Friday, November 23, 2018

1083. வீரனின் சங்கடம்

ஆற்றில் பலரும் குளித்துக் கொண்டிருந்தபோது அந்த விபரீதம் நிகழ்ந்தது.

ஆற்றின் மையப்பகுதி மிக ஆழம். அங்கே ஓர் இடத்தில் நீர் மட்டத்துக்குக் கீழே ஒரு சுழல் உண்டு. அதில் சிக்கிக் கொண்டால், ஆழத்தில் கொண்டு தள்ளி விடும். நீச்சல் தெரிந்தவர்கள் கூட அதிலிருந்து பிழைத்து வருவது கடினம். 

கடந்த காலங்களில் இரண்டு மூன்று பேர் அந்தச் சுழலில் சிக்கிக்கொண்டு இறந்திருக்கிறார்கள். சில மணி நேரம் கழித்துப் பல மைல்கள் தள்ளிப் பிணமாகக் கிடைத்திருக்கிறார்கள்.

அதனால் ஆற்றில் குளிப்பவர்கள் யாரும் மையப்பகுதிக்கு அருகில் போக மாட்டார்கள். யாராவது சிறுவர்கள் சற்று முன்னால் போனாலே, அவர்களை மற்றவர்கள் தடுத்து விடுவார்கள்.

ஆனால் அன்று கந்தன் என்ற சிறுவன் வேகமாக நீந்தி, ஆற்றின்  மையப்பகுதிக்குப் போய் விட்டான். சுற்றியிருந்தவர்கள், "அங்கே போகாதேடா!" என்று கத்தியது அவன் காதில் விழுந்ததா என்றே தெரியவில்லை.

அனைவரும் பயந்தபடியே கந்தன் சுழலில் சிக்கிக் கொண்டு விட்டான். அவன் தலை நீருக்குள் மறைந்து விட்டது.

எல்லோரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு இளைஞன் வேகமாக நீந்திச் சுழல் அருகே போய் விட்டான்.

"வீராசாமி! போகாதேப்பா! நீயும் மாட்டிப்ப!" என்று சிலர் கூவினர்.

சில நொடிகளில் அவன் தலையும் மறந்து விட்டது.

ஆனால், அடுத்த நிமிடமே சற்றுத் தள்ளி வீராசாமியின் தலை  தெரிந்தது. அவன் கையில் கந்தனைப் பிடித்திருந்தான். எப்படியோ சுழலில் மூழ்கி கந்தனை இழுத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு வந்து விட்டான் வீராசாமி.

வேறு சிலர் அங்கே சென்று இருவரையும் அழைத்து வந்தனர்.

"கந்தா! நீ பிழைச்சது பெரிய அதிசயம்டா. வீராசாமி உன்னை எமன்கிட்டேந்தே மீட்டுக்கிட்டு வந்துட்டான்!" என்றார் ஒருவர்.

"என்னப்பா வீராசாமி! உனக்குக் கொஞ்சம் கூட பயமில்லையா?" என்று சிலர் கேட்டபோது, வீராசாமி பதில் சொல்லாமல் சிரித்தான்.

கந்தனுடன், வீராசாமியும், இன்னும் சிலரும் கந்தன் வீட்டுக்குச் சென்றனர். கந்தனின் பெற்றோரிடம் வீராசாமி கந்தனைக் காப்பாற்றியதைப் பற்றி மற்றவர்கள் பெருமையாகச் சொன்னார்கள். 

கந்தனின் பெற்றோருடன், அவன் அக்கா கனகமும் அங்கே இருந்தாள்.

சற்று நேரத்தில் வீராசாமி அவர்களிடம் விடை பெற்றுத் திரும்பினான். "வீராசாமி,  நீ நம்ம குடும்பத்துக்கு ரொம்ப வேண்டியவனாப் போயிட்ட. அடிக்கடி வந்து போயிக்கிட்டிரு" என்றார் கந்தனின் தந்தை.

சில நாட்களுக்குப் பிறகு, வீராசாமியைத் தெருவில் சந்தித்த கந்தனின் தந்தை, "என்னப்பா! அப்புறம்  ஆளையே காணோம்? அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டுப் போன்னு சொன்னேனே!" என்றார்.

"வரேங்க" என்றான் வீராசாமி.

