"ஏதாவது வேலை இருந்திருக்கும்" என்றாள் கவிதா.
"என்ன வேலை இருந்தாலும், தினம் ஒரு தடவை உன்னைப் பார்க்க வராம இருக்க மாட்டாரே!"
தாய் கூறியதைக் கேட்டதும், கவிதாவுக்குத் தொண்டையை அடைப்பது போல் இருந்தது.
'ஏதோ சண்டை வந்துடுச்சு. நானும் கோபத்தில இனிமே என்னைப் பார்க்க வராதீங்கன்னு சொல்லிட்டேன். அதுக்காக, இப்படியா வீறாப்பா என்னை வந்து பாக்காம இருப்பாரு? ஒருவேளை. வராமலே இருந்துடுவாரோ? சேச்சே! அது எப்படி? கல்யாணம்தான் நிச்சயம் ஆயிடுச்சே!'
"உங்களுக்குள்ள சண்டை எதுவும் இல்லையே! கல்யாணம் நிச்சயம் ஆனப்புறம், சண்டைஎதுவும் போட்டுக்காதீங்க!" என்றாள் கற்பகம், சிரித்தபடி.
'அம்மா விளையாட்டாகப் பேசுகிறாள். ஆனால், உண்மையாகவே நாங்கள் சண்டை போட்டுக் கொண்டு, நான் அவரை இங்கே வர வேண்டாம் என்று சொல்லி, அதனால் இரண்டு நாட்களாக அவர் என்னைப் பார்க்க வராமல் இருக்கிறார் என்று தெரிந்தால், என்ன சொல்வாளோ!'
அன்று மாலை, "நானும், உன் அப்பாவும் கமலா அத்தை வீட்டுக்குப் போயிட்டு வரோம். எட்டு மணிக்கு வந்துடுவோம்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள் கற்பகம்.
கற்பகம் கிளம்பி ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, அழைப்பு மணி அடித்தது.
'அம்மாவாத்தான் இருக்கும். எப்பவுமே வெளியில கிளம்பறப்ப, எதையாவது மறந்துட்டுப் போறது, கொஞ்ச தூரம் போனப்பறம் நினைவு வந்து திரும்ப வந்து எடுத்துக்கிட்டுப் போறது! இதுவே அம்மாவுக்கு வழக்கமாப் போயிடுச்சு!' என்று நினைத்தபடியே கதவைத் திறந்த கவிதாவுக்கு இன்ப அதிர்ச்சி.
வாசலில் முரளி நின்று கொண்டிருந்தான். கையில் ஒரு பூங்கொத்து வேறு!
கவிதா பேசாமல் உள்ளே வந்து, சோஃபாவில் அமர்ந்தாள். அவளைத் தொடர்ந்து வந்த முரளி, சோஃபாவில் அவள் அருகில் அமர்ந்து கொண்டு, அவளிடம் பூங்கொத்தைக் கொடுத்தான்.
"பூங்கொத்தெல்லாம் எதுக்கு? எனக்கு இன்னிக்குப் பிறந்த நாள் இல்லையே!" என்றாள் கவிதா, பூங்கொத்தை வாங்காமலே.
"நாம சண்டை போட்டுக்கிட்டதே உனக்கு வருத்தமா இருந்திருக்கும். என்னதான் கோபத்தில நான் உன்னைப் பார்க்க வர வேண்டாம்னு நீ சொன்னாலும், ரெண்டு நாளா நான் உன்னைப் பார்க்க வராதது உன் வருத்தத்தை இன்னும் அதிகமாத்தான் ஆக்கி இருக்கும். நீ சொன்னதுக்காக, நானும் ரெண்டு நாள் வராம இருந்தேன். இனிமேயும் உன் வருத்தத்தை நீடிக்க விடக் கூடாதுன்னுதான் இப்ப உன்னைப் பார்க்க வந்தேன்" என்றான் முரளி.
'இப்படிப்பட்ட நல்ல உள்ளவன் கொண்டவனை, ஏதோ கோபத்தில், 'என்னைப் பார்க்க வராதீர்கள்!' என்று சொல்லி விட்டோமே' என்று நினைத்த கவிதா, "சாரி!" என்றபடியே அவன் கொடுத்த பூங்கொத்தை மனநெகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டாள்.
கற்பியல்