தன் நண்பனோடு விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்தது அரசி நந்தினியின் காதில் விழுந்து, அவளைக் கோபமடையச் செய்யும் என்று அரசன் கஜவர்மன் எதிர்பார்க்கவில்லை.
வெளியூரிலிருந்து வந்திருந்த தன் நண்பன் குலதீபனுடன், நந்தவனத்தில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தான் கஜவர்மன்.
ஒரு கட்டத்தில், பேச்சு பெண்களைப் பற்றித் திரும்பியது. புலவர்கள் பெண்களை எப்படியெல்லாம் வர்ணிக்கிறார்கள் என்பது பற்றி நண்பர்கள் இருவரும் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"பெண்களின் முகத்தை நிலவுக்கு ஒப்பிட்டுப் பேசுவதைப் போன்ற பொய் வேறு எதுவும் இல்லை. என் மனைவியின் முகம் நிலவைப் போன்று இருப்பதாக நான் எப்போதும் சொல்ல மட்டேன்" என்று சொல்லிச் சிரித்தான் கஜவர்மன்.
அப்போது, அருகில் செடிகளின் சல சலப்புச் சத்தம் கேட்டது. கஜவர்மன் திரும்பிப் பார்த்தபோது, நந்தினி வேகமாகப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தான்,
தன்னைத் தேடி நந்தவனத்துக்கு வந்த நந்தினி, தான் பேசியதைக் கேட்டுக் கோபித்துக் கொண்டு திரும்பிப் போய் விட்டாள் என்பது கஜவர்மனுக்குப் புரிந்தது. மனைவியை எப்படிச் சமாதானப்படுத்தப் போகிறோம் என்று கவலைப்படத் துவங்கினான் அவன்.
நண்பன் விடைபெற்றுப் போனதும், மனைவியைச் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன், அவளைத் தேடிச் சென்றான் கஜவர்மன்.
"நான்தான் அழகானவள் இல்லையே! என்னை ஏன் தேடி வந்தீர்கள்?" என்றாள் நந்தினி, கோபத்துடன்.
"நீ அழகில்லாதவள் என்று எப்போது சொன்னேன்?"
"என் முகம் நிலவுக்கு ஒப்பானது என்று எப்போதும் சொல்ல மாட்டேன் என்று சொன்னீர்களே, அதற்கு என்ன பொருள்?"
"உன் முகம் நிலவை விட அழகானது என்பதைத்தான் அப்படிச் சொன்னேன்!"
"பொய் சொல்லாதீர்கள்!" என்று சொல்லித் தன் அறைக்குள் போய் கதவைத் தாளிட்டுக் கொண்டாள் ந்ந்தினி.
கஜவர்மன் யோசனையில் ஆழ்ந்தான்.
மறுநாள், அரசவையில் ஒரு நிகழ்ச்சி இருந்ததால், நந்தினி அரசவைக்கு வந்து, அரசனுக்குப் பக்கத்தில் இருந்த தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அரசனிடம் அவளுக்குக் கோபம் தணியவில்லை என்பதைக் காட்டிக் கொள்வது போல், அவனைப் பார்க்காமல், நேரே அவையைப் பார்த்தபடி அமர்ந்தாள்.
கஜவர்மனும் அவளிடம் பேச முயற்சி செய்யவில்லை.
ஆடல் பாடலுக்குப் பிறகு, புலவர்கள் தாங்கள் எழுதிய பாடல்களைப் பாடினர். ஆர்வமின்றிக் கேட்டுக் கொண்டிருந்த நந்தினி, ஒரு புலவர் பாடிய பாடலைக் கேட்டதும், வியப்படைந்தவளாகப் பக்கத்தில் இருந்த கணவனைத் திரும்பிப் பார்த்தாள்.
கஜவர்மன் அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான்.
"புலவரே! இப்போது நீங்கள் பாடிய பாடலின் பொருளைக் கூற முடியுமா?" என்றாள் நந்தினி.
"கூறுகிறேன், அரசியாரே! முழு நிலவு அரசியாரின் முகத்தைப் பார்த்து, அது தன் முகத்தை விட அழகாக இருக்கிறதே என்று நினைக்கிறது. தன் முகத்தில் இருக்கும் களங்கம்தான் தன் அழகைக் குறைத்துக் காட்டுகிறது என்று நினைத்து, அதைத் தேய்த்து அகற்றப் பார்க்கிறது. களங்கம் போகாததால், தினமும் தேய்க்கிறது. இதனால், அதன் முகமே கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து போகிறது. பிறகு, சிறிது சிறிதாக வளர்ந்து, முகம் முழுமை அடைகிறது. மீண்டும் இதே செயல் தொடர்கிறது."
"நல்ல கற்பனை புலவரே உங்களுக்கு!" என்று மலர்ந்த முகத்துடன் புலவரைப் பாராட்டிய நந்தினி, "ஆமாம், இந்தப் பாடலை இதற்கு முன் வேறு எங்காவது பாடி இருக்கிறீர்களா?" என்றாள்.
"வேறு எங்கும் பாடவில்லை, அரசி. ஆயினும், இது தங்களைப் பற்றிய பாடல் என்பதால், அவையில் பாடுமுன், நேற்று மன்னரிடம் தனியே பாடிக் காட்டி, அவையில் பாட அவருடைஒப்புதலைப் பெற்றேன்" என்றார் புலவர்.
"ஓ, அப்படியா!" என்ற அரசி, கஜவர்மனைத் திரும்பிப் பாரத்துப் புன்னகை செய்தாள். 'புலவரின் பாடலைத்தான் நேற்று நீங்கள் குறிப்பிட்டீர்கள் என்று தெரியாமல், உங்களிடம் கோபப்பட்டு விட்டேனே' என்று அவனிடம் வருத்தம் தெரிவிப்பதாக இருந்தது அந்தப் புன்னகை.
அவை நிகழ்ச்சிகள் முடிந்ததும், தனிமையில் இருந்த அரசனிடம் வந்த புலவர், "அரசே! நீங்களே ஒரு பாடல் எழுதிக் கொடுத்து, நான் எழுதியதாக அதை அவையில் பாடச் சொல்லி விட்டு, அதற்கு எனக்குப் பரிசும் அளித்திருக்கிறீர்களே!" என்றார்.
"புலவரே! பரிசு பாடலுக்கல்ல, நான் எழுதிக் கொடுத்த பாடலை நீங்களே எழுதியதாகப் பொய் சொல்லி அவையில் பாடி, அரசிக்கு என் மீது இருந்த கோபத்தைப் போக்கியதற்கு!" என்று சொல்லிச் சிரித்தான் கஜவர்மன்.
அரசன் சொன்னது புலவருக்கு விளங்கவில்லை!
காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 112
களவியல்
அதிகாரம் 112
நலம் புனைந்துரைத்தல்
குறள் 1117
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.
தேய்ந்து, பிறகு தேய்ந்த பகுதிகள் படிப்படியாக நிறைவு பெறும் நிலவின் முகத்தில் உள்ளது போல், இந்தப் பெண்ணின் முகத்தில் களங்கம் உண்டோ, இல்லையே!
No comments:
Post a Comment