Monday, August 24, 2020

1120. மலரும் முள்ளாகும்!

"அங்கே ஒரு அழகான தோட்டம் இருக்கிறதே, அங்கே போகலாமா?" என்றாள் மலர்க்கொடி.

"போகலாம். ஆனால், நாம் அங்கே போனால், அங்கே இருப்பவர்கள் எல்லாம் தோட்டத்தின் அழகை ரசிப்பதை விட்டு விட்டு, உன் அழகை ரசிக்க ஆரம்பித்து விடுவார்களே!" என்றான் மணிவண்ணன்.

"நீ இப்படியெல்லாம் பேசுவதாக இருந்தால், இனி உன்னுடன் எங்கும் வர மாட்டேன். இப்போதே வீட்டுக்குப் போகிறேன்!" என்றாள் மலர்க்கொடி, பொய்க் கோபத்துடன்.

"மன்னித்து விடுங்கள் மகாராணி! இனிமேல் அப்படி எல்லாம் பேச மாட்டேன். அந்தத் தோட்டம் இங்கிருந்து சில நூறு அடிகள் இருக்கிறதே! அதுவரை நடந்தால், உன் பாதம் கன்றி விடுமே! நான் வேண்டுமானால், உன்னைத் தூக்கிக்கொண்டு வரட்டுமா?"

"இப்போதுதான் சொன்னாய், இது போன்ற கேலிப் பேச்செல்லாம் பேச மாட்டேன் என்று. நான் வீட்டுக்குப் போக வேண்டும் என்பதுதான் உன் விருப்பம் போலிருக்கிறது!"

"ஐயையோ வேண்டாம். இனிமேல் இப்படியெல்லாம் பேச மாட்டேன். நீ வேண்டுமானால், மல்லிகையின் இதழைப் போன்ற உன் கையால் என் வாயைப் பொத்தியபடியே வா!"

"நீ ஓய மாட்டாய்!" என்று சிரித்தபடியே சொல்லி விட்டுத் தோட்டத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் மலர்க்கொடி.

ருவரும் பேசிக் கொண்டே தோட்டத்தில் நடந்தார்கள்.

"ஆஹா! அனிச்ச மலர்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!" என்றாள் மலர்க்கொடி

"ஆமாம்! அவை உன்னைப் போல்தான். அபாரமான அழகு, ஆனால் தொட்டால் சிணுங்கி!" என்றான் மணிவண்ணன்.

மலர்க்கொடி அவன் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவள் போல், "இங்கே இத்தனை அன்னங்கள் நடந்து கொண்டிருக்கின்றனவே! எவ்வளவு அழகான காட்சி!" என்றாள்.

"ஆமாம். ஆனால், அவை உன்னைப் பார்த்து நடை பழகுகின்றன என்ற உண்மையை நான் சொன்னால், நீ கோபித்துக் கொள்வாய்!"

அவனுக்கு பதில் சொல்ல வாய் திறந்த மலர்க்கொடி, திடீரென்று, 'ஆ' என்று கூவியபடியே, தரையில் அமர்ந்தாள்.

"என்ன ஆயிற்று?" என்றான் மணிவண்ணன், பதற்றத்துடன்.

"காலில் ஏதோ குத்தி விட்டது" என்றாள் மலர்க்கொடி, தன் பாதத்தைத் தன் கையால் தடவியபடியே.

"மெதுவாக. வெண்தாமரை போன்றிருந்த உன் பாதம், இப்போது செந்தாமரை போல் ஆகி விட்டதே! நல்லவேளை, ரத்தம் வரவில்லை. வைத்தியர் வீடு அருகில்தான் இருக்கிறது. வா போகலாம்" என்றான் மணிகண்டன், அவள் கையைப் பிடித்து, அவளை எழுந்து நிற்கச் செய்ய முயன்றபடி.

"என்னால் அவ்வளவு தூரம் நடக்க முடியுமா என்று தெரியவில்லை" என்றாள் மலர்க்கொடி, அவன் கையை உதறியபடி.

"நான் தூக்கிக்கொண்டு செல்கிறேன் என்று சொன்னால், நீ கோபித்துக் கொள்வாய்."

