மருத்துவர் இல்லத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.
காரியின் முறை வந்ததும், அவன் உள்ளே போனான்.
"இரவில் தூக்கம் வருவதே இல்லை, மருத்துவர் ஐயா!" என்றான் காரி.
அவன் நாடியைப் பரிசோதித்த மருத்துவர், "உன் உடல் இயக்கம் சீராகத்தான் இருக்கிறது. ஒரு சூரணம் கொடுக்கிறேன். அதை நீரில் கரைத்துக் குடித்து விட்டு உறங்கு. நன்றாக உறங்குவாய்!" என்று சொல்லி, ஒரு குப்பியிலிருந்து ஒரு சிறிய மரக்கரண்டியால் சிறிதளவு சூரணத்தை எடுத்து, ஒரு சிறிய இலையில் வைத்து மடித்துக் கொடுத்தார்.
"ஐயா! ஒருவேளை நள்ளிரவில் விழிப்பு வந்தால், அப்போது மீண்டும் கொஞ்சம் சூரணம் அருந்தலாமா?" என்றான் காரி.
"நள்ளிரவில் விழித்துக் கொண்டால், உடனே மீண்டும் படுத்துக் கொள்ளப் போகிறாய். உடனே உறக்கம் வந்து விடுமே!"
"இல்லை, ஐயா! உடனே படுத்துக் கொள்ள மாட்டேன். ஒரு வேலை செய்து விட்டு, அப்புறம்தான் படுத்துக் கொள்வேன். அப்போது தூக்கம் வருவதில்லை. கடந்த சில நாட்களாக அப்படித்தான் நடக்கிறது!"
"நள்ளிரவில் தூக்கத்திலிருந்து எழுந்து கொண்டு செய்ய வேண்டிய அந்த வேலை என்ன?"
"என் காதலிக்கு மடல் எழுதுவது!"
"என்ன?" என்று சற்று அதிர்ச்சியுடன் கேட்ட மருத்துவர், "சரி. அது உன் சொந்த விஷயம். ஏன், அதைப் பகல் நேரத்தில் செய்யலாமே!" என்றார்.
"முடியாது, ஐயா. வீட்டில் மற்றவர்கள் இருப்பார்களே! அதனால் எல்லோரும் உறங்கிய பிறகு, சாளரத்தின் அருகே அமர்ந்து, அங்கு தெரியும் மங்கலான ஒளியில் மடல் எழுதுவேன். அதற்குப் பிறகு மீண்டும் உறங்க முயன்றால், உறக்கம் வருவதில்லை. கடந்த சில நாட்களாக அப்படித்தான் நடக்கிறது."
மருத்துவருக்கு முதலில் எழுந்தது கோபம்தான் என்றாலும், அந்தக் கோபத்தை மீறிய ஆவலில், "சில நாட்களாக என்றால்? தினமும் மடல் எழுத வேண்டிய அவசியம் என்ன?" என்றார்.
"ஒவ்வொரு நாளும் எழுதும் மடலை உடனே கிழித்து, அந்த ஓலையை நெருப்பில் போட்டு விடுவேனே!"
"ஏன் அப்படி?"
"என் காதலி அரண்மனையில் பணிப்பெண்ணாக இருக்கிறாள். ஒருநாள் இளவரசிக்காக ஏதோ பொருள் வாங்க அவள் அங்காடிக்கு வந்தபோதுதான் நான் அவளைப் பார்த்தேன், பேசினேன். என் காதலைக் கூறினேன். அவளும் அதை ஏற்றுக் கொண்டாள். ஆனால், அவள் மீண்டும் அரண்மனையை விட்டு எப்போது வெளியே வருவாள் என்பது அவளுக்கே தெரியாதாம்! அதனால்தான், அவளைப் பார்க்க முடியாமல், தினமும் அவளுக்கு மடல் எழுதுகிறேன். அதை அரண்மனையில் இருக்கும் அவளிடம் கொண்டு சேர்க்க முடியாது என்பதால், அதைக் கிழித்துப் போட்டு விட்டு, தினமும் புதிதாக இன்னொரு மடல் எழுதுகிறேன். அதனால் என் உறக்கம் கெட்டது!" என்றான் காரி.
"உனக்கு உறக்கம் கெட்டது. உன்னை நோயாளி என்று நினைத்து இவ்வளவு நேரம் பேசியதால் என் நேரம் கெட்டது. வெளியே காத்திருக்கும் நோயாளிகளின் நேரமும், உடல்நிலையும் ஒருங்கே கெட்டுக் கொண்டிருக்கின்றன. முதலில் இங்கிருந்து வெளியேறு!" என்று கோபமாகக் கூறிய மருத்துவர், காரியிடம் தான் கொடுத்த சூரணப் பொட்டலத்தை அவன் கையிலிருந்து பிடுங்கி, அதைப் பிரித்து, அதிலிருந்த சூரணத்தை அதற்குரிய குப்பியில் கொட்டினார்.
பொருள்:
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக, என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.