Monday, August 24, 2020

1120. மலரும் முள்ளாகும்!

"அங்கே ஒரு அழகான தோட்டம் இருக்கிறதே, அங்கே போகலாமா?" என்றாள் மலர்க்கொடி.

"போகலாம். ஆனால், நாம் அங்கே போனால், அங்கே இருப்பவர்கள் எல்லாம் தோட்டத்தின் அழகை ரசிப்பதை விட்டு விட்டு, உன் அழகை ரசிக்க ஆரம்பித்து விடுவார்களே!" என்றான் மணிவண்ணன்.

"நீ இப்படியெல்லாம் பேசுவதாக இருந்தால், இனி உன்னுடன் எங்கும் வர மாட்டேன். இப்போதே வீட்டுக்குப் போகிறேன்!" என்றாள் மலர்க்கொடி, பொய்க் கோபத்துடன்.

"மன்னித்து விடுங்கள் மகாராணி! இனிமேல் அப்படி எல்லாம் பேச மாட்டேன். அந்தத் தோட்டம் இங்கிருந்து சில நூறு அடிகள் இருக்கிறதே! அதுவரை நடந்தால், உன் பாதம் கன்றி விடுமே! நான் வேண்டுமானால், உன்னைத் தூக்கிக்கொண்டு வரட்டுமா?"

"இப்போதுதான் சொன்னாய், இது போன்ற கேலிப் பேச்செல்லாம் பேச மாட்டேன் என்று. நான் வீட்டுக்குப் போக வேண்டும் என்பதுதான் உன் விருப்பம் போலிருக்கிறது!"

"ஐயையோ வேண்டாம். இனிமேல் இப்படியெல்லாம் பேச மாட்டேன். நீ வேண்டுமானால், மல்லிகையின் இதழைப் போன்ற உன் கையால் என் வாயைப் பொத்தியபடியே வா!"

"நீ ஓய மாட்டாய்!" என்று சிரித்தபடியே சொல்லி விட்டுத் தோட்டத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் மலர்க்கொடி.

ருவரும் பேசிக் கொண்டே தோட்டத்தில் நடந்தார்கள்.

"ஆஹா! அனிச்ச மலர்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!" என்றாள் மலர்க்கொடி

"ஆமாம்! அவை உன்னைப் போல்தான். அபாரமான அழகு, ஆனால் தொட்டால் சிணுங்கி!" என்றான் மணிவண்ணன்.

மலர்க்கொடி அவன் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவள் போல், "இங்கே இத்தனை அன்னங்கள் நடந்து கொண்டிருக்கின்றனவே! எவ்வளவு அழகான காட்சி!" என்றாள்.

"ஆமாம். ஆனால், அவை உன்னைப் பார்த்து நடை பழகுகின்றன என்ற உண்மையை நான் சொன்னால், நீ கோபித்துக் கொள்வாய்!"

அவனுக்கு பதில் சொல்ல வாய் திறந்த மலர்க்கொடி, திடீரென்று, 'ஆ' என்று கூவியபடியே, தரையில் அமர்ந்தாள்.

"என்ன ஆயிற்று?" என்றான் மணிவண்ணன், பதற்றத்துடன்.

"காலில் ஏதோ குத்தி விட்டது" என்றாள் மலர்க்கொடி, தன் பாதத்தைத் தன் கையால் தடவியபடியே.

"மெதுவாக. வெண்தாமரை போன்றிருந்த உன் பாதம், இப்போது செந்தாமரை போல் ஆகி விட்டதே! நல்லவேளை, ரத்தம் வரவில்லை. வைத்தியர் வீடு அருகில்தான் இருக்கிறது. வா போகலாம்" என்றான் மணிகண்டன், அவள் கையைப் பிடித்து, அவளை எழுந்து நிற்கச் செய்ய முயன்றபடி.

"என்னால் அவ்வளவு தூரம் நடக்க முடியுமா என்று தெரியவில்லை" என்றாள் மலர்க்கொடி, அவன் கையை உதறியபடி.

"நான் தூக்கிக்கொண்டு செல்கிறேன் என்று சொன்னால், நீ கோபித்துக் கொள்வாய்."

மலர்க்கொடி மீண்டும் அவனை முறைத்துப் பார்த்து விட்டு, "சற்று நேரம் உட்கார்ந்து விட்டுப் போனால் சரியாகி விடும்" என்றாள்

"அதுவும் சரிதான். வைத்தியர் வீட்டுக்குப்போனால் அவர் சிரிக்கப் போகிறார்."

"எதற்குச் சிரிக்க வேண்டும்?"

"பின்னே? கீழே உதிர்ந்து கிடக்கும் அனிச்சம்பூவின் இதழ்களும், அன்னப்பறவையின் இறகுகளும் பட்டு, உன் கால் நொந்து போயிருப்பதைக் கண்டு சிரிக்க மாட்டாரா என்ன?" என்றான் மணிகண்டன். 

மலர்க்கொடி கோபம் கொண்டவளாக, விருட்டென்று எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 112
நலம் புனைந்துரைத்தல்   

குறள் 1120
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

பொருள்:
அனிச்ச மலரும், அன்னத்தின் இறகும், இந்தப் பெண்ணின் காலடிக்கு நெருஞ்சி முள் போன்றவை.

Read 'Flower Becomes A Thorn' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Sunday, August 23, 2020

1119. காதலிக்குக் கிடைத்த பரிசு!

"நம் புலவர் எப்போதுமே வித்தியாசமாகக் கற்பனை செய்பவர். பொதுவாக, எல்லோரும் பெண்களின் முகத்தை நிலவுக்கு ஒப்பிடுவார்கள். ஆனால், நம் புலவர் இந்த வழக்கத்தை மாற்றி, நிலவு தன் காதலியின் முகத்தை ஒத்திருக்கிறது என்று எழுதி இருக்கிறார்!" என்றார் அமைச்சர்.

"புலவரே! உங்களுக்கு உண்மையிலேயே காதலி இருக்கிறளா, அல்லது, அது கூட உங்கள் பாடலைப் போல் ஒரு கற்பனையான விஷயமா?" என்றான் அரசன்.

புலவர் சற்று திடுக்கிட்டவராக, "இருக்கிறாள் அரசே! அவள் முக அழகு நிலவின் அழகை மிஞ்சுவதாக எனக்குத் தோன்றியதால்தான் இப்படி எழுதினேன்" என்றார்.

"உங்களைப் பொருத்தவரை, நீங்கள் எழுதியது சரியாக இருக்கலாம். ஆனால், நிலவு என் காதலியின் முகத்தை ஒத்தது என்று நான் எப்போதும் சொல்ல மாட்டேன்."

"ஏன் அரசே?"

"ஏன் என்பதை நீங்களே சிந்தித்துப் பார்த்துக் கண்டு பிடித்து நாளை கூறினால், உங்கள் பாடலுக்கு நான் இரு மடங்கு பரிசளிக்கிறேன்!" என்றான் மன்னன்.

ரவு முழுவதும் யோசித்தும், புலவரால் மன்னன் கூறியதற்கான காரணத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. 

காலையில் எழுந்ததும், தன் காதலியைத் தேடிப் போனார் புலவர். மன்னர் கூறியதை அவளிடம் சொல்லி விட்டு, மன்னர் அப்படிக் கூறியதற்கான காரணத்தைத் தன்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதை அவளிடம் தெரிவித்தார்.

"இதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்?" என்றாள் காதலி.

"உனக்கு ஏதாவது தோன்றுகிறதா என்று பார்க்கத்தான்!"

"புலவரான உங்களுக்குத் தோன்றாத சிந்தனை, தமிழ் இலக்கியம் பயின்று வரும் மாணவியான எனக்கு எப்படித் தோன்றும்?" 

"நீ தமிழ் இலக்கியம் பயின்று வருகிறாயே! நீ படித்தவற்றில் இது போன்ற சிந்தனை ஏதாவது வந்திருந்தால், அதை நினைவுபடுத்திச் சொல்லேன்!"

"அப்படியானால், மன்னர் தான் எங்கோ படித்ததை வைத்துத்தான் இப்படிச் சொல்கிறார் என்று நினைக்கிறீர்களா?" என்றாள் அவள், சிரித்துக் கொண்டே.

