"அப்படியா?" என்றாள் பார்கவி, மகிழ்ச்சியுடன். "நல்ல வேளை! எங்கே அவன் பேசாமலே இருந்துடுவானோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். என் வயத்தில பாலை வார்த்த!"
"ஆனா ஒண்ணு. ஆண்களுக்கு ஈகோ அதிகம். அவங்க இறங்கி வந்ததாக் காட்டிக்க மாட்டாங்க. அதனால, அவன் கூப்பிட்டு நீ போன மாதிரி இருக்கக் கூடாது. நீ தற்செயலா பார்க்குக்குப் போன மாதிரியும், எதிர்பார்க்காம அவனைச் சந்திச்ச மாதிரியும் இயல்பாப் பேசணும். அவன் உன்னை வரச் சொல்லி எங்கிட்ட சொல்லி அனுப்பினதாலதான் நீ வந்தேன்னு காட்டிக்கக் கூடாது!" என்றாள் லதா.
"ஓகே! சாரோட ஈகோவைத் திருப்திப்படுத்தற மாதிரியே நடந்துக்கறேன்!" என்றாள் பார்கவி, உற்சாகத்துடன்.
'முட்டாள் பெண்ணே! காதலனோட சண்டை போட்டுட்டு, நாலஞ்சு நாளா அவனைப் பார்க்காம, பேசாம தவிச்சுக்கிட்டிருந்த. அவனும் ஜம்பமா, நீ இறங்கி வந்தாதான் ஆச்சுன்னு பிடிவாதமா இருந்தான். ஊடல் அளவுக்கு மீறிப் போச்சுன்னா, நிரந்தரப் பிரிவில கொண்டு விடும்னு உங்க ரெண்டு பேருக்கும் புரியல. அதனால, அவன் வரச் சொன்னதா உங்கிட்ட சொல்லியும், நீ வரச் சொன்னதா அவன்கிட்ட சொல்லியும், ஒரு டிராமா போட்டு, உங்க ஊடலை நான் முடிச்சு வைக்க வேண்டி இருக்கு!' என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள் லதா.
கற்பியல்
No comments:
Post a Comment