"எனக்கு சமையல் செய்யறதில ஒண்ணும் பிரச்னை இல்ல. நான் பாக்கற ஐடி வேலையை நீ பாக்கறியா?" என்றான் பரத்.
"நானும் படிச்சிருக்கேன். நீங்க வேலைக்குப் போக வேண்டாம்னு சொன்னதாலதானே நான் வேலைக்குப் போகல? வேணும்னா, நாளைக்கே என்னால ஒரு வேலை தேடிக்க முடியும். ஐடி வேலைதான் பாக்கணும்னாலும், ஒண்ணும் பிரச்னை இல்லை. இப்பல்லாம் கோடிங், டேடா சயன்ஸ் எல்லாம் ரெண்டு மூணு மாசத்திலேயே கத்துக்கலாம். அது மாதிரி கத்துக்கிட்டு, ஐடி வேலைக்கே போறேன். நீங்க வீட்டில இருந்து சமைக்கிறீங்களா?"
பரத் பதில் பேசாமல் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டான்.
அதற்குப் பிறகு, இரண்டு மூன்று நாட்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. பரத் வீட்டில் சாப்பிடுவதில்லை. சௌம்யாவும் அதைப் பொருட்படுத்தாமல், தனக்கு மட்டும் சமையல் செய்து கொண்டாள்.
மூன்று நாட்கள் ஆன பிறகு, சௌம்யாவின் மனதில் இலேசாக ஒரு கவலை எழுந்தது.
'இப்படியே எத்தனை நாள் ஓடும்? நான் கொஞ்சம் அதிகமாகப் பேசி விட்டேனோ? இன்று மாலை பரத் அலுவலகத்திலிருந்து வந்ததும், அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்!'
அன்று மாலை, சௌம்யாவின் அம்மா ருக்மிணி அவளுக்கு ஃபோன் செய்தாள். ருக்மிணியின் தோழி அபிராமி ஊரிலிருந்து வருகிறாளாம். ருக்மிணியின் வீட்டுக்கு வந்து விட்டு, உடனேயே ஒரு திருமண வரவேற்புக்குப் போய் விடுவாளாம். சௌம்யா குழந்தையாக இருந்ததிலிருந்தே அபிராமி அவளைப் பார்த்து வந்திருக்கிறாள். அவளுக்கு சௌம்யாவின் மீது ஒரு தனி அன்பு உண்டு.
"அபிராமி உன்னைப் பாக்கணும்னு ஆசைப்படுவா. நீ கொஞ்ச நேரம் வந்துட்டுப் போறியா?" என்றாள் ருக்மிணி.
சௌம்யா யோசித்தாள். இரண்டு மூன்று நாட்களாக, பரத் வீட்டுக்கு வரும்போதே சாப்பிட்டு விட்டு வந்து விடுகிறான். இன்றும் அப்படித்தான் வருவான். அதனால் அம்மா வீட்டுக்குப் போய் விட்டு வந்த பிறகு, பரத்திடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, அவனை சமாதானப்படுத்தலாம் என்று நினைத்து, அம்மா வீட்டுக்குக் கிளம்பினாள் சௌம்யா.
ஆனால், அம்மா வீட்டுக்குப் போய்க் காத்திருந்ததுதான் மிச்சம். அபிராமி வரவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த பிறகு, ருக்மிணி அபிராமிக்கு ஃபோன் செய்து கேட்டபோது, நேரமாகி விட்டதால் நேராகத் திருமண வரவேற்புக்குப் போய் விட்டதாகவும், இன்னொரு முறை வருவதாகவும் அபிராமி சொல்லி விட்டாள்.
ருக்மிணி ஃபோனை வைத்ததும், "ஏம்மா, ஃபோன்லேயாவது அபிராமி ஆன்ட்டிகிட்ட பேசி இருப்பேனே!" என்றாள் சௌம்யா.
"அவ கல்யாண மண்டபத்தில இருக்கா. ஒரே சத்தமா இருக்கு. அவ பேசறதே சரியாக் கேக்கல. அதனாலதான் ஃபோனை வச்சுட்டேன்" என்றாள் ருக்மிணி.
