"உனக்குத்தான் என் நிலைமை தெரியுமே! நான் வீட்டை விட்டு எங்கேயும் வெளியிலேயே போறதில்ல" என்றாள் பங்கஜவல்லி.
"உன் கணவரைப் பிரிஞ்சருக்கறதால, நீ வருத்ததில இருக்கறது எல்லாருக்கும் தெரியும். அதுக்காக, தோழியோட திருமணத்துக்குக் கூட வராம இருக்கலாமா? சகுந்தலை உன் மேல வருத்தப்பட மாட்டாளா?"
"போன மாசம் நடந்த குமுதாவோட வளைகாப்புக்கு நான் போகாததுக்கே, குமுதா என் மேல ரொம்பக் கோபமா இருக்கா. அப்படி இருக்கறப்ப, தன்னோட திருமணத்துக்கு வராம இருந்ததுக்காக, சகுந்தலை கோபப்பட மாட்டாளா என்ன?"
"அப்புறம் ஏன் வரல? திருமணத்துக்கு வந்திருந்தா, உன் மனசுக்கு ஒரு மாறுதலா இருந்திருக்கும். சகுந்தலைக்கும் சந்தோஷமா இருந்திருக்கும் இல்ல?"
சற்று நேரம் மௌனமாக இருந்த பங்கஜவல்லி, "நானும் அப்படித்தான் சொன்னேன். அது கேக்கலையே!" என்றாள்.
"எது கேக்கல?"
"என் மனசுதான்! அவர் என்னை விட்டுப் பிரிஞ்சதிலேந்து, நான் துயரத்திலதான் இருக்கணும்னு என் மனசு முடிவு பண்ணிடுச்சு. நான் கொஞ்ச நேரமாவது அந்தத் துயரத்தை மறந்துட்டு வேற எதிலேயாவது ஈடுபடலாம்னு முயற்சி செஞ்சா, என் மனசு அதை அனுமதிக்கிறதில்ல. மாட்டைக் கட்டிப் போட்டிருக்கறப்ப, அது கொஞ்சம் இந்தப் பக்கமோ, அந்தப் பக்கமோ அசைய முயற்சி பண்ணினா, அதைக் கட்டி இருக்கிற கயிறு அதைப் பிடிச்சு இழுக்கும் இல்ல, அது மாதிரி, என் மனசு என்னோடசோகத்திலேந்து என்னால கொஞ்சம் கூட விலக முடியாம, என்னைப் பிடிச்சு இழுத்துக்கிட்டே இருக்கு. என் மனசே எனக்கு விரோதமா நடந்துக்கறப்ப, எனக்கு நெருக்கமா இருக்கற மத்தவங்க என் மேல கோபமா இருக்கறதைப் பத்தி நான் என்ன சொல்ல முடியும்?" என்றாள் பங்கஜவல்லி, விரக்தியுடன்.
கற்பியல்
No comments:
Post a Comment