மலர்க்கொடி மீண்டும் அவனை முறைத்துப் பார்த்து விட்டு, "சற்று நேரம் உட்கார்ந்து விட்டுப் போனால் சரியாகி விடும்" என்றாள்

"அதுவும் சரிதான். வைத்தியர் வீட்டுக்குப்போனால் அவர் சிரிக்கப் போகிறார்."

"எதற்குச் சிரிக்க வேண்டும்?"

"பின்னே? கீழே உதிர்ந்து கிடக்கும் அனிச்சம்பூவின் இதழ்களும், அன்னப்பறவையின் இறகுகளும் பட்டு, உன் கால் நொந்து போயிருப்பதைக் கண்டு சிரிக்க மாட்டாரா என்ன?" என்றான் மணிகண்டன். 

மலர்க்கொடி கோபம் கொண்டவளாக, விருட்டென்று எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 112
நலம் புனைந்துரைத்தல்   

குறள் 1120
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

பொருள்:
அனிச்ச மலரும், அன்னத்தின் இறகும், இந்தப் பெண்ணின் காலடிக்கு நெருஞ்சி முள் போன்றவை.

Read 'Flower Becomes A Thorn' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Sunday, August 23, 2020

1119. காதலிக்குக் கிடைத்த பரிசு!

"நம் புலவர் எப்போதுமே வித்தியாசமாகக் கற்பனை செய்பவர். பொதுவாக, எல்லோரும் பெண்களின் முகத்தை நிலவுக்கு ஒப்பிடுவார்கள். ஆனால், நம் புலவர் இந்த வழக்கத்தை மாற்றி, நிலவு தன் காதலியின் முகத்தை ஒத்திருக்கிறது என்று எழுதி இருக்கிறார்!" என்றார் அமைச்சர்.

"புலவரே! உங்களுக்கு உண்மையிலேயே காதலி இருக்கிறளா, அல்லது, அது கூட உங்கள் பாடலைப் போல் ஒரு கற்பனையான விஷயமா?" என்றான் அரசன்.

புலவர் சற்று திடுக்கிட்டவராக, "இருக்கிறாள் அரசே! அவள் முக அழகு நிலவின் அழகை மிஞ்சுவதாக எனக்குத் தோன்றியதால்தான் இப்படி எழுதினேன்" என்றார்.

"உங்களைப் பொருத்தவரை, நீங்கள் எழுதியது சரியாக இருக்கலாம். ஆனால், நிலவு என் காதலியின் முகத்தை ஒத்தது என்று நான் எப்போதும் சொல்ல மாட்டேன்."

"ஏன் அரசே?"

"ஏன் என்பதை நீங்களே சிந்தித்துப் பார்த்துக் கண்டு பிடித்து நாளை கூறினால், உங்கள் பாடலுக்கு நான் இரு மடங்கு பரிசளிக்கிறேன்!" என்றான் மன்னன்.

ரவு முழுவதும் யோசித்தும், புலவரால் மன்னன் கூறியதற்கான காரணத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. 

காலையில் எழுந்ததும், தன் காதலியைத் தேடிப் போனார் புலவர். மன்னர் கூறியதை அவளிடம் சொல்லி விட்டு, மன்னர் அப்படிக் கூறியதற்கான காரணத்தைத் தன்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதை அவளிடம் தெரிவித்தார்.

"இதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்?" என்றாள் காதலி.

"உனக்கு ஏதாவது தோன்றுகிறதா என்று பார்க்கத்தான்!"

"புலவரான உங்களுக்குத் தோன்றாத சிந்தனை, தமிழ் இலக்கியம் பயின்று வரும் மாணவியான எனக்கு எப்படித் தோன்றும்?" 

"நீ தமிழ் இலக்கியம் பயின்று வருகிறாயே! நீ படித்தவற்றில் இது போன்ற சிந்தனை ஏதாவது வந்திருந்தால், அதை நினைவுபடுத்திச் சொல்லேன்!"

"அப்படியானால், மன்னர் தான் எங்கோ படித்ததை வைத்துத்தான் இப்படிச் சொல்கிறார் என்று நினைக்கிறீர்களா?" என்றாள் அவள், சிரித்துக் கொண்டே.

"நீ சிரிப்பதைப் பார்த்தால், உனக்கு இதற்கு விடை தெரிந்திருக்கும் போலிருக்கிறதே!"