"நீ சிரிப்பதைப் பார்த்தால், உனக்கு இதற்கு விடை தெரிந்திருக்கும் போலிருக்கிறதே!"

"நான் படித்ததும், மன்னர் படித்ததும், நீங்களும் படித்ததாகத்தானே இருக்கும்?"

புலவர் கையைச் சொடக்கியபடியே, "நான் உன்னைத் தேடி வந்த்து வீணாகவில்லை. நீ எனக்கு வழி காட்டி விட்டாய்!" என்று சொல்லியபடியே, அவளிடம் விடை பெற்று விரைந்தார்.

"என்ன புலவரே, நேற்று நான் சொன்னதற்கு விடை கண்டு விட்டீர்களா?  என்றான் அரசன்.

"கண்டு விட்டேன் அரசே! நிலவை என் காதலியின் முகத்துடன் ஒப்பிட்டது என் தவறுதான். நிலவு பலரும் காணும் வகையில் உலா வருகிறது. என் காதலியின் முக தரிசனம் எனக்கு மட்டுமே கிடைக்கக் கூடியது. எனவே, பலரும் காணும்படி தோன்றாமல் இருந்தால்தான், நிலவை என் காதலியின் முகத்துடன் ஒப்பிட முடியும்!"

"நன்று புலவரே! நான் கூறியபடி, இரு மடங்கு பரிசுத்தொகையை உங்களுக்கு அளிக்கிறேன்" என்று சொல்லியபடியே, பரிசுப்பையை எடுத்தான் அரசன்.

"வேண்டாம் மன்னரே! இது நான் சிந்தனை செய்து கண்டுபிடித்த கருத்தல்ல. திருவள்ளுவர் கூறிய கருத்துத்தான் இது. அதுவும், இதை நான் தேடிக் கண்டுபிடிக்க உதவியது என் காதலிதான்" என்றார் புலவர்.

"அதனால் என்ன, புலவரே? நாம் எந்தக் கருத்தைக் கூறினாலும், அது ஏற்கெனவே திருவள்ளுவர் கூறியதாகத்தான் இருக்கும்! விடை கண்டுபிடிக்க உங்களுக்கு உதவிய உங்கள் காதலிக்கே இந்தப் பரிசைக் கொடுத்து விடுங்கள்!" என்று சொல்லிப் பரிசுப்பையைப் புலவரிடம் அளித்தான் அரசன். 

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 112
நலம் புனைந்துரைத்தல்   

குறள் 1119
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.

பொருள்:
நிலவே! மலர் போன்ற கண்களை உடைய என் என் காதலியின் முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படி தோன்றாதே!

Read 'A Reward To the Lover!' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Friday, August 14, 2020

1118. என்னைக் கொஞ்சம் காதலி!

"என்னருமைக் காதலிக்கு, வெண்ணிலாவே!
நீ இளையவளா மூத்தவளா, வெண்ணிலாவே?"

"நல்லாவே பாடறே!"

மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு, கண்களை மூடியபடி, தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்த விக்ரம், திடுக்கிட்டுக் கண்விழித்து, குரல் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தான். 

மொட்டை மாடியில் வேறு யாரும் இல்லை. அத்துடன், குரல் எங்கோ மேலிருந்து வருவது போல் இருந்தது.

மேலே வானம்தானே இருக்கிறது! 

"நான்தானப்பா! என்னைப் பத்தித்தானே பாடிக்கிட்டிருந்த?"

யார் பேசுவது? நிலவா? அது எப்படி முடியும்?

வானத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த நிலவின் ஓரத்தை ஒரு மேகத் துகள் தொட்டுச் சென்ற நிகழ்வு, நிலவு அவனைப் பார்த்துக் கண்ணடிப்பது போல் இருந்தது.

"பாவம்! காதலி ஊருக்குப் போயிட்டா போல இருக்கு!"

இப்போது சந்தேகமே இல்லை. குரல் நிலவிலிருந்துதான் வருகிறது! 'இது எப்படி நடக்க முடியும்?' என்ற சிந்தனை மனதின் ஒரு ஓரத்தில் எழுந்ததைப் புறக்கணித்து விட்டு, "அது எப்படி உனக்குத் தெரியும்?" என்றான் விக்ரமன், நிலவைப் பார்த்து.

"அதுதான் நேத்து ராத்திரி விடைபெறும் படலம் நடந்ததே! திறந்த வெளியில இப்படியா நடந்துப்பீங்க! நானே சில காட்சிகளைப் பாக்க முடியாம, மேகத்தில போய் ஒளிஞ்சுக்க வேண்டி இருந்தது!" என்றது நிலவு.

விக்ரம் சங்கடத்துடன் நெளிந்தான். யாருமே இல்லை என்று நினைத்துத்தானே கொஞ்சம் தாராளமாக நடந்து கொண்டோம்!

"காதலி ஊருக்குப் போயிட்டதால, இப்ப தனிமையில வாடறீங்களோ?" என்றது நிலவு.

ஆமாம் என்பது போல், விக்ரம் அனிச்சையாகத் தலையை ஆட்டினான். அப்புறம்தான், தான் தலையாட்டியதை, அவ்வளவு தூரத்திலிருந்து நிலவால் பார்க்க முடியுமா என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது.

"உன் காதலி திரும்பி வர வரையிலும் என்னைக் காதலியேன்!" என்றது நிலவு.

விக்ரமன் பெரிதாகச் சிரித்து விட்டு, "அது மட்டும் முடியாது!" என்றான்.

"ஏன், நான் அழகா இல்லையா என்ன?" என்றது நிலவு.

"உன் அழகுக்கென்ன? வட்டமான முகம்! ஆனா..."

"ஆனா என்ன?"

"நேத்து என் காதலியைப் பாத்தியே, அவ முகத்தில எவ்வளவு ஒளி இருந்ததுன்னு பாத்திருப்பியே! அதில பாதி ஒளி கூட உன் முகத்தில இல்லையே!" என்றான் விக்ரம்.

கோபத்தினாலும், அவமானத்தினாலும், நிலவு சட்டென்று ஒரு பெரிய மேகத்துக்குள் தன் முகத்தை மறைத்துக் கொண்டது.

யாரோ தன்னை உலுக்குவதை உணர்ந்து, திடுக்கிட்டுக் கண் விழித்தான் விக்ரம்.

"ஏண்டா, மொட்டை மாடியில படுத்துத் தூங்காதேன்னு எவ்வளவு தடவை சொல்லி இருக்கேன்? சளி பிடிக்கும். எழுந்து உள்ள வா!" என்றாள் அவனை உலுக்கி எழுப்பிய அவன் அம்மா.

விக்ரம் சற்றுக் குழப்பத்துடன் வானத்தைப் பார்த்தான். மேகத்திலிருந்து தயக்கத்துடன் வெளியே வந்து கொண்டிருந்த நிலா, மங்கலான ஒளியை அவன் மீது வீசியது.
காமத்துப்பால்
களவியல் 

அதிகாரம் 112
நலம் புனைந்துரைத்தல்   

குறள் 1118
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.

பொருள்:
நிலவே! என் காதலியின் முகத்தைப் போல் உன்னால் ஒளி விட முடியுமென்றால், நீயும் என் காதலுக்கு உரியவள் ஆவாய்.

Read 'Love Me!' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Thursday, August 6, 2020

1117. புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே!

தன் நண்பனோடு விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்தது அரசி நந்தினியின் காதில் விழுந்து, அவளைக் கோபமடையச் செய்யும் என்று அரசன் கஜவர்மன் எதிர்பார்க்கவில்லை.

வெளியூரிலிருந்து வந்திருந்த தன் நண்பன் குலதீபனுடன், நந்தவனத்தில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தான் கஜவர்மன். 

ஒரு கட்டத்தில், பேச்சு பெண்களைப் பற்றித் திரும்பியது. புலவர்கள் பெண்களை எப்படியெல்லாம் வர்ணிக்கிறார்கள் என்பது பற்றி நண்பர்கள் இருவரும் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"பெண்களின் முகத்தை நிலவுக்கு ஒப்பிட்டுப் பேசுவதைப் போன்ற பொய் வேறு எதுவும் இல்லை. என் மனைவியின் முகம் நிலவைப் போன்று இருப்பதாக நான் எப்போதும் சொல்ல மட்டேன்" என்று சொல்லிச் சிரித்தான் கஜவர்மன்.

அப்போது, அருகில் செடிகளின் சல சலப்புச் சத்தம் கேட்டது. கஜவர்மன் திரும்பிப் பார்த்தபோது, நந்தினி வேகமாகப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தான், 

தன்னைத் தேடி நந்தவனத்துக்கு வந்த நந்தினி, தான் பேசியதைக் கேட்டுக் கோபித்துக் கொண்டு திரும்பிப் போய் விட்டாள் என்பது கஜவர்மனுக்குப் புரிந்தது. மனைவியை எப்படிச் சமாதானப்படுத்தப் போகிறோம் என்று கவலைப்படத் துவங்கினான் அவன்.

ண்பன் விடைபெற்றுப் போனதும், மனைவியைச் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன், அவளைத் தேடிச் சென்றான் கஜவர்மன். 

"நான்தான் அழகானவள் இல்லையே! என்னை ஏன் தேடி வந்தீர்கள்?" என்றாள் நந்தினி, கோபத்துடன்.

"நீ அழகில்லாதவள் என்று எப்போது சொன்னேன்?"

"என் முகம் நிலவுக்கு ஒப்பானது என்று எப்போதும் சொல்ல மாட்டேன் என்று சொன்னீர்களே, அதற்கு என்ன பொருள்?"

"உன் முகம் நிலவை விட அழகானது என்பதைத்தான் அப்படிச் சொன்னேன்!"

"பொய் சொல்லாதீர்கள்!" என்று சொல்லித் தன் அறைக்குள் போய் கதவைத் தாளிட்டுக் கொண்டாள் ந்ந்தினி.

கஜவர்மன் யோசனையில் ஆழ்ந்தான்.

றுநாள், அரசவையில் ஒரு நிகழ்ச்சி இருந்ததால், நந்தினி அரசவைக்கு வந்து, அரசனுக்குப் பக்கத்தில் இருந்த தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அரசனிடம் அவளுக்குக் கோபம் தணியவில்லை என்பதைக் காட்டிக் கொள்வது போல், அவனைப் பார்க்காமல், நேரே அவையைப் பார்த்தபடி அமர்ந்தாள்.

கஜவர்மனும் அவளிடம் பேச முயற்சி செய்யவில்லை.

ஆடல் பாடலுக்குப் பிறகு, புலவர்கள் தாங்கள் எழுதிய பாடல்களைப் பாடினர். ஆர்வமின்றிக் கேட்டுக் கொண்டிருந்த நந்தினி, ஒரு புலவர் பாடிய பாடலைக் கேட்டதும், வியப்படைந்தவளாகப் பக்கத்தில் இருந்த கணவனைத் திரும்பிப் பார்த்தாள்.

கஜவர்மன் அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான்.

"புலவரே! இப்போது நீங்கள் பாடிய பாடலின் பொருளைக் கூற முடியுமா?" என்றாள் நந்தினி.

"கூறுகிறேன், அரசியாரே! முழு நிலவு அரசியாரின் முகத்தைப் பார்த்து, அது தன் முகத்தை விட அழகாக இருக்கிறதே என்று நினைக்கிறது. தன் முகத்தில் இருக்கும் களங்கம்தான் தன் அழகைக் குறைத்துக் காட்டுகிறது என்று நினைத்து, அதைத் தேய்த்து அகற்றப் பார்க்கிறது. களங்கம் போகாததால், தினமும் தேய்க்கிறது. இதனால், அதன் முகமே கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து போகிறது. பிறகு, சிறிது சிறிதாக வளர்ந்து, முகம் முழுமை அடைகிறது. மீண்டும் இதே செயல் தொடர்கிறது." 

"நல்ல கற்பனை புலவரே உங்களுக்கு!" என்று மலர்ந்த முகத்துடன் புலவரைப் பாராட்டிய நந்தினி, "ஆமாம், இந்தப் பாடலை இதற்கு முன் வேறு எங்காவது பாடி இருக்கிறீர்களா?" என்றாள்.

"வேறு எங்கும் பாடவில்லை, அரசி. ஆயினும், இது தங்களைப் பற்றிய பாடல் என்பதால், அவையில் பாடுமுன், நேற்று மன்னரிடம் தனியே பாடிக் காட்டி, அவையில் பாட அவருடைஒப்புதலைப் பெற்றேன்" என்றார் புலவர். 

"ஓ, அப்படியா!" என்ற அரசி, கஜவர்மனைத் திரும்பிப் பாரத்துப் புன்னகை செய்தாள். 'புலவரின் பாடலைத்தான் நேற்று நீங்கள் குறிப்பிட்டீர்கள் என்று தெரியாமல், உங்களிடம் கோபப்பட்டு விட்டேனே' என்று அவனிடம் வருத்தம் தெரிவிப்பதாக இருந்தது அந்தப் புன்னகை.

வை நிகழ்ச்சிகள் முடிந்ததும், தனிமையில் இருந்த அரசனிடம் வந்த புலவர், "அரசே! நீங்களே ஒரு பாடல் எழுதிக் கொடுத்து, நான் எழுதியதாக அதை அவையில் பாடச் சொல்லி விட்டு, அதற்கு எனக்குப் பரிசும் அளித்திருக்கிறீர்களே!" என்றார்.

"புலவரே! பரிசு பாடலுக்கல்ல, நான் எழுதிக் கொடுத்த பாடலை நீங்களே எழுதியதாகப் பொய் சொல்லி அவையில் பாடி, அரசிக்கு என் மீது இருந்த கோபத்தைப் போக்கியதற்கு!" என்று சொல்லிச் சிரித்தான் கஜவர்மன்.

அரசன் சொன்னது புலவருக்கு விளங்கவில்லை!

காமத்துப்பால்
களவியல் 

அதிகாரம் 112
நலம் புனைந்துரைத்தல்   

குறள் 1117
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.

பொருள்:
தேய்ந்து, பிறகு தேய்ந்த பகுதிகள் படிப்படியாக நிறைவு பெறும் நிலவின் முகத்தில் உள்ளது போல், இந்தப் பெண்ணின் முகத்தில் களங்கம் உண்டோ, இல்லையே!

Read 'The Perplexed Poet' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Monday, August 3, 2020

1116. விண்மீன்களின் குழப்பம்!

"மொட்டை மாடியில் உக்காந்து பேசறது தனி சுகம்தான்."

"ஆமாம். ஆனா, இன்னிக்கு நிலா இருக்கே! நிலா இல்லாம இருட்டா இருந்தா, இன்னும் நல்லா இருந்திருக்கும்!"

"என்ன உளறரே? காதலர்கள் நிலா வெளிச்சத்தை விரும்பறதுதானே இயல்பு?"

"அது சரிதான். ஆனா, சில சமயம் வெளிச்சம் இடைஞ்சலா இருக்கே! இப்ப நான் உன்னைத் தொடணும்னா, அக்கம் பக்கத்து மாடிகள்ளேந்து யாராவது பாத்துடுவாங்களோன்னு பயந்துகிட்டே தொடணும். இருட்டா இருந்தா, கொஞ்சம் தைரியமாத் தொடலாமே!"

"ஐயே! மாடியிலேந்து பாக்கறப்ப, வானம், நிலா, நட்சத்திரங்கள் எல்லாம் எவ்வளவு அழாகா இருக்குன்னு பாக்கறதை விட்டுட்டு, அலையறதைப் பாரு!"

"சரிம்மா! வான இயல் ஆராய்ச்சியே பண்ணலாம். அதுக்குத்தானே மொட்டை மாடிக்கு வந்திருக்கோம்!"

"எனக்கு சின்ன வயசிலேந்தே வானத்தைப் பாக்கறதில ஆர்வம் உண்டு."