கந்தனின் தந்தை சென்றதும், வீராசாமியுடன் இருந்த அவன் நண்பன் முத்து "ஏண்டா, அவர் பையனைக் காப்பாத்தினேங்கறதுக்காக நன்றியோட உன்னைத் தன் வீட்டுக்கு வரச் சொல்றாரு. ஒரு தடவை போயிட்டு வந்துடேன். அவரு சந்தோஷப்படுவாரில்ல?" என்றான்.

"போகலாம். கொஞ்சம் பயமா இருக்கு"

"என்னடா பயம்? அதுவும் உனக்கா? எமனுக்குக் கூட பயப்படாத வீரன்னு உன்னைப் பத்தி ஊர்ல எல்லாரும் சொல்றாங்க!"

"அவங்க வீட்டுக்குப் போனா, கந்தனோட அக்கா கனகம் இருப்பா."

"இருந்தா என்ன? அவகிட்ட உனக்கென்ன பயம்?"

"அவகிட்ட பயம் இல்ல. அன்னிக்கு அவ என்னைப் பாத்தப்ப, அந்தப் பார்வை என் மனசுக்குள்ள புகுந்து குத்தற மாதிரி இருந்தது. மறுபடி அந்தப் பார்வையை சந்திக்கறதுக்கே பயமா இருக்கு" என்ற வீராசாமி, சற்றுத் தயக்கத்துடன், "ஆனா அவளைப்  பாக்கணும் போலவும் இருக்கு!" என்றான்.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 109
தகையணங்குறுத்தல் (தலைவியின் அழகு தலைவனை வருத்துதல்)

குறள் 1083
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையல் பேரமர்க் கட்டு.

பொருள்:
எமன் என்று ஒன்று இருப்பதை இதுவரை நான் அறியாமல் இருந்தேன். அது பெண் தன்மையுடன், போர் செய்யும் பெரிய கண்கள் உடையது என்பதை இப்போது அறிந்து கொண்டேன்.

Read 'What Scares the Valiant Veera?' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Monday, November 5, 2018

1082. தலையைக் குனியும் தாமரையே!

சுப்பிரமணி திணறிக் கொண்டிருந்தான். தினசரி வாழ்க்கையில் அவன் எத்தனையோ இளம் பெண்களைப் பார்த்திருக்கிறான். அதில் சிலர் கவனத்தைக் கவரும் வகையிலும் இருந்திருக்கிறார்கள்.

ஆனால், திருமணம் செய்து கொள்வதற்காக ஒரு பெண்ணை வந்து பார்ப்பது அவனுக்கு ஒரு கிளர்ச்சியான அனுபவமாக இருந்தது.

பெண் பார்க்கக் கிளம்புமுன், "இது 1965ஆம் வருஷம். இப்ப காலம் மாறிடுச்சு. கல்யாணத்துக்கு முன்னே உன் அம்மாவை நான் பார்க்கவே இல்லை. என் அப்பா அம்மாதான் பாத்து நிச்சயம் பண்ணினாங்க. மணமேடையிலதான் முதல் தடவையா அவளைப் பாத்தேன்" என்றார் அவன் அப்பா சதாசிவம்.

"ஃபோட்டோ பாத்தீங்க இல்ல?" என்றான் சுப்பிரமணி.

சதாசிவம் பெரிதாகச் சிரித்து, "அப்பல்லாம் ஃபோட்டோவே எடுக்க மாட்டாங்க. கல்யாணத்துல எடுக்கறதுதான் ஃபோட்டோ!" என்றார்.

பெண்ணை அழைத்து வந்ததும், அவள் எல்லோரையும் வணங்கி விட்டு ஜமுக்காளத்தில் உட்கார்ந்தவள், தலைகுனிந்தபடியே இருந்தாள்.

முதல் பார்வையிலேயே பெண்ணை சுப்ரமணிக்குப் பிடித்து விட்டது. இத்தனைக்கும் அவள் தலை குனிந்திருந்ததால், அவள் முகத்தை அவனால் சரியாகப் பார்க்க முடியவில்லை.

பெண்கள் தலை குனிந்திருக்க வேண்டும் என்று ஏன் விதித்திருக்கிறார்கள் என்று அவன் நொந்து கொண்டான். ஆயினும் அந்த நிலையிலேயே அவளிடம் தான் விழுந்து விட்டோமே என்று அவனுக்குத் தோன்றியது.

