"ஆமாம்" என்ற குமரி, 'ஆனால் ஒரு சில நாட்களில் இந்த வளையல்களும் தளர்வானவை ஆகி விடும். அப்புறம் இன்னும் சிறிய வளையல்களைத்தான் வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டும்!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
"உன் காதலனுக்குக் கெட்ட பேர் வந்துடக் கூடாதுங்கறதுக்காக ரொம்பவும்தான் முயற்சி செய்யற!" என்றாள் யாமினி.
"என்னடி சொல்ற?"
"ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காதே! உன் காதலன் ஊருக்குப் போனதிலேந்து, அவன் பிரிவைத் தாங்க முடியாம, நீ இளைச்சுக்கிட்டே வரே! வளையல்கள் எல்லாம் தளர்வாப் போய்க்கிட்டே இருக்கு. உன் தோள்கள் இளைச்சு, எலும்பு தெரியுது. இதையெல்லாம் பாக்கறவங்க, 'பாவம் இந்தப் பொண்ணை இப்படித் தவிக்க விட்டுட்டுப் போயிட்டானே இவளோட காதலன்! அவன் ரொம்பக் கொடியவனாத்தான் இருக்கணும்'னு சொல்லிடக் கூடாதேங்கறதுக்காக, அடிக்கடி சின்ன வளையல், இன்னும் சின்ன வளையல்னு வாங்கிப் போட்டுக்கிட்டிருக்க. உன் தோள் எலும்பு தெரியாம இருக்க, உன் ரெண்டு தோளையும் சேலைத் தலைப்பால மூடிக்கிட்டிருக்க. எனக்குத் தெரியாதா இது?"
"என்னடி செய்யறது? என் காதலன் என்னைப் பிரிஞ்ச துயரத்தைக் கூடப் பொறுத்துப்பேன். ஆனா, அவரைக் கல் மனசுக்காரர்னு மத்தவங்க சொல்றதை என்னால பொறுத்துக்க முடியலையே!" என்றாள் குமரி, கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டே!
கற்பியல்
உறுப்பு நலனழிதல்
பொருள்:
வளையல்கள் கழன்று, தோள்களும் மெலிவடைவதால், (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.