"எனக்குக் கூட! சின்ன வயசில நான் தெருவில நடக்கறப்பவே, மேலே பாத்துக்கிட்டுத்தான் நடப்பேன். என் நண்பர்கள் எல்லாம் 'டேய், தரையைப்பாத்து நடடா, பள்ளத்தில எங்கேயாவது விழுந்துடப் போறே!'ன்னு கிண்டல் பண்ணுவாங்க!"

"இப்ப, நீதான் என்னைக் கிண்டல் பண்ணிக்கிட்டிருக்க! இப்படியே பேசிக்கிட்டிருந்தேன்னா, நான் கீழே இறங்கிப் போயிடுவேன்."

"சாரி கண்ணே, கோவிச்சுக்காதே! இனிமே சீரியஸாவே பேசறேன். சொல்லு!"

"அங்கே ஒரு நட்சத்திரக் கூட்டம் தெரியுது பார்!"

"ஆமாம், ஏழு நட்சத்திரம். அதை சப்தரிஷி மண்டலம்னு சொல்லுவாங்க."

"கரெக்ட். பரவாயில்லையே! உனக்குக் கூட இதெல்லாம் தெரிஞ்சிருக்கே!"

"அதான் நான் அப்பவே சொன்னேனே, சின்ன வயசிலேயே நான் வானத்தைப் பாத்துக்கிட்டுத்தான் நடப்பேன்னு!"

"மறுபடி ஆரம்பிச்சுட்டியா? கொஞ்சம் நான் சொல்றதைக் கேளு! அந்த நட்சத்தரக் கூட்டத்தோட வால் பகுதி மாதிரி ஒண்ணு இருக்கில்ல?"

"ஆமாம்!"

"கொஞ்ச நேரம் கழிச்சுப் பாத்தா, அந்த வால் பகுதி இந்தப் பக்கமா திரும்பி இருக்கும்!"

"அப்படியா?"

"ஆமாம். நான் எத்தனையோ தடவை பாத்திருக்கேன்."

"ஆனா, நான் பாத்ததில்லையே! நான் பாக்கறப்ப அப்படி நடக்காதுன்னு நினைக்கிறேன்!" 

"அது எப்படி நடக்காம இருக்கும்? நீ ரொம்ப நேரம் பாத்திருக்க மாட்டே!"

"இல்லை. நான் எவ்வளவு நேரம் பாத்தாலும், அப்படி நடக்காது. ஆனா நீ பாத்தா, கண்டிப்பா நடக்கும்!"

"அது எப்படி?"

"இப்ப அந்த வால் பகுதி நிலாவுக்கு எதிர்ப்புறமா இருக்கு இல்ல?" 

"ஆமாம்."

"அப்படின்னா, அந்த நட்சத்திரக் கூட்டத்தோட முகம் நிலாவைப் பாத்துக்கிட்டு, அதை நோக்கிப் போற மாதிரி இருக்கு இல்லையா? ஏன் அப்படி?"

"ஏன்னா, அது இயற்கையா அப்படித்தான்!"

"எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு, காதலி! நட்சத்திரங்களுக்கு நிலாகிட்ட ஒரு ஈர்ப்பு இருக்கு. அதனாலதான், அந்த நட்சத்திரங்கள் நிலாவை நோக்கிப் போகத் தயாரா இருக்கு!"

"ஓஹோ!"

"இப்ப, அந்த நட்சத்திரங்கள் இன்னொரு நிலாவைப் பாத்தா எப்படி இருக்கும்?"

"வானத்தில ஒரு நிலாதானே!"

"வானத்தில ஒரு நிலாதான். ஆனா, இப்ப பூமியிலேந்து ஒரு நிலா தெரியுது, அதாவது என் காதலியோட முகம்! இப்ப, நட்சத்திரங்களுக்கு இது நிலாவா, அது நிலாவான்னு குழப்பம் வந்து, பூமியில தெரியற நிலாவைப் பாத்து, முகத்தை இந்தப் பக்கம் திருப்புது. அதனால, வாலும் திரும்புது! இது நீ இருக்கறப்பதான் நடக்கும். நான் இருக்கறப்ப எப்படி நடக்கும்?"

"டேய்! இது உனக்கே ரொம்ப ஓவராத் தெரியல?"

"ஓவரா? அங்க பாரு. ஒரு நட்சத்திரம் உன் முகத்தைப் பாத்துட்டு, உங்கிட்ட வரதுக்காகக் கீழே விழுந்துக்கிட்டிருக்கு பாரு!"

அவன் வானத்திலிருந்து விழுந்து கொண்டிருந்த ஒரு எரி நட்சத்திரத்தைக் காட்ட, அவள் பக்கத்திலிருந்த ஒரு சிறிய குச்சியை எடுத்து, அவன் கையில்  செல்லமாக அடித்தாள்.

காமத்துப்பால்
களவியல் 

அதிகாரம் 112
நலம் புனைந்துரைத்தல்   

குறள் 1116
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.

பொருள்:
வானத்தில் உள்ள விண்மீன்கள், நிலவுக்கும் இவள் முகத்துக்கும் வேறுபாடு தெரியாமல், தங்கள் நிலையில் இல்லாமல் குழம்பியபடி திரிகின்றன.

Read 'The Confused Stars' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Wednesday, July 22, 2020

1115. ஒடிவது போல் இடை இருக்கும்!

"ஆரவல்லி! ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?"

"ஒன்றுமில்லை!"

"என் மீது கோபமா? ஆஹா! கோபத்தில் உன் முகம் சிவந்திருப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது தெரியுமா?"

"போதும், போதும்! நன்றாக இருக்கிற என் முகத்துக்கு ஏதாவது ஆகி விடப் போகிறது!"

"ஏன் இப்படிச் சொல்கிறாய் ஆரவல்லி?"

"சில நாட்கள் முன்பு, என் கண்கள் தாமரைப்பூப் போல் என்று புகழ்ந்தீர்கள். மறுநாளே என் கண்ணில் தூசு விழுந்து, இரண்டு நாட்கள் கண் எரிச்சலால் துன்பப்பட்டேன்!"

"அது தற்செயலாக நடந்தது. ஏன், நான் உன் அழகைப் புகழ்ந்தால், என் கண்ணேறு பட்டு உனக்கு ஏதாவது நிகழ்ந்து விடும் என்று நினைக்கிறாயா?"

"உங்கள் கண்ணேறு பட்டதால் என்று சொல்லவில்லை. ஆனால் பாதிப்பு ஏற்படுவது உண்மைதான்!"

"ஒருமுறை நிகழ்ந்ததை வைத்து இப்படிச் சொல்வது நியாயமற்றதல்லவா? அதுவும் இது சில நாட்களுக்கு முன் நடந்தது. அதை ஏன் இப்போது குறிப்பிடுகிறாய்?"

"திரும்பத் திரும்ப நிகழ்ந்தால், குறிப்பிடாமல் என்ன செய்வது?'

"திரும்பத் திரும்ப நிகழ்ந்ததா? வேறென்ன நிகழ்ந்தது?"

"இரண்டு நாட்கள் முன், என் இடை ஒடிந்து விழப் போகும் கொடி போல், என் உடலின் மையப் பகுதியில் ஒரு புள்ளியில் ஒட்டிக் கொண்டிருப்பதாகச் சொன்னீர்கள்!"

"ஆமாம், அதற்கென்ன? உண்மைதானே அது? இதோ பார், எப்படி என் ஒரு உள்ளங்கைக்குள் அடங்குகிறது பார் உன் இடை!"

"உஸ்! தொடாதீர்கள். ஏற்கெனவே வலியால் துடித்துக் கொண்டிருக்கிறேன்."

"வலியா? ஏன்? நான் நீவி விடட்டுமா?"

"ஐயே! தொட்டாலே வலிக்கும் என்று பயப்படுகிறேன். நீவி விடுகிறாராம்! ஆசையைப் பார்!"

"அதில்லை, ஆரவல்லி. உன் வலி குறைய வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னேன். என்ன ஆயிற்று உன் இடைக்கு? சுளுக்கா?"

"என்னவென்றே தெரியவில்லை. காலையில் குளித்து விட்டு அலங்காரம் செய்து கொண்ட சற்று நேரத்துக்கெல்லாம் திடீரென்று இடுப்பு வலிக்க ஆரம்பித்து விட்டது. என்னவென்றே தெரியவில்லை. என் அம்மா தைலம் கூடத் தடவி விட்டார்கள். ஆனாலும் வலி குறையவில்லை."

