Monday, March 4, 2024

1301. இரண்டு நாள் தண்டனை!

"ரெண்டு நாள்ள வந்துடுவேன்னு சொல்லிட்டுப் போனீங்க. பத்து நாள் ஆயிடுச்சு!" என்றாள் மல்லிகா கோபத்துடன்.

"என்ன செய்யறது மல்லிகா? வியாபார விஷயமாப் போனா வேலை முடிஞ்சப்புறம்தானே திரும்ப முடியும்?" என்றான் குமரன்.

"வரத்துக்கு லேட்டாகும்னா  போட்டுருக்கலாம் இல்ல? வீட்டில ஒருத்தி காத்துக்கிட்டிருக்காங்கற நினைப்பே உங்களுக்கு இல்லையா?"

"வேலை மும்முரத்தில எதுவுமே செய்ய முடியல. போஸ்ட் ஆஃபீசுக்குப் போய் இன்லாண்ட் லெட்டர் வாங்கக் கூட நேரம் இல்ல. நான் தங்கி இருந்த ஓட்டல்லேந்து போஸ்ட் ஆபீஸ் ரொம்ப தூரம் வேற!"

"இந்த நொண்டிச் சாக்கெல்லாம் வேண்டாம். இன்லாண்ட் லெட்டர் எல்லாம் பெட்டிக் கடையிலேயே விப்பாங்களே! பத்து பைசா அதிகம் கொடுத்து வாங்கணும். அவ்வளவுதானே? உங்களுக்கு என் மேல கொஞ்சமாவது அக்கறை இருந்தா எப்படியாவது லெட்டர் போட்டிருப்பீங்க!"

"ஐயோ, மல்லிகா! உனக்கு எப்படி் புரிய வைக்கறதுன்னே தெரியலியே! தினமுமே இன்னிக்கு வேலை முடிஞ்சுடும், ராத்திரியே ஊருக்குக் கிளம்பிடலாம்னுதான் நினைப்பேன். இப்படியே தள்ளிப் போய் பத்து நாள் ஆயிடுச்சு."

"பத்து நாள் ஆயிடுச்சு இல்ல? இன்னும் ரெண்டு நாள் ஆனாப் பரவாயில்ல."

"அப்படின்னா?"

"ரெண்டு நாளைக்கு என் பக்கதிலேயே வராதீங்க!"

"ரெண்டு நாளா? ஓ, அதுவா? அது எப்படி? நான் கிளம்பறத்துக்கு முதல் நாள்தானே தலைக்குக் குளிச்ச?"

"அதுவும் இல்ல, இதுவும் இல்ல. நீங்க பத்து நாள் என்னைத் தவிக்க வச்சதுக்காக உங்களுக்கு நான் கொடுக்கற தண்டனை இது!"

"என்ன மல்லிகா இது? சின்னக் குழந்தை மாதிரி!" என்றபடியே மல்லிகாவின் அருகில் வந்தான் குமரன்.

"வராதீங்கன்னா, வராதீங்க! அவ்வளவுதான்!" என்றாள் மல்லிகா.

அவள் முகத்தில் பொங்கிய கோபத்தைக் கண்டு குமரன் கொஞ்சம் பயந்து விட்டான்.

"சரி" என்றான் பலவீனமாக.

குமரன் முன்னறையில் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது பின்பக்கமாக வந்து அவன் கழுத்தைத் தன் கைகளால் சுற்றி வளைத்தாள் மல்லிகா.

"அப்பா! கோபம் தீர்ந்து போச்சா? பயந்துட்டேன்!" என்றான் குமரன் மகிழ்ச்சியுடன்.

"கோபமெல்லாம் எதுவும் இல்ல. நான் பத்து நாளா உங்களைப் பிரிஞ்ச தவிச்ச மாதிரி நீங்களும் தவிக்கறதைக் கொஞ்சநேரம் பாக்கணும்னு ஆசைப்பட்டேன். அவ்வளவுதான். நீங்க என் பக்கத்தில வர முடியாம தவிக்கறதைப் பாக்கறப்ப எனக்கே பாவமா இருந்தது. அதனாலதான் ரெண்டு நாள்ங்கறதை ரெண்டு மணி நேரமாக் குறைச்சுட்டேன்!" என்றாள் மல்லிகா சிரித்தபடி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 131
புலவி (பொய்க் கோபம்)
குறள் 1301
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.

பொருள்:
(ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.

No comments:

Post a Comment

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...