Sunday, March 17, 2024

1303. நளினியின் அச்சம்

"என்னடி ரெண்டு மூணு நாளா ரொம்ப சோர்வா இருக்க? என்ன விஷயம்?" என்றாள் ருக்மிணி.

"ஒண்ணுமில்லையே!" என்றாள் நளினி.

"ஒண்ணுமில்லேன்னு உன் வாய்தான் சொல்லுது. உன் முகம் ஏதோ இருக்குன்னு இல்ல சொல்லுது?" என்ற ருக்மிணி, "கண்டுபிடிச்சுட்டேன். தினமும் காலேஜ் விடற நேரத்தில காலேஜுக்கு வெளியில பைக்கை வச்சுக்கிட்டுக் காத்துக்கிட்டிருந்து நீ வெளியில வந்ததும் உன்னை பைக்ல வச்சு அழைச்சுக்கிட்டுப் போவாரே உன் ஆளு, அவரு ரெண்டு நாளா வரலை போலருக்கு? என்ன ஆச்சு? எங்கேயாவது ஊருக்குப் போயிருக்காரா?" என்றாள்

இதைக் கேட்டதும் நளினியின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

"என்னடி ஆச்சு?" என்றாள் ருக்மிணி பதட்டத்துடன்.

"சின்ன விஷயம். ஒரு விவாத்தில ஆரம்பிச்சு பெரிசாப் போயிடுச்சு. இனிமே உன் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன்னுட்டுப் போயிட்டாரு. சொன்னபடியே ரெண்டு நாளா வரலை. நிரந்தரமா என்னை ஒதுக்கிட்டாரோன்னு பயமா இருக்கு" என்று நளினி கண்ணீருக்கிடையில் கூறிக் கொண்டிருந்தபோதே, "உன் ஆளுக்கு நூறு வயசுடி. நீ அவரைப் பத்தி சொல்லிக்கிட்டு இருக்கறப்பவே அவர் வந்துட்டாரு பாரு!" என்றாள் ருக்மிணி சிரித்தபடி. 

நளினி திரும்பிப் பார்த்தாள். கல்லூரியின் வெளிக்கதவுக்கு அருகே மணிகண்டன் பைக்குடன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

"பைடி! நாளுக்குப் பார்க்கலாம்!" என்றபடியே வெளியே விரைந்தாள் நளினி.

 எதுவும் பேசாமல் மணிகண்டனின் பைக்கின் பின்னால் அமர்ந்து கொண்டாள் நளினி.

பைக் சற்று தூரம் சென்றதும், "ஏன் ரெண்டு நாளா வரலை? அன்னிக்கு என் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன்னு சொல்லிட்டுப் போனதால ரொம்ப பயந்துட்டேன்!" என்றாள் நளின்.

"ஏற்கெனவே நான் கோவிச்சுக்கிட்டு ரெண்டு நாள் வராம இருந்தது உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்தி இருக்கும். உன்னை மேற்கொண்டு வருத்தப்பட வைக்கக் கூடாதுன்னு இன்னிக்கு ஓடி வந்துட்டேன். இன்னிக்கு நாம ஒரு சினிமாவுக்குப் போகப் போறோம்" என்றான் மணிகண்டன்.

"என்ன சினிமா?"

"சினிமா எதுவா இருந்தா என்ன? பாக்ஸ்ல டிக்கட் வாங்கி இருக்கேன். அங்கே ரெண்டரை மணி நேரம் நாம மட்டும் தனியா இருக்கப் போறோம்!" என்று மணிகண்டன் கூறியபோது அவன் முகத்தில் எத்தகைய குறும்பு உணர்ச்சி இருந்திருக்கும் என்பதை நளினியால் பைக்கின் பின்னால் அமர்ந்தபடியே காண முடிந்தது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 131
புலவி (பொய்க் கோபம்)
குறள் 1303
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.

பொருள்:
ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும்.

No comments:

Post a Comment

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...