"இந்திரகுமாரி! என்ன ஒரு பெயர்!" என்றான் படைத்தலைவன் கார்த்தவீரியன்.
"பெயரைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள், படைத்தலைவரே! என் பெயர்தான் இந்திரகுமாரி. ஆனால் என் தந்தை இந்திரர் அல்ல, உங்களைப் போல் போர்க்கலைகள் தெரிந்த தந்திரரும் அல்ல. சிறு இயந்திரங்களை வைத்துக் கொண்டு படைக்கலன்களைத் தயாரிக்கும் ஒரு எந்திரர், அவ்வளவுதான்!" என்றாள் இந்தரகுமாரி.
"உன் பேச்சைக் கேட்கும்போது, உன் தந்தை தமிழில் தேர்ந்தவர் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. படைப்புக் கலையிலும் தேர்ந்தவர்! போர்க்களத்தில் எனக்குத் துணை செய்ய இரும்பாலான படைக்கலன்களை உருவாக்குவது போல், வாழ்க்கையில் எனக்குத் துணை நிற்க, பொன்னாலான இந்தக் கலத்தையும் அல்லவா உருவாக்கி இருக்கிறார்!"
கார்த்தவீரியனின் சொற்கள் இந்தரகுமாரிக்குப் புல்லரிப்பை ஏற்படுத்தின.
"என் தந்தையிடம் எப்போது இந்தப் பொற்கலத்தைக் கேட்டுப் பெறப் போகிறீர்கள்?"
"நான் ஒரு படைத்தலைவனாக இருந்தாலும், இது போன்ற விஷயங்களில் அதிகத் தயக்கம் உள்ளவன். உன் தந்தையிடம் பேசக் கொஞ்சம் தைரியத்தைத் திரட்டிக் கொள்ள சிறிது அவகாசம் கொடு."
"போருக்குப் போ என்று அரசர் உத்தரவிட்டால், கணத்தில் சைனியத்தைத் திரட்டும் ஆற்றல் பெற்ற தளபதி, தைரியத்தைத் திரட்ட அவகாசம் கேட்கிறார்! உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது படைத்தலைவரே!" என்று சிரித்தாள் இந்தரகுமாரி.
அன்று அரசரைப் பார்க்க அரண்மனைக்குச் சென்ற கார்த்தவீரியனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அரசருடன் அரசி, இளவரசி, அமைச்சர் முதலியோர் இருந்தனர். இளவரசிக்குப் பின்னே, அவளுடைய தோழிகள் இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருத்தி இந்திரகுமாரி!
தான் இளவரசியின் தோழி என்று இவள் சொல்லவே இல்லையே என்று யோசித்துக் கொண்டே, அரசர் கூறியவற்றை இயந்திரத்தனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான் கார்த்தவீரியன்.
"நாட்டில் எதிரிநாட்டு ஒற்றர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. அதனால், அரசகுலப் பெண்களுக்கு அதிகப் பாதுகாப்பு தேவைப்படுகிறது. மந்திரிகுமாரி, திருமணத்துக்குப் பிறகு தன் கணவன் வீட்டுக்குப் போகப் போகிறாள். அவளுக்கு பலத்த பாதுகாப்பு தேவைப்படுகிறது. எனவே..."
"இந்திரகுமாரியை நானே பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறேன், அரசே!" என்றான் கார்த்தவீரியன்.
ஒரு கணம் அனைவரும் மௌனமாக விழிக்க, இளவரசி திரும்பித் தன் பின்னால் நின்ற இந்திரகுமாரியைப் பார்க்க, அவள் முகம் சிவந்து தலையைக் குனிந்து கொண்டாள்.
இதைப் பார்த்த அரசர் உட்பட அனைவரும் கார்த்தவீரியனின் காதலைப் புரிந்து கொண்டவர்களாகக் கொல்லென்று சிரித்தனர்.
மந்திரிகுமாரி என்று சொல்வதற்கு பதிலாக இந்திரகுமாரி என்று தன்னை அறியாமல் சொல்லித் தன் உள்ளக் கிடக்கையை அனைவர் முன்னும் வெளிப்படுத்தி விட்டது கார்த்தவீரியனுக்கு சற்று தாமதாமாகத்தான் புரிந்தது.
பொருள்:
இவர் மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; மிகவும் இரங்கத் தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே!