Monday, February 19, 2024

1298. ஒரு வீரனின் பெருமைகள்!

"அவர் எப்படிப்பட்ட வீரர் தெரியுமா? போர்க்களத்தில வாளைச் சுழட்டிக்கிட்டுப் போனார்னா, எதிரிங்கள்ளாம் அலறி அடிச்சுட்டு ஓடுவாங்களாம்!"

"இதை யார் சொன்னது? அலறி அடிச்சுக்கிட்டு ஓடிப் போன எதிரிகள் யாராவது சொன்னாங்களா?"

"என்ன கேலியா? அவர் மார்பில இருந்த விழுப்புண்களைப் பாத்திருக்க இல்ல?"

"பாத்திருக்கேன். நான் பாக்காம, வேற யார் பாப்பாங்க? ஆனா, எதிரிங்கள்ளாம் பயந்து ஓடினாங்கன்னு சொல்ற. அப்ப, அவரைக் காயப்படுத்தினது யாரு? ஒருவேளை, தன்னோட வாளால தவறுதலாத் தன்னையே குத்திக்கிட்டாரோ?"

"அதை விடு. அவருடைய குணங்களைப் பத்திப் பேசுவோமா? அவர் எவ்வளவு கருணை உள்ளவர் தெரியுமா?"

'அந்தக் கருணையை இந்தக் காதலிகிட்டேயும் கொஞ்சம் காட்டி இருக்கலாம்!'

"என்ன முணுமுணுக்கற?"

"இல்ல. மேல சொல்லு!"

"அவரோட கருணையைப் பத்தி எவ்வளவு பேர் புகழ்ந்திருக்காங்க தெரியுமா?"

"அதுதான் சொல்லிட்டியே! அப்புறம்?"

"அப்புறம், அவரோட கொடை!"

"கொடைங்கறதும் கருணைக்குக் கீழே வந்துடுமே!"

"நீ என்ன சொல்ல வர? உன் காதலரைப் பத்திப் பெருமையா எதுவுமே பேசக் கூடாதுங்கறியா?"

"ஓ, அவர் என்னோட காதலரா? நீ இத்தனை நேரம் பேசினதைப் பார்த்தா, அவர் உன்னோட காதலர் மாதிரி இல்ல இருந்தது?"

"உன்னோட காதலர்னாலும், அவர்கிட்ட எனக்குத்தானே நெருக்கம் அதிகம்?"

"ஆமாண்டி. அவரைத் தூக்கி என் நெஞ்சில வச்சேன் இல்ல? அதுதான், நீயே அவரை சொந்தம் கொண்டாட ஆரம்பிச்சுட்ட!"

"உன்னைப் பிரிஞ்சிருக்காருங்கறதால, அவர் மேல உனக்கு இருக்கற கோபம் எனக்குப் புரியுது. அவரோட பிரிவு உன்னை விட என்னைத்தானே அதிகம் பாதிக்கும்? ஆனா அவரைக் குறை சொன்னா, அது என்னை நானே தாழ்த்திக்கற மாதிரி இருக்கும். அதனாலதான், அவரோட பெருமைகளைப் பேசிக்கிட்டிருக்கேன்!"

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 130
நெஞ்சொடு புலத்தல் (நெஞ்சிடம் கோபம் கொள்ளுதல்)

குறள் 1298
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு

பொருள்:
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...