"நான் படித்ததும், மன்னர் படித்ததும், நீங்களும் படித்ததாகத்தானே இருக்கும்?"

புலவர் கையைச் சொடக்கியபடியே, "நான் உன்னைத் தேடி வந்த்து வீணாகவில்லை. நீ எனக்கு வழி காட்டி விட்டாய்!" என்று சொல்லியபடியே, அவளிடம் விடை பெற்று விரைந்தார்.

"என்ன புலவரே, நேற்று நான் சொன்னதற்கு விடை கண்டு விட்டீர்களா?  என்றான் அரசன்.

"கண்டு விட்டேன் அரசே! நிலவை என் காதலியின் முகத்துடன் ஒப்பிட்டது என் தவறுதான். நிலவு பலரும் காணும் வகையில் உலா வருகிறது. என் காதலியின் முக தரிசனம் எனக்கு மட்டுமே கிடைக்கக் கூடியது. எனவே, பலரும் காணும்படி தோன்றாமல் இருந்தால்தான், நிலவை என் காதலியின் முகத்துடன் ஒப்பிட முடியும்!"

"நன்று புலவரே! நான் கூறியபடி, இரு மடங்கு பரிசுத்தொகையை உங்களுக்கு அளிக்கிறேன்" என்று சொல்லியபடியே, பரிசுப்பையை எடுத்தான் அரசன்.

"வேண்டாம் மன்னரே! இது நான் சிந்தனை செய்து கண்டுபிடித்த கருத்தல்ல. திருவள்ளுவர் கூறிய கருத்துத்தான் இது. அதுவும், இதை நான் தேடிக் கண்டுபிடிக்க உதவியது என் காதலிதான்" என்றார் புலவர்.

"அதனால் என்ன, புலவரே? நாம் எந்தக் கருத்தைக் கூறினாலும், அது ஏற்கெனவே திருவள்ளுவர் கூறியதாகத்தான் இருக்கும்! விடை கண்டுபிடிக்க உங்களுக்கு உதவிய உங்கள் காதலிக்கே இந்தப் பரிசைக் கொடுத்து விடுங்கள்!" என்று சொல்லிப் பரிசுப்பையைப் புலவரிடம் அளித்தான் அரசன். 

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 112
நலம் புனைந்துரைத்தல்   

குறள் 1119
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.

பொருள்:
நிலவே! மலர் போன்ற கண்களை உடைய என் என் காதலியின் முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படி தோன்றாதே!

Read 'A Reward To the Lover!' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Friday, August 14, 2020

1118. என்னைக் கொஞ்சம் காதலி!

"என்னருமைக் காதலிக்கு, வெண்ணிலாவே!
நீ இளையவளா மூத்தவளா, வெண்ணிலாவே?"

"நல்லாவே பாடறே!"

மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு, கண்களை மூடியபடி, தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்த விக்ரம், திடுக்கிட்டுக் கண்விழித்து, குரல் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தான். 

மொட்டை மாடியில் வேறு யாரும் இல்லை. அத்துடன், குரல் எங்கோ மேலிருந்து வருவது போல் இருந்தது.

மேலே வானம்தானே இருக்கிறது! 

"நான்தானப்பா! என்னைப் பத்தித்தானே பாடிக்கிட்டிருந்த?"

யார் பேசுவது? நிலவா? அது எப்படி முடியும்?

வானத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த நிலவின் ஓரத்தை ஒரு மேகத் துகள் தொட்டுச் சென்ற நிகழ்வு, நிலவு அவனைப் பார்த்துக் கண்ணடிப்பது போல் இருந்தது.

"பாவம்! காதலி ஊருக்குப் போயிட்டா போல இருக்கு!"

இப்போது சந்தேகமே இல்லை. குரல் நிலவிலிருந்துதான் வருகிறது! 'இது எப்படி நடக்க முடியும்?' என்ற சிந்தனை மனதின் ஒரு ஓரத்தில் எழுந்ததைப் புறக்கணித்து விட்டு, "அது எப்படி உனக்குத் தெரியும்?" என்றான் விக்ரமன், நிலவைப் பார்த்து.

"அதுதான் நேத்து ராத்திரி விடைபெறும் படலம் நடந்ததே! திறந்த வெளியில இப்படியா நடந்துப்பீங்க! நானே சில காட்சிகளைப் பாக்க முடியாம, மேகத்தில போய் ஒளிஞ்சுக்க வேண்டி இருந்தது!" என்றது நிலவு.

விக்ரம் சங்கடத்துடன் நெளிந்தான். யாருமே இல்லை என்று நினைத்துத்தானே கொஞ்சம் தாராளமாக நடந்து கொண்டோம்!

"காதலி ஊருக்குப் போயிட்டதால, இப்ப தனிமையில வாடறீங்களோ?" என்றது நிலவு.

ஆமாம் என்பது போல், விக்ரம் அனிச்சையாகத் தலையை ஆட்டினான். அப்புறம்தான், தான் தலையாட்டியதை, அவ்வளவு தூரத்திலிருந்து நிலவால் பார்க்க முடியுமா என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது.

"உன் காதலி திரும்பி வர வரையிலும் என்னைக் காதலியேன்!" என்றது நிலவு.

விக்ரமன் பெரிதாகச் சிரித்து விட்டு, "அது மட்டும் முடியாது!" என்றான்.

"ஏன், நான் அழகா இல்லையா என்ன?" என்றது நிலவு.

"உன் அழகுக்கென்ன? வட்டமான முகம்! ஆனா..."

"ஆனா என்ன?"

"நேத்து என் காதலியைப் பாத்தியே, அவ முகத்தில எவ்வளவு ஒளி இருந்ததுன்னு பாத்திருப்பியே! அதில பாதி ஒளி கூட உன் முகத்தில இல்லையே!" என்றான் விக்ரம்.

கோபத்தினாலும், அவமானத்தினாலும், நிலவு சட்டென்று ஒரு பெரிய மேகத்துக்குள் தன் முகத்தை மறைத்துக் கொண்டது.

யாரோ தன்னை உலுக்குவதை உணர்ந்து, திடுக்கிட்டுக் கண் விழித்தான் விக்ரம்.

"ஏண்டா, மொட்டை மாடியில படுத்துத் தூங்காதேன்னு எவ்வளவு தடவை சொல்லி இருக்கேன்? சளி பிடிக்கும். எழுந்து உள்ள வா!" என்றாள் அவனை உலுக்கி எழுப்பிய அவன் அம்மா.

விக்ரம் சற்றுக் குழப்பத்துடன் வானத்தைப் பார்த்தான். மேகத்திலிருந்து தயக்கத்துடன் வெளியே வந்து கொண்டிருந்த நிலா, மங்கலான ஒளியை அவன் மீது வீசியது.
காமத்துப்பால்
களவியல் 

அதிகாரம் 112
நலம் புனைந்துரைத்தல்   

குறள் 1118
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.

பொருள்:
நிலவே! என் காதலியின் முகத்தைப் போல் உன்னால் ஒளி விட முடியுமென்றால், நீயும் என் காதலுக்கு உரியவள் ஆவாய்.

Read 'Love Me!' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Thursday, August 6, 2020

1117. புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே!

தன் நண்பனோடு விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்தது அரசி நந்தினியின் காதில் விழுந்து, அவளைக் கோபமடையச் செய்யும் என்று அரசன் கஜவர்மன் எதிர்பார்க்கவில்லை.

வெளியூரிலிருந்து வந்திருந்த தன் நண்பன் குலதீபனுடன், நந்தவனத்தில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தான் கஜவர்மன். 

ஒரு கட்டத்தில், பேச்சு பெண்களைப் பற்றித் திரும்பியது. புலவர்கள் பெண்களை எப்படியெல்லாம் வர்ணிக்கிறார்கள் என்பது பற்றி நண்பர்கள் இருவரும் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"பெண்களின் முகத்தை நிலவுக்கு ஒப்பிட்டுப் பேசுவதைப் போன்ற பொய் வேறு எதுவும் இல்லை. என் மனைவியின் முகம் நிலவைப் போன்று இருப்பதாக நான் எப்போதும் சொல்ல மட்டேன்" என்று சொல்லிச் சிரித்தான் கஜவர்மன்.