"என்னடா, பொண்ணை நல்லாப் பாத்துக்கிட்டியா? அப்புறம் வீட்டுக்குப் போய் சரியா பாக்கலேன்னு சொல்லாதே!" என்றாள் அவன் அம்மா.

அம்மா சொன்னதற்காக, சுப்ரமணி பெண்ணை ஒருமுறை உற்றுப் பார்த்தான்.

அந்தக் கணத்தில் சட்டென்று அந்தப் பெண் ஒருகணம் தலையைத் தூக்கி அவன் முகத்தைப் பார்த்தாள்.

சுப்பிரமணிக்கு, திடீரென்று மின்னல் போல் ஒரு ஒளி வந்து தன்னைத் தாக்கியது போல் இருந்தது. அவனையறியாமலேயே அவன் தலையைக்  குனிந்து கொண்டான். அதைப் பார்த்து அந்தப் பெண் புன்னகை செய்தது போல் தோன்றியது.

அவன் தலையைக் குனிந்து கொண்டு விட்டதால் அவள் புன்னகை செய்ததை அவனால் சரியாகப் பார்க்க முடியவில்லை. ஆயினும் அவள் தன்னை வீழ்த்தி விட்டு வெற்றிப் புன்னகை செய்வது போலவும், தான் தன் தோல்வியை ஒப்புக்கொள்ளும் விதமாகத் தலை குனிந்து அமர்ந்திருப்பது போலவும் அவனுக்குத் தோன்றியது.

பெண்கள் தலை குனிந்திருக்க வேண்டும் என்று விதித்தவர்கள் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தால்தான் அப்படி விதித்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான்.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 109
தகையணங்குறுத்தல் (தலைவியின் அழகு தலைவனை வருத்துதல்)

குறள் 1082
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

பொருள்:
என் பார்வைக்கு பதில் கூறுவது போல் வந்த அவள் பார்வை ஏற்கெனவே (தன்  அழகால்) என்னைத் தாக்கிக் கொண்டிருந்தவள், இப்போது ஒரு சேனையுடன் வந்து தாக்குவது போல் இருந்தது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

Read 'The Return Gaze' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Thursday, November 1, 2018

1081. மந்திரப் புன்னகை

கோவில் திருவிழாவில் இத்தனை கூட்டம் இருக்கும் என்று குமரன் எதிர்பார்க்கவில்லை. 

அவன் ஊரிலிருந்து சில மைல்கள் தள்ளி இருந்த அந்தக் கோவிலின் வருடாந்தரத் திருவிழா மிகவும் புகழ் பெற்றது. சிறுவனாக இருந்தபோது பள்ளி நண்பர்களுடன் ஒருமுறை சென்று வந்த பிறகு அவன் அந்தத் திருவிழாவுக்குச் சென்றதில்லை.
.
குமரனுக்குத் திருவிழாவுக்குச் செல்வதில் அவ்வளவு ஆர்வம் இல்லை. அவன் அம்மாதான் "ஒரு தடவை பார்த்துட்டு வா. படிச்சு முடிச்சிட்டே. எப்படியும் வேலைக்கு வெளியூருக்குப் போயிடுவ. அப்புறம் சந்தர்ப்பம் வராது" என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தாள்.

திருமண வயதுடையவர்கள் அந்தக் கோவில் திருவிழாவுக்குச் சென்று வந்தால், அவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகி விடும் என்று அந்தப் பகுதி மக்களிடையே ஒரு நம்பிக்கை உண்டு. மகனைத் திருவிழாவுக்கு அனுப்பியதற்கு அதுவும் ஒரு காரணம் என்பதைக் குமரனின் தாய் தன் மகனிடம் சொல்லவில்லை.

குமரன் கோவிலுக்கருகில் சென்றபோது மக்கள் கூட்டம் அலை அலையாக நகர்ந்து கொண்டிருந்தது. வெகு தொலைவில் கோவிலின் உற்சவர் சிலை ஒரு உயர்ந்த மேடையில் வைக்கப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது.

கூட்டத்தின் பின்னே சென்று மேடையருகில் சென்று சாமியை தரிசிக்கப் பல மணி நேரம் ஆகும் என்று தோன்றியது. 

இங்கிருந்தே கன்னத்தில் போட்டுக் கொண்டு திரும்ப வேண்டியதுதான் என்று நினைத்த குமரன் மீண்டும் ஒருமுறை கூட்டத்தைப் பார்த்தான். ஆணும் பெண்ணுமாகப் பல தலைகள் ஆடிக் கொண்டு மெதுவே நகர்ந்து கொண்டிருந்தன.

