இன்று மூன்றாவது நாள்.
சவிதா பூங்காவுக்கு வந்து ஒரு மணி நேரம் காத்திருந்ததுதான் மிச்சம். பாலன் இன்றும் வரவில்லை.
இத்தனைக்கும் இந்த மூன்று நாட்களிலுமே, அவன் அலுவலகத்துக்கு ஃபோன் செய்து, மாலை 6 மணிக்குப் பூங்காவில் சந்திக்கலாம் என்று சொல்லி விட்டுத்தான் அவள் வந்து காத்திருந்தாள்.
முதல்நாள் காத்திருந்து, ஏமாற்றமடைந்து வீட்டுக்குத் திரும்பினாள். அடுத்த நாள், பாலனிடமிருந்து ஃபோன் வரும் என்று மதியம் வரை எதிர்பார்த்துக் காத்திருந்து விட்டுப் பிற்பகலில் அவன் அலுவலகத்துக்கு ஃபோன் செய்தாள்.
"ஓ, சாரி! நேத்து ஆஃபீஸ்லேந்து கிளம்ப லேட் ஆயிடுச்சு. அதான் வர முடியல" என்றான் பாலன்.
"அது சரி. இன்னிக்குக் காலையிலேயே எனக்கு ஃபோன் செஞ்சு சொல்லி இருக்க வேண்டாமா? காலையிலேந்து உங்ககிட்டேந்து ஃபோன் வரும்னு காத்துக்கிட்டே இருந்தேன்" என்றாள் சவிதா.
"சாரி, மறந்துட்டேன்!" என்றான் பாலன், சாதாரணமாக.
'மறந்துட்டேன்னு எப்படி சாதாரணமா சொல்றாரு!' என்று மனதில் எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்ட சவிதா, "சரி. அப்ப இன்னிக்கு?" என்றாள்.
அலுவலகத் தொலைபேசியைப் பயன்படுத்தியதால், தான் பேசுவதை யாராவது கேட்டு விடுவார்களோ என்ற அச்சத்துடனேயே அவள் பேச வேண்டி இருந்தது.
"இன்னிக்குக் கண்டிப்பாப் பாக்கலாம். அதே இடம், அதே டைம்!" என்றான் பாலன்.
ஆனால் அன்றும் அவன் வரவில்லை.
அடுத்த நாள் காலை, அவனே ஃபோன் செய்து, "சாரி. நேத்திக்கு அம்மாவை டாக்டர்கிட்ட அழைச்சுக்கிட்டுப் போறதா சொல்லி இருந்தேன். அதை மறந்து, உங்கிட்ட வரதா சொல்லிட்டேன். ஆனா, இன்னிக்குக் கண்டிப்பாப் பாக்கலாம்" என்று சொல்லி, அவள் வேறு ஏதாவது கேட்டு விடப் போகிறாளோ என்று அஞ்சியது போல், ஃபோனை வைத்து விட்டான்.
ஆனால், இன்றும் அவன் வரவில்லை. நாளைக்கு ஃபோன் செய்து, ஏதாவது காரணம் சொல்லுவான். நாளை பார்க்கலாம் என்று சொல்லுவான். அவளும் முட்டாளைப் போல், நாளை போய்க் காத்திருப்பாள்!
அன்று இரவு வீட்டுக்குப் போன பிறகும், அவன் நினைவாகவே இருந்தாள் சவிதா.
திடீரென்று அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. 'நான் எப்போதும் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறேனே, அதுபோல், அவரும் என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பாரா?'
தூரத்திலிருந்து ஒரு பாடல் வரி காற்றில் மிதந்து வந்து அவள் காதில் ஒலித்தது.
'இந்த நேரம் அந்த நெஞ்சில் என்ன நினைவோ?'
சவிதாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது போல் இருந்தது.
'நான் என் காதலனையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், அவர் என்னைப் பற்றி நினைப்பதே இல்லை, போலும்! அதனால்தான், எனக்கு இத்தனை ஏமாற்றங்கள் நிகழ்கின்றன.'
'இந்த நேரம் அந்த நெஞ்சில் என்ன நினைவோ?' என்ற வரி மீண்டும் அவளைத் தாக்கியது.
'அவருக்கு என்னைப் பற்றிய எண்ணம் இல்லாதபோது, நான் மட்டும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறேனென்றால், அதற்குக் காரணம் என்ன?
'என் நெஞ்சுதான்!
'அவர் நெஞ்சு அவரைப் பற்றித்தான் நினைக்கிறது. ஆனால், என் நெஞ்சு என்னைப் பற்றி நினைக்காமல், அவரைப் பற்றி நினைக்கிறது!
'இந்த நிலையில், நான் அடையும் ஏமாற்றங்களுக்கு அவரைக் குற்றம் சொல்லி என்ன பயன்?'
காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 130
நெஞ்சொடு புலத்தல் (நெஞ்சிடம் கோபம் கொள்ளுதல்)
குறள் 1291
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது
பொருள்:
நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல், அவரையே நினைக்கக் காரணம் என்ன?