அப்போது, அருகில் செடிகளின் சல சலப்புச் சத்தம் கேட்டது. கஜவர்மன் திரும்பிப் பார்த்தபோது, நந்தினி வேகமாகப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தான், 

தன்னைத் தேடி நந்தவனத்துக்கு வந்த நந்தினி, தான் பேசியதைக் கேட்டுக் கோபித்துக் கொண்டு திரும்பிப் போய் விட்டாள் என்பது கஜவர்மனுக்குப் புரிந்தது. மனைவியை எப்படிச் சமாதானப்படுத்தப் போகிறோம் என்று கவலைப்படத் துவங்கினான் அவன்.

ண்பன் விடைபெற்றுப் போனதும், மனைவியைச் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன், அவளைத் தேடிச் சென்றான் கஜவர்மன். 

"நான்தான் அழகானவள் இல்லையே! என்னை ஏன் தேடி வந்தீர்கள்?" என்றாள் நந்தினி, கோபத்துடன்.

"நீ அழகில்லாதவள் என்று எப்போது சொன்னேன்?"

"என் முகம் நிலவுக்கு ஒப்பானது என்று எப்போதும் சொல்ல மாட்டேன் என்று சொன்னீர்களே, அதற்கு என்ன பொருள்?"

"உன் முகம் நிலவை விட அழகானது என்பதைத்தான் அப்படிச் சொன்னேன்!"

"பொய் சொல்லாதீர்கள்!" என்று சொல்லித் தன் அறைக்குள் போய் கதவைத் தாளிட்டுக் கொண்டாள் ந்ந்தினி.

கஜவர்மன் யோசனையில் ஆழ்ந்தான்.

றுநாள், அரசவையில் ஒரு நிகழ்ச்சி இருந்ததால், நந்தினி அரசவைக்கு வந்து, அரசனுக்குப் பக்கத்தில் இருந்த தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அரசனிடம் அவளுக்குக் கோபம் தணியவில்லை என்பதைக் காட்டிக் கொள்வது போல், அவனைப் பார்க்காமல், நேரே அவையைப் பார்த்தபடி அமர்ந்தாள்.

கஜவர்மனும் அவளிடம் பேச முயற்சி செய்யவில்லை.

ஆடல் பாடலுக்குப் பிறகு, புலவர்கள் தாங்கள் எழுதிய பாடல்களைப் பாடினர். ஆர்வமின்றிக் கேட்டுக் கொண்டிருந்த நந்தினி, ஒரு புலவர் பாடிய பாடலைக் கேட்டதும், வியப்படைந்தவளாகப் பக்கத்தில் இருந்த கணவனைத் திரும்பிப் பார்த்தாள்.

கஜவர்மன் அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான்.

"புலவரே! இப்போது நீங்கள் பாடிய பாடலின் பொருளைக் கூற முடியுமா?" என்றாள் நந்தினி.

"கூறுகிறேன், அரசியாரே! முழு நிலவு அரசியாரின் முகத்தைப் பார்த்து, அது தன் முகத்தை விட அழகாக இருக்கிறதே என்று நினைக்கிறது. தன் முகத்தில் இருக்கும் களங்கம்தான் தன் அழகைக் குறைத்துக் காட்டுகிறது என்று நினைத்து, அதைத் தேய்த்து அகற்றப் பார்க்கிறது. களங்கம் போகாததால், தினமும் தேய்க்கிறது. இதனால், அதன் முகமே கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து போகிறது. பிறகு, சிறிது சிறிதாக வளர்ந்து, முகம் முழுமை அடைகிறது. மீண்டும் இதே செயல் தொடர்கிறது." 

"நல்ல கற்பனை புலவரே உங்களுக்கு!" என்று மலர்ந்த முகத்துடன் புலவரைப் பாராட்டிய நந்தினி, "ஆமாம், இந்தப் பாடலை இதற்கு முன் வேறு எங்காவது பாடி இருக்கிறீர்களா?" என்றாள்.

"வேறு எங்கும் பாடவில்லை, அரசி. ஆயினும், இது தங்களைப் பற்றிய பாடல் என்பதால், அவையில் பாடுமுன், நேற்று மன்னரிடம் தனியே பாடிக் காட்டி, அவையில் பாட அவருடைஒப்புதலைப் பெற்றேன்" என்றார் புலவர். 

