Monday, August 24, 2020

1120. மலரும் முள்ளாகும்!

"அங்கே ஒரு அழகான தோட்டம் இருக்கிறதே, அங்கே போகலாமா?" என்றாள் மலர்க்கொடி.

"போகலாம். ஆனால் நாம் அங்கே போனால், அங்கே இருப்பவர்கள் எல்லாம் தோட்டத்தின் அழகை ரசிப்பதை விட்டு விட்டு உன் அழகை ரசிக்க ஆரம்பித்து விடுவார்களே!" என்றான் மணிவண்ணன்.

"நீ இப்படியெல்லாம் பேசுவதாக இருந்தால் இனி உன்னுடன் எங்கும் வர மாட்டேன். இப்போதே வீட்டுக்குப் போகிறேன்!" என்றாள் மலர்க்கொடி பொய்க் கோபத்துடன்.

"மன்னித்து விடுங்கள் மகாராணி! இனிமேல் அப்படி எல்லாம் பேச மாட்டேன். அந்தத் தோட்டம் இங்கிருந்து சில நூறு அடிகள் இருக்கிறதே! அதுவரை நடந்தால் உன் பாதம் கன்றி விடுமே! நான் வேண்டுமானால் உன்னைத் தூக்கிக்கொண்டு வரட்டுமா?"

"இப்போதுதான் சொன்னாய், இது போன்ற கேலிப் பேச்செல்லாம் பேச மாட்டேன் என்று. நான் வீட்டுக்குப் போக வேண்டும் என்பதுதான் உன் விருப்பம் போலிருக்கிறது."

"ஐயையோ வேண்டாம். இனிமேல் இப்படியெல்லாம் பேச மாட்டேன். நீ வேண்டுமானால் மல்லிகையின் இதழைப் போன்ற உன் கையால் என் வாயைப் பொத்தியபடியே வா!"

"நீ ஓய மாட்டாய்!" என்று சிரித்தபடியே சொல்லி விட்டுத் தோட்டத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் மலர்க்கொடி.

தோட்டத்தில் இருவரும் பேசிக் கொண்டே நடந்தார்கள்.

"ஆஹா! அனிச்ச மலர்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!" என்றாள் மலர்க்கொடி

"ஆமாம்! அவை உன்னைப் போல்தான். அபாரமான அழகு, ஆனால் தொட்டால் சிணுங்கி!" என்றான் மணிவண்ணன்.

மலர்க்கொடி அவன் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவள் போல், "இங்கே இத்தனை அன்னங்கள் நடந்து கொண்டிருக்கின்றனவே! எவ்வளவு அழகான காட்சி!" என்றாள்.

"ஆமாம். ஆனால் அவை உன்னைப் பார்த்து நடை பழகுகின்றன என்ற உண்மையை தான் சொன்னால் நீ கோபித்துக் கொள்வாய்!"

அவனுக்கு பதில் சொல்ல வாய் திறந்த மலர்க்கொடி திடீரென்று 'ஆ' என்று கூவியபடியே தரையில் அமர்ந்தாள்.

"என்ன ஆயிற்று?" என்றான் மணிவண்ணன் பதற்றத்துடன்.

காலில் ஏதோ குத்தி விட்டது என்றாள் மலர்க்கொடி தன் பாதத்தைத் தன் கையால் தடவியபடியே.

"மெதுவாக. வெண்தாமரை போன்றிருந்த உன் பாதம் இப்போது செந்தாமரை போல் ஆகி விட்டதே! நல்லவேளை ரத்தம் வரவில்லை. வைத்தியர் வீடு அருகில்தான் இருக்கிறது. வா போகலாம்" என்றான் மணிகண்டன் அவள் கையைப் பிடித்து அவளை எழுந்து நிற்கச் செய்ய முயன்றபடி.

"என்னால் அவ்வளவு தூரம் நடக்க முடியுமா என்று தெரியவில்லை" என்றாள் மலர்க்கொடி அவன் கையை உதறியபடி.

"நான் தூக்கிக்கொண்டு செல்கிறேன் என்று சொன்னால் நீ கோபித்துக் கொள்வாய்."

மலர்க்கொடி மீண்டும் அவனை முறைத்துப் பார்த்து விட்டு "சற்று நேரம் உட்கார்ந்து விட்டுப் போனால் சரியாகி விடும்" என்றாள்

"அதுவும் சரிதான். வைத்தியர் வீட்டுக்குப்போனால் அவர் சிரிக்கப் போகிறார்."

"எதற்குச் சிரிக்க வேண்டும்?"

"பின்னே? கீழே உதிர்ந்து கிடக்கும் அனிச்சம்பூவின் இதழ்களும், அன்னப்பறவையின் இறகுகளும் பட்டு உன் கால் நொந்து போயிருப்பதைக் கண்டு சிரிக்க மாட்டாரா என்ன?" என்றான் மணிகண்டன். 

மலர்க்கொடி கோபம் கொண்டவளாக விருட்டென்று எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

களவியல்
அதிகாரம் 112
நலம்புனைந்துரைத்தல்   

குறள் 1120
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

பொருள்:
அனிச்ச மலரும், அன்னத்தின் இறகும் இந்தப் பெண்ணின் காலடிக்கு நெருஞ்சி முள் போன்றவை.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

No comments:

Post a Comment

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...