வந்ததற்கு, அம்மா வீட்டில் சாப்பிட்டு விட்டுப் போய் விடலாம் என்று நினைத்தாள் சௌம்யா.
அதற்குள் ருக்மிணி, "அப்ப நீ கிளம்பு. உன் புருஷன் ஆஃபீஸ்லேந்து வரதுக்குள்ள அவருக்கு ஏதாவது சமைச்சு வைக்க வேண்டாமா?" என்று கூறியபோது, திருடனுக்குத் தேள் கொட்டியது போல், எதுவும் சொல்ல முடியாமல் கிளம்பினாள் சௌம்யா. வீட்டுக்குப் போய்த் தனக்காக ஏதேனும் சமைக்க வேண்டுமே என்று நினைத்தபோது, சௌம்யாவுக்கு எரிச்சலாக வந்தது.
சௌம்யா விட்டுக்குப் போனபோது, பரத் சோஃபாவில் அமர்ந்து மடிக்கணினியில் ஆழ்ந்திருந்தான். சௌம்யா உள்ளே நுழைந்ததை கவனித்தாலும், அவளை நிமிர்ந்து பார்க்காமல் வேலையில் ஆழ்ந்திருந்தான்
பரத் காட்டிய அலட்சியத்தால் ஏற்பட்ட கோபத்துடனும், சமையல் செய்ய வேண்டுமே என்ற எரிச்சலுடனும் சமையலறைக்குள் நுழைந்தாள் சௌம்யா. பரத்திடம் மன்னிப்புக் கேட்டு அவனை சமாதானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அடியோடு போய் விட்டிருந்தது.
சமையலறைக்குள் நுழைந்ததுமே ஏதோ வித்தியாசமாக உணர்ந்தாள் சௌம்யா. சமீபத்தில்தான் ஏதோ சமைக்கப்பட்டிருப்பது போன்ற மணம் வந்தது.
மேடை மீது வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களைத் திறந்து பார்த்தாள் சௌம்யா. ஹாட்பேக்கில் பட்டர்-நான், இரண்டு பாத்திரங்களில் காலிஃப்ளவர் சாப்ஸ் மற்றும் வெஜ் கிரேவி ஆகிய சைட் டிஷ்கள்!
பரத்தான் சமைத்து வைத்திருக்கிறான்!
இன்ப அதிர்ச்சியுடன் ஹாலுக்குப் போவதற்காக சௌம்யா திரும்பியபோது, அங்கே சத்தம் போடாமல் பரத் வந்து நின்று கொண்டிருந்தான்.
சட்டென்று அவளை அணைத்துக் கொண்ட பரத், "சாரி, சௌம்யா!" என்றான்.
சௌம்யாவுக்கு அழுகை வந்து விடும் போல் இருந்தது.
"நான்தான் சாரி சொல்லணும். நான் ரொம்ப லக்கி!" என்றாள் சௌம்யா.
"எதுக்கு? ஒரு அருமையான ஷெஃப் புருஷனாக் கிடைச்சதுக்கா?"
சௌம்யா வாய்விட்டுச் சிரித்தாள்.
"என்ன, அபிராமி ஆன்ட்டி வந்திருந்தாங்களா?" என்றான் பரத், குறும்பாகச் சிரித்தபடி.
"இதெல்லாம் உங்க ஏற்பாடுதானா? என் அம்மாவும் இதுக்கு உடந்தையா?" என்றாள் சௌம்யா, பொய்க் கோபத்துடன்.
"ஐயோ, மறுபடியும் கோவிச்சுக்கிட்டு எங்கிட்ட பேசாம இருந்துடாதே! ஆனா, அப்படிக் கோவிச்சுக்கிட்டாக் கூட நல்லதுதான். நாம அன்பு செலுத்தறவங்ககிட்ட சண்டை போட்டுட்டு மறுபடி சேந்துக்கறப்ப, வெயில்ல நடந்துட்டு வந்து, ஒரு நீரோடையில இறங்கித் தண்ணி குடிக்கிற மாதிரி இருக்கு. அதுவும், அந்தத் தண்ணி ஒரு மர நிழலுக்குப் பக்கத்தில இருந்தா எவ்வளவு குளிர்ச்சியா இருக்கும்!" என்றான் பரத்.
கற்பியல்