"ஓ, அப்படியா!" என்ற அரசி, கஜவர்மனைத் திரும்பிப் பாரத்துப் புன்னகை செய்தாள். 'புலவரின் பாடலைத்தான் நேற்று நீங்கள் குறிப்பிட்டீர்கள் என்று தெரியாமல், உங்களிடம் கோபப்பட்டு விட்டேனே' என்று அவனிடம் வருத்தம் தெரிவிப்பதாக இருந்தது அந்தப் புன்னகை.

வை நிகழ்ச்சிகள் முடிந்ததும், தனிமையில் இருந்த அரசனிடம் வந்த புலவர், "அரசே! நீங்களே ஒரு பாடல் எழுதிக் கொடுத்து, நான் எழுதியதாக அதை அவையில் பாடச் சொல்லி விட்டு, அதற்கு எனக்குப் பரிசும் அளித்திருக்கிறீர்களே!" என்றார்.

"புலவரே! பரிசு பாடலுக்கல்ல, நான் எழுதிக் கொடுத்த பாடலை நீங்களே எழுதியதாகப் பொய் சொல்லி அவையில் பாடி, அரசிக்கு என் மீது இருந்த கோபத்தைப் போக்கியதற்கு!" என்று சொல்லிச் சிரித்தான் கஜவர்மன்.

அரசன் சொன்னது புலவருக்கு விளங்கவில்லை!

காமத்துப்பால்
களவியல் 

அதிகாரம் 112
நலம் புனைந்துரைத்தல்   

குறள் 1117
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.

பொருள்:
தேய்ந்து, பிறகு தேய்ந்த பகுதிகள் படிப்படியாக நிறைவு பெறும் நிலவின் முகத்தில் உள்ளது போல், இந்தப் பெண்ணின் முகத்தில் களங்கம் உண்டோ, இல்லையே!

Read 'The Perplexed Poet' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Monday, August 3, 2020

1116. விண்மீன்களின் குழப்பம்!

"மொட்டை மாடியில் உக்காந்து பேசறது தனி சுகம்தான்."

"ஆமாம். ஆனா, இன்னிக்கு நிலா இருக்கே! நிலா இல்லாம இருட்டா இருந்தா, இன்னும் நல்லா இருந்திருக்கும்!"

"என்ன உளறரே? காதலர்கள் நிலா வெளிச்சத்தை விரும்பறதுதானே இயல்பு?"

"அது சரிதான். ஆனா, சில சமயம் வெளிச்சம் இடைஞ்சலா இருக்கே! இப்ப நான் உன்னைத் தொடணும்னா, அக்கம் பக்கத்து மாடிகள்ளேந்து யாராவது பாத்துடுவாங்களோன்னு பயந்துகிட்டே தொடணும். இருட்டா இருந்தா, கொஞ்சம் தைரியமாத் தொடலாமே!"

"ஐயே! மாடியிலேந்து பாக்கறப்ப, வானம், நிலா, நட்சத்திரங்கள் எல்லாம் எவ்வளவு அழாகா இருக்குன்னு பாக்கறதை விட்டுட்டு, அலையறதைப் பாரு!"

"சரிம்மா! வான இயல் ஆராய்ச்சியே பண்ணலாம். அதுக்குத்தானே மொட்டை மாடிக்கு வந்திருக்கோம்!"

"எனக்கு சின்ன வயசிலேந்தே வானத்தைப் பாக்கறதில ஆர்வம் உண்டு."

"எனக்குக் கூட! சின்ன வயசில நான் தெருவில நடக்கறப்பவே, மேலே பாத்துக்கிட்டுத்தான் நடப்பேன். என் நண்பர்கள் எல்லாம் 'டேய், தரையைப்பாத்து நடடா, பள்ளத்தில எங்கேயாவது விழுந்துடப் போறே!'ன்னு கிண்டல் பண்ணுவாங்க!"

"இப்ப, நீதான் என்னைக் கிண்டல் பண்ணிக்கிட்டிருக்க! இப்படியே பேசிக்கிட்டிருந்தேன்னா, நான் கீழே இறங்கிப் போயிடுவேன்."

"சாரி கண்ணே, கோவிச்சுக்காதே! இனிமே சீரியஸாவே பேசறேன். சொல்லு!"

"அங்கே ஒரு நட்சத்திரக் கூட்டம் தெரியுது பார்!"

"ஆமாம், ஏழு நட்சத்திரம். அதை சப்தரிஷி மண்டலம்னு சொல்லுவாங்க."

