"இல்லையே! இங்கேதான் இருந்தேன். அவரோட அப்பப்ப எங்கேயாவது போயிட்டு வருவேன். அதைத் தவிர, வெளியில அதிகமா வரல. அதனால, நீ என்னைப் பாத்திருக்க மாட்ட!" என்றாள் குமுதினி.
"ம்...கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு?"
"உனக்குத் தெரியாதா? நீ எனக்கு முன்னேயே கல்யாணம் ஆனவதானே?"
"ஒவ்வொருத்தரோட அனுபவமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கல்யாணம் ஆன புதுசில, 'கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு?'ன்னு என்னை யாராவது கேட்டிருந்தா, 'காத்தில மிதக்கற மாதிரி இருக்கு'ன்னு சொல்லி இருப்பேன். நீ என்ன சொல்லுவ?"
"எனக்கு உன்னை மாதிரியெல்லாம் பேசத் தெரியாதுடி. ஆனா, நீ காத்துல மிதக்கற மாதிரி இருக்குன்னு சொன்னதைக் கேட்டப்பறம், எனக்கு வேற ஒண்ணு தோணுது!" என்றாள் குமுதினி.
"என்ன தோணுது?" என்றாள் வானதி.
"நான் கடலைப் பாத்ததில்ல. அது பெரிசா, எல்லை இல்லாதததா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். என் திருமண வாழ்க்கையில, என்னோட சந்தோஷமும் கடல் மாதிரி, கரையில்லாத மாதிரி, பரந்ததா இருக்கறதா எனக்குத் தோணுது!" என்றாள் குமுதினி.
"என்ன குமுதினி, உன் புருஷன் எப்ப ஊர்லேந்து வராரு?" என்றாள் வானதி.
"மூணு மாசத்தில வந்துடுவேன்னு சொன்னாரு. அவர் போய் ரெண்டு மாசம்தான் ஆச்சு. ஆனா, எனக்குப் பல வருஷங்கள் ஆயிட்ட மாதிரி இருக்கு. இன்னும் ஒரு மாசம் எப்படி காத்துக்கிட்டிருக்கப் போறேன்னு நினைச்சா மலைப்பா இருக்கு!" என்றாள் குமுதினி.
"கவலைப்படாதே! கணவன் மனைவியை விட்டுப் பிரிஞ்சு வெளியூர் போறது உலகத்தில எல்லா வீட்டிலேயும் நடக்கற விஷயம்தான். பிரிவுத் துன்பத்தைப் பொறுத்துக்கறது கஷ்டம்தான். ஆனா, பொறுத்துக்கிட்டுத்தான் ஆகணும்!"
"கடலை விடப் பெரிசா ஏதாவது இருக்கா?" என்றாள் குமுதினி, திடீரென்று.
"ஏன் கேக்கற?" என்றாள் வானதி, புரியாமல்.
"என் காதல் வாழ்க்கை எப்படி இருக்குன்னு அன்னிக்கு நீ கேட்டப்ப, கடல் மாதிரி பரந்ததா இருக்குன்னு சொன்னேன். இந்தப் பிரிவுத் துன்பம் அந்தக் கடலை விடப் பெரிசா இருக்கே, அதுதான் கேட்டேன்!" என்றாள் குமுதினி.
கற்பியல்
பொருள்:
காதல் இன்பம் கடல் போன்றது. காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலை விடப் பெரியது.