"வலியுடன் கூட இந்த வல்லபனைப் பார்க்க வந்திருக்கிறாயே, உன் காதலுக்குத் தலை வணங்குகிறேன்."

வல்லபன் அவளை ஏற இறங்கப் பார்த்தான்.

"ஏன் அப்படி என்னை உற்றுப் பார்க்கிறீர்கள்?"

"உன் தோற்றத்திலிருந்து உன் வலியின் காரணம் என்னவென்று கண்டு பிடிக்க முடியுமா என்று பார்க்கிறேன்."

"வலி என் இடையில். நீங்கள் பார்ப்பது என் தலையை. உங்கள் தலைக்குள் இருப்பது என்னவென்று எனக்குப் புரியவில்லை!"

"என் தலைக்குள் கொஞ்சம் விஷயம் இருப்பதால்தான், விஷயம் உன் தலையில் என்று புரிந்து கொள்ள முடிந்தது."

"என் தலையிலா?"

"ஆமாம். தலையில் என்ன பூ சூட்டிக் கொண்டிருக்கிறாய்?"

"அனிச்சம் பூவைத்தான். எதற்குக் கேட்கிறீர்கள்? இருங்கள். ஏன் தலையிலிருந்து பூவை எடுக்கிறீர்கள்?"

வல்லபன் அவள் தலையிலிருந்து எடுத்த பூச்சரத்தில் காம்புகளைக் கிள்ளி எந்து விட்டுப் பூச்சரத்தை மீண்டும் அவள் தலையில் வைக்கப் போனான்.

"இருங்கள். எப்படி என்று தெரியவில்லை, ஆனால் நீங்கள் பூவை எடுத்ததும் இப்போது இடுப்பு வலி போய் விட்டது போல் இருக்கிறது. மறுபடி வைக்க வேண்டாம்."

"இப்போது ஒன்றும் ஆகாது. அதுதான் காம்புகளைக் கிள்ளி விட்டேனே!" என்று சொல்லிப் பூவை மீண்டும் அவள் தலையில் சூட்டினான் வல்லபன். தொடர்ந்து, "அனிச்சம் பூவின் காம்புகளைக் கிள்ளாமல் உன் தலையில் சூட்டிக் கொண்டு விட்டாய். காம்புகளின் எடை தாங்காமல்தான் உன் இடை நொந்து விட்டது!" என்றான்.

"நீங்கள் சொல்வது நான் நம்பக் கூடியதாக இல்லை. ஆனாலும் இப்போது வலி போய் விட்டது என்பது உண்மைதான்!" என்றாள் ஆரவல்லி, அவனைப் பார்த்துச் சிரித்து.

"இனிமேல் உன் இடையை நான் புகழப் போவதில்லை. அப்புறம் அதனால் ஏதாவது ஆகி விட்டது என்பாய்! உன் இடையின் மென்மையை என் கையால் உணர்வதோடு நிறுத்திக் கொள்கிறேன்" என்று சொல்லி, அவள் இடையைத் தன் உள்ளங்கையால் பற்றினான் வல்லபன். 

ஆரவல்லி அவனைத் தடுக்கவில்லை.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 112
நலம் புனைந்துரைத்தல்   

குறள் 1115
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.

பொருள்:
இவள் தன் மென்மையை உணராமல், அனிச்சம் பூவைக் காம்பு களையாமல் சூடிக் கொண்டு விட்டதால், அதன் எடை தாங்காமல் இவள் இடை நொந்து விட்டது. அதனால், இவள் இடைக்கு இனி பறைகள் நல்லவிதமாக ஒலிக்க மாட்டா.

Read 'What Caused the Pain?' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Friday, July 17, 2020

1114. கம்ப ரசம்!

"இந்த அழகிய நந்தவனத்தில், ஒரு அரசகுமாரனின் கையைப் பற்றியபடி பெருமையாக நடந்து கொண்டிருக்காமல், இந்த ஏழைப் புலவனுடன் நடந்து கொண்டிருக்கிறோமே என்று என்றைக்காவது வருத்தப்பட்டிருக்கிறாயா?"

"அரசகுமாரி அமராவதியே ஏழைப் புலவனான அமராவதியைத்தானே காதலித்தாள்?"

"நன்றாகப் பேசுகிறாய்! இரு..இரு.. அந்தப் பக்கம் போக வேண்டாம்."

"ஏன்? அங்கு பலமுறை போயிருக்கிறோமே! நேற்று கூடப் போனோமே!"

"அங்கே குவளை மலர்கள் இருக்கின்றன."

"இருந்தால்?"

"நேற்று நாம் அங்கே போனபோது, குவளை மலர்கள் கொஞ்சம் தலையைத் தாழ்த்திக் கொண்டு இருந்தது போல் தோன்றியது."

"மலர்கள் எப்படித் தலையைத் தாழ்த்திக் கொள்ளும்? செடிகள் காற்றில் ஆடியதாலோ, மலர்களின் எடையினால் கிளைகள் கீழே சாய்ந்திருந்ததாலோ, அப்படித் தோன்றி இருக்கலாம். சரி, அதற்கும் நாம் அங்கே செல்வதற்கும் என்ன தொடர்பு?"

"சொல்கிறேன். நேற்று, கம்ப ராமாயணத்தில் ஒரு கவிதை படித்தேன். அதற்குப் பிறகுதான், எனக்கு ஒரு விஷயம் புரிந்தது."

"என்ன படித்தீர்கள்? என்ன புரிந்தது?'

"கம்பர் மருத நிலத்தின் அழகை வர்ணிக்கிறார். ஒரு அரசவையில் நடன நிகழ்ச்சி நடக்கும் அல்லவா? அது போல், மருத நிலம் அரசரைப் போல்  வீற்றிருக்க, அரசவையில் மயில்கள் நடனம் ஆடுகின்றன. தாமரை மலர்கள் விளக்குகளைத் தாங்கி நிற்பது போல் தோற்றமளிக்கின்றன. மேகங்கள் முழவு போல் இசைத்துத் தாளமிடுகின்றன. வண்டுகள் யாழிசை போல் இனிமையாக ரீங்கரிக்கின்றன."

"ஆகா! அருமையான வர்ணனை! புலவரைக் காதலிப்பதால்தானே இப்படிப்பட்ட காவிய ரசங்களைப் பருக முடிகிறது!"

"கம்பர் இன்னொன்றும் சொல்கிறார். இந்த இசை நடனக் காட்சியை வேறு சில பார்வையாளர்களும் பார்க்கிறார்கள் என்கிறார்."

"யார் அந்தப் பார்வையாளர்கள்? "

"குவளை மலர்கள்! 'குவளை கண் விழித்து நோக்க' என்ற வரியைப் படித்ததும்தான், எனக்கு ஒன்று தோன்றியது."

"என்ன தோன்றியது?"

"ஒருவேளை, குவளை மலர்களால் பார்க்க முடிந்தால்?"

"பார்க்க முடிந்தால்?"

"இந்த நந்தவனத்தில் குவளை மலர்கள் இருக்கும் பகுதிக்கு நாம் போனபோது, அவை உன் கண்களைப் பார்த்து விட்டு, 'அடாடா! புலவர்கள் பெண்களின் கண்களை நம்முடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள். ஆனால், இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக மாட்டோமே!' என்று நினைத்து, வெட்கித் தலை குனிந்திருக்கும். அதனால்தான், உன்னை அங்கே போக வேண்டாம் என்றேன்."

"போங்கள்!" என்று சொல்லிக் குவளையை மிஞ்சும் அழகு கொண்ட தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள் அரசகுமாரி.  

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 112
நலம் புனைந்துரைத்தல்   

குறள் 1114
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.

பொருள்:
குவளை மலர்களுக்குக் காணும் சக்தி இருந்தால், அவை இவள் கண்களைப் பார்த்து, இவளுடைய கண்களுக்குத் தாம் ஒப்பாகவில்லையே என்று நினைத்துத் தலை குனிந்து நிற்கும்.

