Monday, November 5, 2018

1082. தலையைக் குனியும் தாமரையே!

சுப்பிரமணி திணறிக் கொண்டிருந்தான். தினசரி வாழ்க்கையில் அவன் எத்தனையோ இளம் பெண்களைப் பார்த்திருக்கிறான். அதில் சிலர் கவனத்தைக் கவருவதாகவும் இருந்திருக்கிறார்கள்.

ஆனால், திருமணம் செய்து கொள்வதற்காக ஒரு பெண்ணை வந்து பார்ப்பது அவனுக்கு ஒரு கிளர்ச்சியான அனுபவமாக இருந்தது.

பெண் பார்க்கக் கிளம்புமுன், "இது 1965ஆம் வருஷம். இப்ப காலம் மாறிடுச்சு. கல்யாணத்துக்கு முன்னே உன் அம்மாவை நான்  பார்க்கவே இல்லை. என் அப்பா அம்மாதான் பாத்து நிச்சயம் பண்ணினாங்க. மணமேடையிலதான் முதல் தடவையா அவளைப் பாத்தேன்" என்றார் அவன் அப்பா சதாசிவம்.

"ஃபோட்டோ பாத்தீங்க இல்ல?" என்றான் சுப்பிரமணி.

சதாசிவம் பெரிதாகச் சிரித்து, "அப்பல்லாம் ஃபோட்டோவே எடுக்க மாட்டாங்க. கல்யாணத்துல எடுக்கறதுதான் ஃபோட்டோ!" என்றார்.

பெண்ணை அழைத்து வந்ததும், அவள் எல்லோரையும் வணங்கி விட்டு ஜமுக்காளத்தில் உட்கார்ந்தவள், தலைகுனிந்தபடியே இருந்தாள்.

முதல் பார்வையிலேயே பெண்ணை சுப்ரமணிக்குப் பிடித்து விட்டது. இத்தனைக்கும் அவள் தலை குனிந்திருந்ததால், அவள் முகத்தை அவனால் சரியாகப் பார்க்க முடியவில்லை.

பெண்கள் தலை குனிந்திருக்க வேண்டும் என்று ஏன் விதித்திருக்கிறார்கள் என்று அவன் நொந்து கொண்டான். ஆயினும் அந்த நிலையிலேயே  அவளிடம் தான் விழுந்து விட்டோமே என்று அவனுக்குத் தோன்றியது.

"என்னடா, பொண்ணை நல்லாப் பாத்துக்கிட்டியா? அப்புறம் வீட்டுக்குப் போய் சரியா பாக்கலேன்னு சொல்லாதே!" என்றாள் அவன் அம்மா.

அம்மா சொன்னதற்காக, சுப்ரமணி பெண்ணை ஒருமுறை உற்றுப் பார்த்தான்.

அந்தக் கணத்தில் சட்டென்று அந்தப் பெண் ஒருகணம் தலையைத் தூக்கி அவன் முகத்தைப் பார்த்தாள்.

சுப்பிரமணிக்கு, திடீரென்று மின்னல் போல் ஒரு ஒளி வந்து தன்னைத் தாக்கியது போல் இருந்தது. அவனையறியாமலேயே அவன் தலையைக்  குனிந்து கொண்டான். அதைப் பார்த்து அந்தப் பெண் புன்னகை செய்தது போல் தோன்றியது.

அவன் தலையைக் குனிந்து கொண்டு விட்டதால் அவள் புன்னகை செய்ததை அவனால் சரியாகப் பார்க்க முடியவில்லை. ஆயினும் அவள் தன்னை வீழ்த்தி விட்டு வெற்றிப் புன்னகை செய்வது போலவும், தான் தன் தோல்வியை ஒப்புக்கொள்ளும் விதமாக தலை குனிந்தது போலவும் அவனுக்குத் தோன்றியது.

பெண்கள் தலை குனிந்திருக்க வேண்டும் என்று விதித்தவர்கள் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தால்தான் அப்படி விதித்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 109
தகையணங்குறுத்தல் (தலைவியின் அழகு தலைவனை வருத்துதல்)

குறள் 1082
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

பொருள்:
என் பார்வைக்கு பதில் கூறுவது போல் வந்த அவள் பார்வை ஏற்கெனவே  (தன்  அழகால்) என்னைத் தாக்கிக்கொண்டிருந்தவள், ஒரு சேனையுடன் வந்து தாக்குவது போல் இருந்தது.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

No comments:

Post a Comment

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...