"கரெக்ட். பரவாயில்லையே! உனக்குக் கூட இதெல்லாம் தெரிஞ்சிருக்கே!"

"அதான் நான் அப்பவே சொன்னேனே, சின்ன வயசிலேயே நான் வானத்தைப் பாத்துக்கிட்டுத்தான் நடப்பேன்னு!"

"மறுபடி ஆரம்பிச்சுட்டியா? கொஞ்சம் நான் சொல்றதைக் கேளு! அந்த நட்சத்தரக் கூட்டத்தோட வால் பகுதி மாதிரி ஒண்ணு இருக்கில்ல?"

"ஆமாம்!"

"கொஞ்ச நேரம் கழிச்சுப் பாத்தா, அந்த வால் பகுதி இந்தப் பக்கமா திரும்பி இருக்கும்!"

"அப்படியா?"

"ஆமாம். நான் எத்தனையோ தடவை பாத்திருக்கேன்."

"ஆனா, நான் பாத்ததில்லையே! நான் பாக்கறப்ப அப்படி நடக்காதுன்னு நினைக்கிறேன்!" 

"அது எப்படி நடக்காம இருக்கும்? நீ ரொம்ப நேரம் பாத்திருக்க மாட்டே!"

"இல்லை. நான் எவ்வளவு நேரம் பாத்தாலும், அப்படி நடக்காது. ஆனா நீ பாத்தா, கண்டிப்பா நடக்கும்!"

"அது எப்படி?"

"இப்ப அந்த வால் பகுதி நிலாவுக்கு எதிர்ப்புறமா இருக்கு இல்ல?" 

"ஆமாம்."

"அப்படின்னா, அந்த நட்சத்திரக் கூட்டத்தோட முகம் நிலாவைப் பாத்துக்கிட்டு, அதை நோக்கிப் போற மாதிரி இருக்கு இல்லையா? ஏன் அப்படி?"

"ஏன்னா, அது இயற்கையா அப்படித்தான்!"

"எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு, காதலி! நட்சத்திரங்களுக்கு நிலாகிட்ட ஒரு ஈர்ப்பு இருக்கு. அதனாலதான், அந்த நட்சத்திரங்கள் நிலாவை நோக்கிப் போகத் தயாரா இருக்கு!"

"ஓஹோ!"

"இப்ப, அந்த நட்சத்திரங்கள் இன்னொரு நிலாவைப் பாத்தா எப்படி இருக்கும்?"

"வானத்தில ஒரு நிலாதானே!"

"வானத்தில ஒரு நிலாதான். ஆனா, இப்ப பூமியிலேந்து ஒரு நிலா தெரியுது, அதாவது என் காதலியோட முகம்! இப்ப, நட்சத்திரங்களுக்கு இது நிலாவா, அது நிலாவான்னு குழப்பம் வந்து, பூமியில தெரியற நிலாவைப் பாத்து, முகத்தை இந்தப் பக்கம் திருப்புது. அதனால, வாலும் திரும்புது! இது நீ இருக்கறப்பதான் நடக்கும். நான் இருக்கறப்ப எப்படி நடக்கும்?"

"டேய்! இது உனக்கே ரொம்ப ஓவராத் தெரியல?"

"ஓவரா? அங்க பாரு. ஒரு நட்சத்திரம் உன் முகத்தைப் பாத்துட்டு, உங்கிட்ட வரதுக்காகக் கீழே விழுந்துக்கிட்டிருக்கு பாரு!"

அவன் வானத்திலிருந்து விழுந்து கொண்டிருந்த ஒரு எரி நட்சத்திரத்தைக் காட்ட, அவள் பக்கத்திலிருந்த ஒரு சிறிய குச்சியை எடுத்து, அவன் கையில்  செல்லமாக அடித்தாள்.

காமத்துப்பால்
களவியல் 

அதிகாரம் 112
நலம் புனைந்துரைத்தல்   

குறள் 1116
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.

பொருள்:
வானத்தில் உள்ள விண்மீன்கள், நிலவுக்கும் இவள் முகத்துக்கும் வேறுபாடு தெரியாமல், தங்கள் நிலையில் இல்லாமல் குழம்பியபடி திரிகின்றன.

Read 'The Confused Stars' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...