Read 'Don't Go There' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Thursday, July 16, 2020

1113. கனவில் வந்த உருவம்

"ஆமாம், எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு ஜி ஆர் ஈ எழுதி, அமெரிக்கா போய்ப் படிக்கணும்? பேசாம, பி.ஈ முடிச்சப்பறம், இங்கேயே ஒரு நல்ல வேலை தேடிக்கிட்டு, இந்தியாவிலேயே செட்டில் ஆயிடலாமே!" என்றான் ரவீந்திரன்.

"ஏன் திடீர்னு இப்படிச் சொல்ற? ரெண்டு வருஷமா அமேரிக்கா அமெரிக்கான்னு புலம்பிக்கிட்டிருந்த?" என்றாள் வீணா.

"இந்த ஜி ஆர் ஈ பரீட்சைக்குத் தயார் செய்யறதை நினைச்சாத்தான் இப்படித் தோணுது! புதுசு புதுசா இங்கிலீஷ் வார்த்தை கத்துக்க வேண்டி இருக்கு. 3000 வார்த்தையாவது கத்துக்கணும்கறாங்க. நாம இன்னும் 300 வார்த்தை கூட முழுசாக் கத்துக்கல."

"அதுக்குத்தானே வேர்ட் லிஸ்ட் படிச்சுக்கிட்டிருக்கோம்? ஏ, பி சி டின்னு வரிசையா ஆரம்பிச்சு, இப்ப 'சி'யில இருக்கோம். அதுக்குள்ளே அலுத்துக்கிட்டா எப்படி? தனியாப் படிச்சா கஷ்டமா இருக்கும்னுதானே, நாம ரெண்டு பேரும் சேந்து படிக்கறோம்? அதுவே உனக்குக் கஷ்டமா இருக்கா?"

"சேர்ந்து படிக்கறதில, முதல் பாதி நல்லா இருக்கு! உன்னோட சேர்ந்து இருக்கறதில எனக்கென்ன கஷ்டம்? படிக்கறதிலதான் கஷ்டம்!" என்றான் ரவீந்திரன் சிரித்தபடி, அவள் தோளில் கை வைத்து.

"கையை எடு முதல்ல" என்று சிரித்தபடியே அவன் கையைத் தன்  தோளிலிருந்து அகற்றிய வீணா, "அடுத்த வார்த்தை என்ன பாரு!" என்றாள். 

"Collage-ன்னு போட்டிருக்கு. College-ங்கற வார்த்தை தப்பா பிரிண்ட் ஆகி இருக்குமோ?" என்றான் ரவீந்திரன்.

"உளறாதே! Collage-ன்னா பல பொருட்களால் உருவாக்கப்பட்ட கலை வடிவம்னு அர்த்தம். இதை 'கொலாஷ்'னு உச்சரிக்கணும். நானே 'கொலாஷ்' பெயின்ட்டிங் எல்லாம் பண்ணி இருக்கேனே!"

"ஓ! ஒரு பேப்பர்ல ரெண்டு மூணு கலரைக் கொட்டி, அது மேல ஏதோ கந்தத் துணியெல்லாம் ஒட்ட வச்சு, கலைன்னு சொல்லி, ஏதோ கொலை பண்ணுவியே, அதுவா?"

"வொகாபுலாரியிலதான் பூஜ்யம்னா, கலையை ரசிக்கறதிலியுமா?"

"சாரிம்மா, கலையரசி! கல்யாணத்துக்கப்புறம், கண்டிப்பா உன்னோட கலைக் கொலையை எல்லாம் ரசிப்பேன். இப்ப என்னை முறைக்காதே. அடுத்த வார்த்தைக்குப் போகலாமா? நீயே படிச்சுடு!"

புத்தகத்தைப் பார்த்த வீணா, "Collage-க்கு முன்னால சில வார்த்தைகளை   விட்டுட்டியே!" என்றாள்.

"நாங்கள்ளாம் அப்படித்தான். ஸ்கிப் பண்ணி, ஸ்கிப் பண்ணித்தான் படிப்போம். ஸ்கிப் பண்ணினது ஏதாவது பரீட்சையில் வந்தா, சாய்ஸ்ல விட்டுடுவோம்!"  

"ஜி ஆர் ஈ யில சாய்ஸ்லாம் கிடையாது. அப்புறம் அமெரிக்கா போற ஆசையையே சாய்ஸ்ல விட வேண்டியதுதான்! சரி. கொஞ்சம் சீரியஸாப் படிக்கலாம். நீ விட்ட இடத்திலேந்து ஆரம்பிக்கலாம். Chimera. அர்த்தம் தெரியுமா? Camera-ங்கற வார்த்தையை தப்பா பிரிண்ட் பண்ணி இருப்பாங்கன்னு சொல்லாதே!"

"புஸ்தகம் உன்கிட்டத்தானே இருக்கு. நீயே அர்த்தம் பார்த்துச் சொல்லு."

"Chimera-ன்னா பல மிருகங்களோட உடல் உறுப்புகளைச் சேர்த்து உருவான ஒரு கற்பனை மிருகம். இதை 'கிமரா'ன்னு உச்சரிக்கணும்."

"இதுவும் ஒரு மாதிரி 'கொலாஷ்'தான் போலருக்கு."

"'கொலாஷ்'ங்கறது ஒரு அழகான கலை வடிவம். பல மிருகங்களோட உறுப்புகளை சேத்து உருவாக்கின 'கிமரா' பாக்கறதுக்கு நல்லாவா இருக்கும்?பயங்கரமாவோ, அருவருப்பாவோ இருக்காது?"

"ஏன், அழகான உருவமா கூட உருவாக்கலாம்! என்னை மாதிரி நல்ல கலைஞன் படைச்சா, அழகாத்தான் இருக்கும்" என்றான் ரவீந்திரன்.

"சரி. இன்னிக்கு உனக்கு மூடு சரியில்லைன்னு நினைக்கறேன். ஒரு மாதிரியாவே பேசிக்கிட்டிருக்க. இன்னிக்குப் போதும். நாளைக்குத் தொடரலாம்" என்றாள் வீணா, புத்தகத்தை மூடியபடி. 

"நீ புத்தகத்தை மூடினவுடனே, எனக்கு மூடு வந்துடுச்சு - உன்னோட பேசிக்கிட்டிருக்க!"

"முதல்ல இடத்தைக் காலி பண்ணு!" என்றாள் வீணா.

றுநாள். இருவரும் படிப்பதற்காகச் சந்தித்தபோது, "வீணா! சொன்னா நம்ப மாட்ட. நேத்திக்கு நான் கனவிலே 'கிமரா' மாதிரி ஒரு உருவத்தைப் பாத்தேன். ஆனா, அது ஒரு பெண்ணோட உருவம்!" என்றான் ரவீந்திரன். 

"'கிமரா' மாதிரின்னா, அப்புறம் எப்படி அது ஒரு பெண் உருவமா இருக்கும்?" என்றாள் வீணா.

"பெண்தான். ஆனா, அவ தோள் மூங்கில் மாதிரியிருந்தது. உடம்பு ஒரு பசுமையான கொடி மாதிரி இருந்தது. பல்லெல்லாம் முத்து மாதிரி இருந்தது. கண்ல கருகருன்னு மை தீட்டி, ஈட்டி மாதிரி கூர்மையா இருந்தது. அவ உடம்பிலேந்து ஒரு நறுமணம் வேற வந்தது."

"ஐயோ! கண்றாவியா இருக்கு. 'கிமரா'ங்கரா வார்த்தையைப் படிச்சதால, இப்படி ஒரு உருவம் உன் கனவிலே வந்திருக்கு போலருக்கு."

"இல்ல வீணா! அந்தப் பொண்ணு ரொம்ப அழகு. அதோட. அவளை நான் முன்னாடியே பாத்திருக்கேன்."

"பாத்திருக்கியா? யார் அந்த அழகி? எனக்குத் தெரியுமா அவளை?" எனறாள் வீணா, சற்றுப் பட்டத்துடன். 