சட்டென்று ஒரு தலை மட்டும் தனியே தெரிந்தது. தெரிந்தது தலை என்று சொல்ல முடியாது. அந்தத் தலைக்குரிய பெண் தன் காதில் போட்டுக் கொண்டிருந்த குழைதான் அவளைத் தனித்துக் காட்டியது.

எத்தனையோ பெண்கள் கழுத்தில் வளையம் போன்ற காதணி அணிந்திருப்பதைக் குமரன் பலமுறை பார்த்திருக்கிறான். அந்தக் கூட்டத்திலேயே கூட இன்னும் பல பெண்கள் குழை அணிந்திருக்கக் கூடும். ஆயினும் எதனாலோ அந்தப் பெண்ணின் குழைகள் தனியே தெரிந்தன.

அந்தப் பெண்ணின் வயது என்ன என்பதை தூரத்திலிருந்து கணிக்க முடியவில்லை.

ஒருவித ஆர்வத்தில் குமரன் சற்று வேகமாக நடந்து சிலரைக் கடந்து இன்னும் சற்று முன்னே சென்றான். இப்போது அந்தப் பெண்ணின் கூந்தல் தெரிந்தது. பின்னல் போடாமல் பின்பக்கம் தொங்க விடப்பட்டிருந்த அந்தக் கூந்தலின் அசைவில் கூட ஒரு அழகு இருப்பதாகத் தோன்றியது.

முகத்தைக் கூடப் பார்க்காத ஒரு பெண்ணிடம் தனக்கு என் இந்த ஆர்வம் என்று குமரன் யோசித்தபோது, தற்செயலாக அந்தப் பெண் தன் முகத்தைப் பக்கவாட்டில் திருப்பினாள். 

தோகை விரித்த மயில் ஒன்று சட்டென்று தன்  கழுத்தை ஒடித்துத் திருப்புவது போல் இருந்தது அவள் செய்கை.

இப்போது அவள் முகத்தின் ஒரு பகுதி தெரிந்தது. அந்தத் தோற்றம் எதனாலோ குமரனின் மனத்தை மயக்கியது.

எப்படியும் அவள் முகத்தைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் இன்னும் வேகமாக நடந்து பலரைத் தாண்டி அந்தப் பெண்ணின் அருகில் வந்து விட்டான் குமரன். அவள் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இன்னும் வேகமாக நடந்து அவளைத் தாண்டி சற்று தூரம் சென்றான்.

சாலையோரம் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்தடியில் நின்று திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்தான். அவள் தலை முடியின் அசைவும், அவள் ஆடி ஆடி நடந்து வந்ததும் அவளை ஒரு மயில் போல் தோன்ற வைத்தன.

அவள் முகத்தைப் பார்த்ததும் ஒரு கணம் குமரன் அயர்ந்து விட்டான். இது என்ன இப்படி ஒரு தெய்வீகக் களை! கோவிலில் இருந்த தெய்வ உருவங்களில்  ஒன்று திருவிழாவைப் பார்ப்பதற்காக எழுந்து வந்து கூட்டத்தோடு நடந்து வருவதாகத் தோன்றியது. 

அவள் அருகில் நெருங்கியபோது, இந்தப் பெண் எனக்கு மனைவியாக அமைந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் அவன் மனதில் எழுந்தது.

இப்போது அவள் அவனுக்கு மிக அருகில் வந்து விட்டாள். அவனைக் கடந்து சென்றபோது அவன் சற்றும் எதிர்பாராமல், அவனை  நோக்கித் திரும்பி இனிமையாகப் புன்னகை செய்தாள்.

குமாரனுக்குத் தான் திருவிழாவுக்கு வந்ததற்குப் பலன் கிடைத்து விட்டதாகத் தோன்றியது.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 109
தகையணங்குறுத்தல் (தலைவியின் அழகு தலைவனை வருத்துதல்)

குறள் 1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

பொருள்:
இவள் தெய்வப்பெண்ணா, அழகிய மயிலா அல்லது கனமான குழையைக் காதில் அணிந்த மனிதப் பெண்ணா என்று என் மனம் மயங்குகிறது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'The Magical Smile' the English version of this story by the same author.

               அறத்துப்பால்                                                                     பொருட்பால்                            


1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...