்சாலும், செயலாலும் வெளிப்படுத்தி, இரவு உறங்கும்போது, இருவரும் ஒருவர் மற்றவர் மீது வெளிப்படுத்தும் அன்பின் உச்சத்தை அனுபவித்து, காலை கண் விழித்ததும், மீண்டும் ஒரு புது நாளை எதிர்நோக்கும் புத்துணர்ச்சி அவளுக்கு ஏற்படும்.

'இது என்ன விந்தை! இந்த அன்பு வெள்ளம் தினமும் பாய்ந்து என்னை மூழ்கடிக்கிறதே! இந்த அன்பு வெள்ளத்துக்குக் கரையே கிடையாதா?' என்று நினைத்து நினைத்து மலைப்பாள் கோதை.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, கோதையின் கணவன் வியாபார விஷயமாக வெளியூருக்குச் செல்ல வேண்டி இருந்தது. போவதற்கு முன் கோதையை அவள் தாய் வீட்டில் விட்டு விட்டு, தான் திரும்பி வரச் சில மாதங்கள் ஆகும் என்று சொல்லி விட்டுப் போனான் அவன்.

"ஏண்டி உன் கண் இப்படிச் சிவந்திருக்கு?" என்றாள் கோதையின் தோழி செவ்வந்தி.

"பின்னே? சிவக்காம எப்படி இருக்கும், ராத்திரி முழுக்கத் தூங்காம, கொட்டக் கொட்ட விழிச்சுக்கிட்டுப் படுத்துக்கிட்டிருந்தா?" என்றாள் கோதையின் தாய் காவேரி.

"ஏண்டி இப்படி? உடம்பு சரியில்லையா?" என்றாள் செவ்வந்தி.

"உடம்புக்கு ஒண்ணுமில்ல. ஊருக்குப் போன கணவனை நினைச்சுத் தூங்காம கண் முழிச்சுக்கிட்டிருக்கா. இத்தனைக்கும், அவன் இவளோட ஆறு மாசம் குடித்தனம் நடத்திட்டு அப்புறம்தான் போனான். உன் புருஷன் கல்யாணம் ஆகி ஒரு வாரத்திலேயே உன்னை விட்டுட்டு ஊருக்குப் போயிட்டான். நீ பிரிவைத் தாங்கிக்கிட்டு, தைரியமா இல்ல? இப்ப அவன் திரும்பி வந்துட்டான். நீ இதையெல்லாம் இயல்பா எடுத்துக்கற. ஆனா, இவளுக்கு அது புரியலையே!" என்றாள் காவேரி.

காவேரி தன் பெண்ணைப் பற்றிக் குறை சொல்கிறாளா, அல்லது, 'என் பெண்ணைப் போல் உனக்கு உன் கணவனிடம் அளவு கடந்த அன்பு இல்லையே!' என்று சொல்லிக் காட்டுகிறாளா என்று புரியாமல், தாய் மகள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள் செவ்வந்தி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 117
படர் மெலிந்திரங்கல் (பிரிவுத் துயரால் உடல் மெலிதல்)

குறள் 1167
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.

பொருள்:
காமம் என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Friday, December 9, 2022

1166. கடலினும் பெரிது!

"என்னடி, கல்யாணத்துக்கப்புறம் ஒரு மாசமா உன்னைக் கண்ணிலேயே காணுமே! ஊருக்கு எங்கேயாவது போயிருந்தியா என்ன?" என்றாள் வானதி.

"இல்லையே! இங்கேதான் இருந்தேன். அவரோட அப்பப்ப எங்கேயாவது போயிட்டு வருவேன். அதைத் தவிர, வெளியில அதிகமா வரல. அதனால, நீ என்னைப் பாத்திருக்க மாட்ட!" என்றாள் குமுதினி.

"ம்...கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு?"

"உனக்குத் தெரியாதா? நீ எனக்கு முன்னேயே கல்யாணம் ஆனவதானே?"

"ஒவ்வொருத்தரோட அனுபவமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கல்யாணம் ஆன புதுசில, 'கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு?'ன்னு என்னை யாராவது கேட்டிருந்தா, 'காத்தில மிதக்கற மாதிரி இருக்கு'ன்னு சொல்லி இருப்பேன். நீ என்ன சொல்லுவ?"

"எனக்கு உன்னை மாதிரியெல்லாம் பேசத் தெரியாதுடி. ஆனா, நீ காத்துல மிதக்கற மாதிரி இருக்குன்னு சொன்னதைக் கேட்டப்பறம், எனக்கு வேற ஒண்ணு தோணுது!" என்றாள் குமுதினி.

"என்ன தோணுது?" என்றாள் வானதி.

"நான் கடலைப் பாத்ததில்ல. அது பெரிசா, எல்லை இல்லாதததா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். என் திருமண வாழ்க்கையில, என்னோட சந்தோஷமும் கடல் மாதிரி, கரையில்லாத மாதிரி, பரந்ததா இருக்கறதா எனக்குத் தோணுது!" என்றாள் குமுதினி.

"ன்ன குமுதினி, உன் புருஷன் எப்ப ஊர்லேந்து வராரு?" என்றாள் வானதி.