"உனக்கு அவளைத் தெரியுமாங்கறது எனக்கு எப்படித் தெரியும்? அவ ஃபோட்டோ என் மொபைல்ல இருக்கு. காட்டறேன். உனக்குத் தெரிஞ்சவாளான்னு பாரு!" என்றபடியே, தன் கைபேசியை எடுத்தான் ரவீந்திரன்.

'மொபைல்ல அவ ஃபோட்டோ வேற வச்சிருக்கியா? இரு இரு. உனக்கு இருக்கு இன்னிக்கு!' என்று மனதில் கறுவிக் கொண்டாள் வீணா.

ரவீந்திரன் அவன் மொபைலில் காட்டிய தன்னுடைய புகைப்படத்தைப் பார்த்ததும், வீணாவின் முகத்திலிருந்த கடுகடுப்பு களிப்பாக மாறியது.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 112
நலம் புனைந்துரைத்தல்   

குறள் 1113
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

பொருள்:
மூங்கில் போன்ற தோள்களை உடைய இவளுடைய மேனியோ இளம் தளிர், பல்லோ முத்து, உடல் மணமோ நறுமணம், மை உண்ட கண்களோ வேல்!

Read 'The Chimera that Appeared in the Dream' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Friday, July 10, 2020

1112. பூவெல்லாம் உற்றுப் பார்!

"டேய்! ஸ்கூட்டரை நிறுத்து!" என்றான் காமேஷ்.

"எதுக்குடா?" என்று கேட்டபடியே, ஸ்கூட்டரை நிறுத்தினான் முத்து.

"இரு நிமிஷம் இரு!" என்ற காமேஷ், அந்தப் பெரிய வீட்டின் வெளிப்புறச் சுவர் அருகே சென்று, குதிகாலை உயர்த்தி, சுவற்றுக்குப் பின்னே தெரிந்த வீட்டின் முன்புறத் தோட்டத்தை எட்டிப் பார்த்தான்.

"என்னடா பாக்கற? யாராவது பாத்தா, தப்பா நினைக்கப் போறாங்க!" என்று முத்து பதட்டத்துடன் சொல்லிக் கொண்டிருந்தபோதே, வீட்டின் கேட் அருகே அமர்ந்திருந்த வாட்ச்மேன் ஓடி வந்து, "யாருப்பா அது? எதுக்கு அங்கே எட்டிப் பாக்கற?" என்றான்.

"ஒண்ணுமில்ல. பூவெல்லாம் அழகா இருந்தது. அதைத்தான் பாத்தேன். உள்ள வந்து பாக்கலாமா?" என்றான்.

"போப்பா இங்கேந்து! ஓனர் பாத்தா என்னைத்தான் திட்டுவாரு" என்றான் வாட்ச்மேன், படபடப்புடன். 

"வாடா! போகலாம். என்ன இது பைத்தியக்காரத்தனம்! நீ என்ன பூக்களையே பாத்ததில்லையா என்ன?" என்றான் முத்து, கடிந்து கொள்ளும் குரலில். 

"மீனா! இனிமே ஊருக்கெல்லாம் எங்கேயும் போயிடாதே! நீ ஊர்ல இல்லேன்னா, உன் காதலனைச் சமாளிக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு!" என்றான் முத்து, காமேஷைப் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்து சிரித்தபடி. 

காமேஷ் எதுவும் சொல்லாமல் சிரித்தான்.

"ஏன், என்ன பண்ணினான் உன் நண்பன்?" என்றாள் மீனா, சிரித்தபடி. 

"அதுக்கு முன்னால, உன்னை ஒரு கேள்வி கேக்கணும். உனக்கு ஏன் மீனான்னு பேர் வச்சாங்க? உன் கண் மீன் மாதிரி இருக்குன்னா? எனக்கு ஒண்ணும் அப்படித் தெரியலியே!" என்றான் முத்து. 

"என்னைக் கிண்டல் பண்றதை அப்புறம் வச்சுக்கலாம். விஷயத்தைச் சொல்லு. என் காதலனைப் பத்தி ஏதோ புகார் சொல்ல வந்தியே!"

"இலக்கியத்தில, பெண்களோட கண்ணை குவளை மலர் மாதிரின்னு வர்ணிப்பாங்க, படிச்சிருக்கேன். கடவுளை வர்ணிக்கச்சே கூட, சில சமயம் தாமரைப் பூ மாதிரி கண்ணுன்னு சொல்லுவாங்க. அரவிந்தலோசனன், பத்மலோசனி மாதிரி பேர் எல்லாம் இருக்கே! ஆனா, உன் காதலனுக்கு, உன் கண்ணைப் பாத்தா, சின்னப்பூ மாதிரி இருக்காம். அதனால, நீ இல்லாதப்ப, எங்கேயாவது பூச்செடியைப் பாத்தா, உடனே அது கிட்ட போய், அதில இருக்கற பூக்களைப் பாத்துக்கிட்டே நிக்கறான். என்னால சமாளிக்க முடியல!" 

மீனா முகமலர்ச்சியுடன் காமேஷைப் பார்த்தாள். சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் அவள் மனதில் நிழலாடியது. 

"மீனா! நீ பூ பாத்திருக்கியா?" என்றான் காமேஷ்.

"என்ன கேள்வி இது? உன் லெவலுக்கே இது முட்டாள்தனமான கேள்வியாத் தோணல?" என்றாள் மீனா.

"அப்படின்னா, அது எப்படி இருக்கும்னு சொல்லு பாக்கலாம்!"

"பாட்டனியில, பூவோட படம் போட்டு பாகங்களைக் குறிக்கச் சொல்லுவாங்க. அது மாதிரி இருக்கு உன் கேள்வி!"

"பூவுக்கு நடுவில சின்னாதா மொக்கு மாதிரி இருக்கும். பூவோட இதழ்கள் அதைப் பாதுகாக்கற மாதிரி அதைச் சுத்தி  இருக்கும்."

"ரொம்ப மொக்கையா இருக்கு இது!"

மீனாவின் இரு கண்களையும் தன் இரு கை விரல்களால் பிரித்தபடி பிடித்த காமேஷ், "உன் கண்மணியை உன் இமை இதழ் மாதிரி மூடிக்கிட்டிருக்கறதைப் பாத்தா, உன் கண்ணே ஒரு சின்னப்பூ மாதிரிதான் இருக்கு!" என்றான். 

"போடா!" என்று மீனா சிணுங்கினாலும், அவன் அவள் கண்களைப் பிடித்துக் கொண்டு அப்படிச் சொன்னது அவளுக்கு ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.   

"என்ன மீனா! நான் கேட்டதுக்கு பதிலே சொல்லாம, உன் காதலன் மூஞ்சியையே பாத்துக்கிட்டிருக்க!" என்றான் முத்து.

முத்துவிடம் திரும்பிய மீனா, "முத்து! நீ பூன்னு சொன்னதும், எனக்கு பூஜைங்கற வார்த்தை ஞாபகம் வந்தது. பூஜை வேளையில கரடின்னு ஏதோ சொல்வாங்களே!" என்று சொல்லிச் சிரித்தாள்.

"மன்னிச்சுக்கம்மா, மல்லிகைப் பூவே! உன்னைத் தோட்டக்காரன் தனியா கவனிச்சுக்க விடாம, நான் குறுக்க நிக்கறது தப்புதான். நான் வரேன். டேய், காமேஷ்! பூவை ஜாக்கிரதையாய் பாத்துக்கடா!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் முத்து.  

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 112
நலம்புனைந்துரைத்தல்   

குறள் 1112
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.

பொருள்
நெஞ்சே! இவள் கண்கள் எல்லோரும் கண்டு மகிழும் மலர்களைப் போல் இருப்பதால், இவள் கண்களை ஒத்த மலர்களைக் கண்டு, நீ அவற்றை இவள் கண்கள் என்று நினைத்து மயங்குகிறாய்!

Read 'Oh, Little Flower' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Sunday, July 5, 2020

1111. தொட்டால் மலரும் பூ!

"இத்தனை நாளா என்னைக் காதலிச்சப்ப நீ இருந்ததுக்கும், இப்ப கல்யாணம் ஆனப்புறம் இருக்கறதுக்கும் ஒரு வித்தியாசம் தெரியுதே!" என்றாள் சரளா.

