தொலைக்காட்சியில் திருக்கறளுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் அந்தத் தமிழறிஞர்.
"கடல்ல விழுந்துட்டா, கடவுளால எப்படி உதவ முடியும்? நீச்சல் தெரியாதவங்களுக்கும் நீந்தற சக்தியைக் கடவுள் கொடுத்துடுவாரா?" என்றாள் ராணி.
"உன் அப்பா ஒரு நாத்திகவாதிங்கறதால, நீ இப்படிப் பேசற போலருக்கு! கடவுள் நீந்தற சக்தியைக் கொடுக்கணுங்கறதில்ல. அங்கே ஒரு படகை அனுப்பிக் கூட கடல்ல தத்தளிக்கறவங்களைக் காப்பாத்தலாம் இல்ல?" என்றாள் அவள் தோழி குமுதா.
"ஓ, அப்படி ஒரு வழி இருக்கா? அப்படின்னா, அது நீந்தறதா ஆகாதே?"
"ஏண்டி, கடல்ல விழுந்துட்டா, எப்படியோ கரை சேரறது தான் முக்கியம். நீந்தித்தான் வரணுங்கறதுக்கு, வாழ்க்கை என்ன நீச்சல் போட்டியா?"
"நீ சொல்றது சரிதான்!"
சற்று நேர மௌனத்துக்குப் பிறகு, "நீ ஏன் திடீர்னு செந்தில் கவுண்டமணிகிட்ட கேக்கற கேள்வி மாதிரியெல்லாம் எங்கிட்ட கேக்கற?" என்றாள் குமுதா.
"ஒண்ணுமில்ல!" என்றாள் ராணி.
"எனக்குப் புரியுது. கொஞ்ச நாளா உனக்கு ஒரே ஒரு சிந்தனைதானே? உன் காதலைப் பற்றின சிந்தனை! அதுதான் உன்னைப் பேய் பிடிச்ச மாதிரி பிடிச்சு ஆட்டுது. ஓ, நீ பகுத்தறிவுவாதியோட பொண்ணாச்சே! பேய்னு சொன்னா ஒத்துக்க மாட்ட. அதனால, நோய்னு வச்சுக்கலாம். அந்தக் காதல் நோய் உன்னைப் பிடிச்சு வாட்டறது உனக்குக் கடல்ல தத்தளிக்கற மாதிரி இருக்கு போல!" என்றாள் குமுதா.
"உனக்கு எப்படித் தெரியும்? உனக்கே அந்த நோய் இருக்கிற மாதிரி பேசற!"
"இப்ப இல்லைதான். ஆனா முன்னே இருந்ததே! நான் காதல்ல விழுந்தப்ப!"
"அப்புறம் எப்படி அதிலேந்து விடுபட்ட?"
"என் காதலர் என் காதலை ஏத்துக்கிட்டு, என்னைக் கல்யாணம் செஞ்சுக்கிட்ட அப்புறம்தான். பிறவிப் பெருங்கடலை நீந்தற ஃபார்முலாதான்! உன் காதலன் தோணி மாதிரி வந்து உன்னை ஏத்துக்கிட்டாத்தான் உன் நோய் நீங்கும். அதுக்கு, நீ உன் காதலன்கிட்ட உன் காதலைச் சொல்லணும் - பிறவிப் பெருங்கடல்ல விழுந்தவங்க கடவுளை வேண்டிக்கிற மாதிரி!"
"நீ எனக்கு யோசனை சொல்றியா, 'பிறவிப் பெருங்கடல்'ங்கற குறளுக்கு விளக்கம் சொல்றியான்னு தெரியல!" என்றாள் ராணி, நாணத்தை வெற்றி கொண்டு, காதலனிடம் தன் காதலை எப்படிச் சொல்லப் போகிறோம் என்ற கவலையுடன்.
கற்பியல்
பொருள்:
காமநோயாகிய கடல் இருக்கிறது. ஆனால், அதை நீந்திக் கடந்து செல்வதற்குப் பாதுகாப்பான தோணி இல்லை.