"மூணு மாசத்தில வந்துடுவேன்னு சொன்னாரு. அவர் போய் ரெண்டு மாசம்தான் ஆச்சு. ஆனா, எனக்குப் பல வருஷங்கள் ஆயிட்ட மாதிரி இருக்கு. இன்னும் ஒரு மாசம்  எப்படி காத்துக்கிட்டிருக்கப் போறேன்னு நினைச்சா மலைப்பா இருக்கு!" என்றாள் குமுதினி.

"கவலைப்படாதே! கணவன் மனைவியை விட்டுப் பிரிஞ்சு வெளியூர் போறது உலகத்தில எல்லா வீட்டிலேயும் நடக்கற விஷயம்தான். பிரிவுத் துன்பத்தைப் பொறுத்துக்கறது கஷ்டம்தான். ஆனா, பொறுத்துக்கிட்டுத்தான் ஆகணும்!"

"கடலை விடப் பெரிசா ஏதாவது இருக்கா?" என்றாள் குமுதினி, திடீரென்று.

"ஏன் கேக்கற?" என்றாள் வானதி, புரியாமல்.

"என் காதல் வாழ்க்கை எப்படி இருக்குன்னு அன்னிக்கு நீ கேட்டப்ப, கடல் மாதிரி பரந்ததா இருக்குன்னு சொன்னேன். இந்தப் பிரிவுத் துன்பம் அந்தக் கடலை விடப் பெரிசா இருக்கே, அதுதான் கேட்டேன்!" என்றாள் குமுதினி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 117
படர் மெலிந்திரங்கல் (பிரிவுத் துயரால் உடல் மெலிதல்)

குறள் 1166
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

பொருள்:
காதல் இன்பம் கடல் போன்றது. காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலை விடப் பெரியது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Thursday, December 8, 2022

1165. துயர் தரும் காதலன்!

"என்ன சுந்தரி, உன் காதலர் ஊர்லேந்து வந்துட்டார் போல இருக்கே!" என்றாள் ரதிதேவி.

"ஆமாம், அக்கா! நாலு மாசம் கழிச்சு வந்திருக்காரு!" என்றாள் சுந்தரி.

"உன் முகத்தைப் பாத்தாலே தெரியுதே! இத்தனை நாளா உன் முகத்தில சுரத்தே இல்லை. இன்னிக்குத்தான் முகத்தில ஒரு மலர்ச்சி தெரியுது."

'உனக்குக் கேலியா இருக்கு! இந்த நாலு மாசமா எப்படித் தவிச்சேன்னு எனக்குத்தானே தெரியும்!' என்று நினைத்துக் கொண்டாள் சுந்தரி.

"என்னடி, மறுபடி உன் முகம் வாடி இருக்கு? உன் காதலன்தான் திரும்பி வந்துட்டாரே! ஒரு மாசமா சந்தோஷமா இருந்தியேன்னு பாத்தேன். மறுபடி எங்கேயாவது ஊருக்குப் போகப் போறாரா என்ன?" என்றாள் ரதிதேவி.

"இல்லை, அக்கா! அவர் இங்கதான் இருக்காரு."

"அப்புறம் என்ன?"

"அவர் என் மேல கோபமா இருக்காரு. ரெண்டு நாளா என்னைப் பாக்கறதும் இல்ல, பேசறதும் இல்ல!"

"எதுக்குக் கோபம்?"

"ஏதோ சின்ன விஷயம். அவர் செஞ்சது தப்புன்னு நான் சொல்லிட்டேன். அதுக்குப் போய்ப் பெரிசாக் கோவிச்சுக்கிட்டு, என்னைப் பாக்காம, எங்கிட்ட பேசாம என்னை தண்டிக்கறாரு!" என்றாள் சுந்தரி. சொல்லும்போதே அவளுக்கு அழுகை பீறிட்டு வந்தது.

"அடி போடி! இதுக்கா இப்படி வாடிப் போயிட்ட? காதலர்களுக்குள்ள இது மாதிரி சண்டை வரது சகஜம்தான். சண்டை போட்டுப்பாங்க, கொஞ்ச நாள் கழிச்சு சமாதானம் ஆயிடுவாங்க. இதுக்காகக் கவலைப்படாதே!" என்றாள் ரதிதேவி.

"இல்லை, அக்கா! அவர் எங்கிட்ட அன்பா இருக்கறப்பவே எனக்குப் பிரிவைக் கொடுத்து கஷ்டப்படுத்தினாரு. இப்ப என் மேல கோபமா இருக்கறப்ப எப்படியெல்லாம் கஷ்டப்படுத்துவாரோன்னு நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு!" என்றாள் சுந்தரி.

காதலனின் பிரிவு சுந்தரியை எந்த அளவுக்கு பாதித்திருந்தது என்பதை உணர்ந்து கொண்ட ரதிதேவி, தோழியை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று யோசிக்கத் தொடங்கினாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 117
படர் மெலிந்திரங்கல் (பிரிவுத் துயரால் உடல் மெலிதல்)

குறள் 1165
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.

பொருள்:
நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...