"என்ன வித்தியாசம்? என் அன்பு குறைஞ்சுட்ட மாதிரி இருக்கா, இல்ல, அதிகமாயிட்ட மாதிரி இருக்கா?" என்றான் வேலன்.

"உன் அன்பு அப்படியேதான் இருக்கு. ஆனா, உன்னோட அக்கறை கொஞ்சம் அதிகமாயிட்ட மாதிரி இருக்கு!"

"எப்படிச் சொல்ற?"

"நடக்கறப்ப நான் கொஞ்சம் சாஞ்சா கூட, கீழே விழுந்துடப் போறேனோன்னு பயந்து, உடனே தாங்கிப் பிடிக்கற. மரத்திலேந்து ஒரு இலை என் மேல விழுந்ததும், அதை உடனே தூக்கிப் போட்டுட்டு, இலை விழுந்த இடத்தை வாயால ஊதினே, ஏதோ காயம் பட்டுட்ட மாதிரி!"

"ஆமாம். நீ சொல்றது சரிதான். உன் மேல எனக்கு இருக்கற அக்கறை முன்னை விட இப்ப அதிகமாயிட்டது உண்மைதான்!"

"ஏன் திடீர்னு இந்த அதிக அக்கறை?"

"திடீர்னு ஒண்ணும் இல்ல. நேத்து ராத்திரிதானே உன்னை நான் முழுசாத் தெரிஞ்சுக்கிட்டேன்!"

"சீ, போ! வெக்கமில்லாம! அதுக்கும், நீ என் மேல அதிகமா அக்கறை காட்டறதுக்கும் என்ன சம்பந்தம்?"

"நீ எவ்வளவு மென்மையானவன்னு நேத்திக்குத்தானே புரிஞ்சுக்கிட்டேன்! அதனாலதான், உன்னை ரொம்ப கவனமாப் பாத்துக்கணும்னு நினைக்கறேன்."

"மென்மையானவள்னா, எவ்வளவு மென்மையானவளா இருக்கேன்னு சொல்ல முடியுமா?"

"'பாலிலும் வெண்மை, பனியிலும் மென்மை'ன்னு கண்ணதாசன் பாடி இருக்காரே அப்படின்னு சொல்லலாம்."

"அவர் சொன்னது ஒரு வெகுளிப் பெண்ணோட குணத்தைப் பத்தி, நீ சொல்ற அர்த்தத்தில இல்ல."

"அவரு எந்த அர்த்தத்தில் சொல்லி இருந்தாலும், நான் சொல்ற அர்த்தத்தில் இருக்கறதா வச்சுக்கறேன். சரி, அது வேண்டாம்னா, வேற என்ன சொல்லலாம்? பூ மாதிரி மென்மைன்னு சொல்லலாம். எல்லாப் பூவிலேயும், அனிச்சம்பூ ரொம்ப மென்மையாம். அதை முகர்ந்து பாத்தாலே வாடிடுமாம். அவ்வளவு மென்மை அது! அதை விட அதிக மென்மை உள்ளவ நீ! ஆனா, ஒரு வித்தியாசம்!"

"என்ன வித்தியாசம்?"

"கிட்ட நெருங்கினா, அனிச்சம்பூ வாடிடும். ஆனா, உன்னை நெருங்கினா, நீ இன்னும் அதிகமா மலர்வே! அதுதானே என்னோட அனுபவம்!" என்றான் வேலன்.

சரளாவின் சிரிப்பில் பூவின் மலர்ச்சி தெரிந்தது. 

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 112
நலம் புனைந்துரைத்தல்   

குறள் 1111
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.

பொருள்
அனிச்சம்பூவே! நீ மிகவும் மென்மை கொண்டிருக்கிறாய். நீ வாழ்க! ஆயினும், நான் விரும்பும் காதலி உன்னை விடவும் மென்மை கொண்டவள்.

Read 'The Flower that Blossoms by Touch' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Wednesday, July 1, 2020

1110. லதாவின் கவலை!

லதா முதன் முதலாக சேகரின் வீட்டுக்கு வந்தபோது, அவன் வீட்டில் பல இடங்களிலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்து விட்டு, "என்ன, இப்படி வீடு முழுக்க புத்தகங்களைப் போட்டு வச்சிருக்கீங்க? பழைய பேப்பர் கடை மாதிரி இருக்கு!" என்றாள்.  

"என் அம்மா சொல்ற மாதிரியே சொல்றியே!" என்றான் சேகர். "என் வீடு சின்ன வீடுதான். அதில இத்தனை புத்தகங்களை ஒரே இடத்தில வைக்கற மாதிரி இடம் இல்லை. அதனாலதான், நிறைய இடங்கள்ள வச்சிருக்கேன்" என்றான், தொடர்ந்து.

லதாவின் மனதில் மெலிதாக ஒரு கவலை எழுந்தது. 

"ங்க வீட்டுக்கு முதல் தடவையா வந்தப்ப, உங்களைக் கல்யாணம் செஞ்சுக்கணுங்கற என் முடிவு சரிதானான்னு எனக்கு ஒரு கவலை வந்தது" என்றாள் லதா, சேகரின் தலையைக் கோதியபடி.

"ஏன், வீடு ரொம்ப சின்னதா இருக்கேன்னு பாத்தியா?"

"அதைப் பத்தி இல்ல. வீடு பூரா இருந்த புத்தகங்களைப் பாத்து!"

"ஏன்? புத்தகங்கள் எல்லா இடங்களையும் ஆக்கிரமிச்சுக்கறதால உன்னோட பொருட்களை வைக்க இடம் இருக்காதுன்னு பயந்தியா?"

"இவ்வளவு புத்தகங்கள் படிச்சும் இப்படி மக்கா இருக்கீங்களே!" என்று செல்லமாக சேகரின் தலையில் குட்டினாள் லதா. "'இவரு ஒரு புத்தகப் புழுவா இருப்பாரு போலருக்கே, இவருக்கு என்னை கவனிக்க நேரம் இருக்குமா?'ன்னு கவலைப்பட்டேன்."

"ஆனா, இப்ப?"

"இப்பவா?" என்று அவன் முகத்தைப் பார்த்துக் கையால் பிடித்தபடி சிரித்த லதா, "'என்னைக் கொஞ்சறதைத் தவிர இவருக்கு வேற வேலையே இல்லையா'ன்னு நான் நினைக்கிற அளவுக்கு என்னைத் திணற அடிக்கறீங்க!" என்றாள். சற்றே வெட்கத்துடன். 

"என்னைப் பொருத்தவரையிலும் நீயும் ஒரு புத்தகம்தான். புத்தகங்களைப் படிச்சா அறிவு வளரும்னு சொல்லுவாங்க. ஆனா, நான் ஒரு புத்தகத்தைப் படிச்சா, நமக்குத் தெரியாத விஷயங்கள் இவ்வளவு இருக்கேன்னு பிரமிப்புதான் எனக்கு ஏற்படும். நீ சொன்னியே அது மாதிரி, இதெல்லாம் தெரியாம இப்படி ஒரு மக்கா இருக்கேனேன்னு நினைச்சுப்பேன். இன்னும் நிறையப் படிக்கணும்னு ஆசை வரும். ஒவ்வொரு தடவை உன்னைப் படிக்கறப்பவும், ஒரு புதுப் புத்தகத்தைப் படிக்கிற மாதிரி பிரமிப்பாதான் இருக்கு. திரும்பத் திரும்பப் படிக்கணும் போல இருக்கு. இவகிட்ட இன்னும் எவ்வளவோ இருக்கும் போலருக்கேன்னு நினைக்க நினைக்க, உன் மேல் காதல் அதிகமாகிக்கிட்டேதான் இருக்கு!" என்று சொல்லி அவளை இறுக அணைத்தான் சேகர். 

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்  

குறள் 1110
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

பொருள்
 செந்நிற அணிகலன்களை அணிந்திருக்கும் இவளோடு கூடும்போது ஏற்படும் காதல், நூல்களை படித்துப் பொருள் அறிய அறிய, அறியாதவற்றை உணர்வது போல் உள்ளது.

Read 'The Bookworm' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...