"அப்படியெல்லாம் இருக்காது. ஆமாம், உங்க பொண்ணுக்கு அஞ்சாறு மாசம் முன்னாலதானே கல்யாணம் ஆச்சு? என்னைக் கூடக் கூப்பிட்டிருந்தீங்க. ஆனா என்னால வர முடியல. அவ புருஷனோடதானே இருக்கா?" என்றார் வைத்தியர்.
"ஆமாங்க. கல்யாணம் ஆயிடுச்சு. ஆனா கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே, அவ புருஷன் மலைத்தோட்டத்தில வேலைக்குப் போயிட்டான். ஒரு வருஷம் கழிச்சுத்தான் வருவான். அதனால, அவ இப்ப எங்க வீட்டிலதான் இருக்கா. கணவனைப் பிரிஞ்சிருக்கறதால அவளுக்கு புத்தி பேதலிச்சுடுச்சோன்னு எனக்கு பயமா இருக்கு!" என்றாள் பொன்னி.
"கணவனைப் பிரிஞ்சு இருக்கறதால, ராத்திரியில சரியா தூங்காம இருந்திருப்பா. அதனால, பகல் நேரத்தில கண் எரிச்சல்ல அப்பப்ப கண்ணை மூடிக்கிட்டு உக்காந்துக்கிட்டிருக்கான்னு நினைக்கறேன். கண் எரிச்சலினால கண்ணில தண்ணி வரது இயல்புதானே! உங்க பொண்ணு வந்திருக்காளா?" என்றார் வைத்தியர்.
"வந்திருக்கா. வாசல்ல உக்காரச் சொல்லி இருக்கேன்."
"உள்ள வரச் சொல்லுங்க. நான் அவகிட்ட பேசிப் பாக்கறேன்."
"நானும் கூட இருக்கலாமா?" என்றாள் பொன்னி.
"கண்டிப்பா. அப்பதான் அவ பிரச்னை என்னன்னு உங்களுக்குப் புரியும்!"
"உன் பேர் என்னம்மா?" என்றார் வைத்தியர்.
"யமுனா."
"அம்மா பேரு பொன்னி, மகள் பேரு யமுனா. நல்ல பெயர்ப் பொருத்தம்... ராத்திரி நல்லா தூங்கறியாம்மா?"
"ஓ, தூங்கறேனே!" என்றாள் யமுனா.
வைத்தியர் தன் அனுமானம் தவறாகப் போனதை உணர்ந்து, பொன்னியைப் பார்த்தார். பொன்னி மௌனமாக இருந்தாள்.
"அப்புறம் ஏன் பகல்ல அடிக்கடி கண்ணை மூடிக்கற? கண் எரிச்சலா இருக்கா?"
"என் புருஷன் ஏதோ ஒரு மலைத்தோட்டத்தில இருக்காரு. அது எங்கே இருக்குன்னு தெரியாது. ஆனா, என் மனசு முழுக்க அவர்கிட்ட இருக்கு. கண்ணை மூடிக்கிட்டா, மலைத்தோட்டத்தோட காட்சி என் மனசில தெரியுது. அதில அவர் வேலை செய்யற காட்சி தெரியுது. அவரைப் பாத்துக்கிட்டே இருக்கேன். அது மகிழ்ச்சியா இருக்கு. ஆனா கண்ணைத் திறந்தா, அதைப் பாக்க முடியலியே! என் மனசால அவர் இடத்துக்குப் போக முடியுது, ஆனா என் கண்களால அங்கே போக முடியலியே! அதை நினைச்சுதான் கண்ணில தண்ணி வருது!"
என்ன சொல்வதென்று தெரியாமல் ஒரு நிமிடம் மௌனமாக இருந்த வைத்தியர், "ஆமாம். ராத்திரி நல்லாத் தூங்கறேன்னியே, அவரை நினைச்சுத் தூக்கம் வராம போகலியா?" என்றார்.
"இல்லையே! தூங்கினா, கனவில அவர்தானே வராரு? அதனாலதான், படுத்தவுடனேயே தூங்கிடறேன்!" என்றாள் யமுனா.
சட்டென்று எழுந்த பொன்னி, "வரேன் வைத்தியரே!" என்று வைத்தியரிடம் சொல்லி விட்டு, "வாடி போகலாம்!" என்று மகளின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.
கற்பியல்
பொருள்:
என் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்த மாட்டா.