"ஒன்றுமில்லை!"
"என் மீது கோபமா? ஆஹா! கோபத்தில் உன் முகம் சிவந்திருப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது தெரியுமா?"
"போதும், போதும்! நன்றாக இருக்கிற என் முகத்துக்கு ஏதாவது ஆகி விடப் போகிறது!"
"ஏன் இப்படிச் சொல்கிறாய் ஆரவல்லி?"
"சில நாட்கள் முன்பு, என் கண்கள் தாமரைப்பூப் போல் என்று புகழ்ந்தீர்கள். மறுநாளே என் கண்ணில் தூசு விழுந்து, இரண்டு நாட்கள் கண் எரிச்சலால் துன்பப்பட்டேன்!"
"அது தற்செயலாக நடந்தது. ஏன், நான் உன் அழகைப் புகழ்ந்தால், என் கண்ணேறு பட்டு உனக்கு ஏதாவது நிகழ்ந்து விடும் என்று நினைக்கிறாயா?"
"உங்கள் கண்ணேறு பட்டதால் என்று சொல்லவில்லை. ஆனால் பாதிப்பு ஏற்படுவது உண்மைதான்!"
"ஒருமுறை நிகழ்ந்ததை வைத்து இப்படிச் சொல்வது நியாயமற்றதல்லவா? அதுவும் இது சில நாட்களுக்கு முன் நடந்தது. அதை ஏன் இப்போது குறிப்பிடுகிறாய்?"
"திரும்பத் திரும்ப நிகழ்ந்தால், குறிப்பிடாமல் என்ன செய்வது?'
"திரும்பத் திரும்ப நிகழ்ந்ததா? வேறென்ன நிகழ்ந்தது?"
"இரண்டு நாட்கள் முன், என் இடை ஒடிந்து விழப் போகும் கொடி போல், என் உடலின் மையப் பகுதியில் ஒரு புள்ளியில் ஒட்டிக் கொண்டிருப்பதாகச் சொன்னீர்கள்!"
"ஆமாம், அதற்கென்ன? உண்மைதானே அது? இதோ பார், எப்படி என் ஒரு உள்ளங்கைக்குள் அடங்குகிறது பார் உன் இடை!"
"உஸ்! தொடாதீர்கள். ஏற்கெனவே வலியால் துடித்துக் கொண்டிருக்கிறேன்."
"வலியா? ஏன்? நான் நீவி விடட்டுமா?"
"ஐயே! தொட்டாலே வலிக்கும் என்று பயப்படுகிறேன். நீவி விடுகிறாராம்! ஆசையைப் பார்!"
"அதில்லை, ஆரவல்லி. உன் வலி குறைய வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னேன். என்ன ஆயிற்று உன் இடைக்கு? சுளுக்கா?"
"என்னவென்றே தெரியவில்லை. காலையில் குளித்து விட்டு அலங்காரம் செய்து கொண்ட சற்று நேரத்துக்கெல்லாம் திடீரென்று இடுப்பு வலிக்க ஆரம்பித்து விட்டது. என்னவென்றே தெரியவில்லை. என் அம்மா தைலம் கூடத் தடவி விட்டார்கள். ஆனாலும் வலி குறையவில்லை."
"வலியுடன் கூட இந்த வல்லபனைப் பார்க்க வந்திருக்கிறாயே, உன் காதலுக்குத் தலை வணங்குகிறேன்."
வல்லபன் அவளை ஏற இறங்கப் பார்த்தான்.
வல்லபன் அவளை ஏற இறங்கப் பார்த்தான்.
"ஏன் அப்படி என்னை உற்றுப் பார்க்கிறீர்கள்?"
"உன் தோற்றத்திலிருந்து உன் வலியின் காரணம் என்னவென்று கண்டு பிடிக்க முடியுமா என்று பார்க்கிறேன்."
"வலி என் இடையில். நீங்கள் பார்ப்பது என் தலையை. உங்கள் தலைக்குள் இருப்பது என்னவென்று எனக்குப் புரியவில்லை!"
"என் தலைக்குள் கொஞ்சம் விஷயம் இருப்பதால்தான், விஷயம் உன் தலையில் என்று புரிந்து கொள்ள முடிந்தது."
"என் தலையிலா?"
"ஆமாம். தலையில் என்ன பூ சூட்டிக் கொண்டிருக்கிறாய்?"
"அனிச்சம் பூவைத்தான். எதற்குக் கேட்கிறீர்கள்? இருங்கள். ஏன் தலையிலிருந்து பூவை எடுக்கிறீர்கள்?"
வல்லபன் அவள் தலையிலிருந்து எடுத்த பூச்சரத்தில் காம்புகளைக் கிள்ளி எந்து விட்டுப் பூச்சரத்தை மீண்டும் அவள் தலையில் வைக்கப் போனான்.
"இருங்கள். எப்படி என்று தெரியவில்லை, ஆனால் நீங்கள் பூவை எடுத்ததும் இப்போது இடுப்பு வலி போய் விட்டது போல் இருக்கிறது. மறுபடி வைக்க வேண்டாம்."
"இப்போது ஒன்றும் ஆகாது. அதுதான் காம்புகளைக் கிள்ளி விட்டேனே!" என்று சொல்லிப் பூவை மீண்டும் அவள் தலையில் சூட்டினான் வல்லபன். தொடர்ந்து, "அனிச்சம் பூவின் காம்புகளைக் கிள்ளாமல் உன் தலையில் சூட்டிக் கொண்டு விட்டாய். காம்புகளின் எடை தாங்காமல்தான் உன் இடை நொந்து விட்டது!" என்றான்.
"நீங்கள் சொல்வது நான் நம்பக் கூடியதாக இல்லை. ஆனாலும் இப்போது வலி போய் விட்டது என்பது உண்மைதான்!" என்றாள் ஆரவல்லி, அவனைப் பார்த்துச் சிரித்து.
"இனிமேல் உன் இடையை நான் புகழப் போவதில்லை. அப்புறம் அதனால் ஏதாவது ஆகி விட்டது என்பாய்! உன் இடையின் மென்மையை என் கையால் உணர்வதோடு நிறுத்திக் கொள்கிறேன்" என்று சொல்லி, அவள் இடையைத் தன் உள்ளங்கையால் பற்றினான் வல்லபன்.
ஆரவல்லி அவனைத் தடுக்கவில்லை.
களவியல்
அதிகாரம் 112
அதிகாரம் 112
நலம் புனைந்துரைத்தல்
குறள் 1115
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்குநல்ல படாஅ பறை.
பொருள்:
இவள் தன் மென்மையை உணராமல், அனிச்சம் பூவைக் காம்பு களையாமல் சூடிக்கொண்டு விட்டதால், அதன் எடை தாங்காமல் இவள் இடை நொந்து விட்டது. அதனால், இவள் இடைக்கு இனி பறைகள் நல்லவிதமாக ஒலிக்க மாட்டா.