"திருவிளையாடல் புராணத்தில ஒரு கதை இருக்கு. பெண்களோட கூந்தலுக்கு இயற்கையாவே மணம் உண்டான்னு பாண்டிய அரசனுக்கு ஒரு சந்தேகம் வந்தாதால, அவன் ஒரு போட்டி வச்சானாம்..." என்று ஆரம்பித்தான் சுந்தர்.
"நிறுத்துடா! ஏதோ புதுசா சொல்ற மாதிரி சொல்ற. இந்தக் கதைதான் திருவிளையாடல் சினிமாவில வந்து, நாகேஷ் தருமியா நடிச்சு, ரொம்ப பாபுலர் ஆயிடுச்சே! இந்தக் கதை தெரியாதவங்களே இருக்க மாட்டாங்களே!" என்றான் மூர்த்தி, அவனை இடைவெட்டி.
"டேய்! நாகேஷ் காமெடிதான் எல்லாருக்கும் தெரியும். இந்தக் கதை ரொம்ப பேருக்குத் தெரிஞ்சிருக்காது!" என்றான் சுந்தர்.
"சரி! அதை எதுக்கு இப்ப சொல்ற?" என்றான் ரமேஷ்.
"இல்ல. எனக்கு ஒரு சந்தேகம். நம்ப மூணு பேருக்குமே காதலிகள் இருக்காங்க. அதனால, இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்க. பெண்களோட இதழ்களுக்கு இயற்கையாகவே சுவை இருக்கா?"
"இல்லாம? பின்ன, உதட்டில தேன் தடவிக்கறாங்களா என்ன?" என்றான் மூர்த்தி.
ரமேஷ் மௌனமாக இருந்தான்.
"நீ என்னடா சொல்ற?" என்றான் சுந்தர், ரமேஷிடம்.
"இல்லைங்கறதுதான் என் பதில்!" என்றான் ரமேஷ்.
"டேய்! நீ இப்படிச் சொன்னது உன் காதலி சுகந்திக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்! நீ தொலஞ்ச!" என்றான் மூர்த்தி.
"நம்ப மூணு பேருக்குள்ள ஜாலியா பேசிக்கறோம். இதை யார் போய் சுகந்திட்ட சொல்லப் போறாங்க?" என்றான் சுந்தர்.
ஆனால், யாரோ சொல்லி விட்டார்கள்! இரண்டு பேரில் ஒருவன் இதைத் தன் காதலியிடம் சொல்ல, அவள் அதை சுகந்தியிடம் சொல்லி இருப்பாள் என்று நினைத்தான் ரமேஷ்.
"ஏய்! நாங்க நண்பர்கள் விளையாட்டாப் பேசிக்கிட்டோம். இதுக்குப் போய் கோவிச்சுக்கறியே!" என்றான் ரமேஷ், கொஞ்சும் குரலில்.
"நீ ஏன் அப்படிச் சொல்லணும்? அதுக்கு என்ன அர்த்தம்? இனிமே என்னைப் பாக்க வராதே!" என்றாள் சுகந்தி, கோபத்துடன்.
"ஐயையோ! அப்படிச் சொல்லிட்டா, நான் என்ன செய்யறது?"
"பின்ன, நீ ஏன் அப்படிச் சொன்ன?"
"பெண்கள் இதழுக்கு இயற்கையிலேயே சுவை இருக்கான்னு சுந்தர் கேட்டான். இல்லைன்னு சொன்னேன். உன் இதழ்ல சுவை இல்லேன்னு சொல்லலியே!"
"அப்படின்னா?"
"ஒத்தன் பிறக்கும்போதே பணக்காரனாப் பொறக்கறான். இன்னொத்தன் பணக்காரனாப் பொறக்கல. ஆனா, தன் திறமையால பணம் சம்பாதிச்சுப் பணக்காரன் ஆறான். ரெண்டுல எது உயர்ந்தது?"
"சாதாரணமாப் பொறந்து, தன் திறமையால பணக்காரன் ஆகிறதுதான். ஆனா, இதுக்கும், நீ உளறிக் கொட்டினதுக்கும் என்ன சம்பந்தம்?" என்றாள் சுகந்தி, கோபம் குறையாதவளாக.
"நான் உளறிக் கொட்டல. உண்மையைத்தான் சொன்னேன். பெண்களோட இதழ்களுக்கு இயற்கையிலேயே சுவை இல்ல. ஆனா, உன் இதழ்களுக்குச் சுவை இருக்கு. ஏன்னா, அதை நீ சம்பாதிச்சிருக்க!"
"சம்பாதிச்சிருக்கேனா? எப்படி?"
"நீ இனிமையான வார்த்தைகளைப் பேசறதால உன் பற்கள்ளேந்து சுரக்கற இனிமைதான் உன் இதழ்களுக்கு இனிமை கொடுக்குது. அதனால எங்கிட்ட கடுமையாப் பேசி, உன் பல்லில சுரக்கற இனிமையைக் குறைச்சுடாதே!" என்றான் ரமேஷ், அவளைத் தயக்கத்துடன் பார்த்தபடி.
சுகந்தி குபீரென்று சிரித்து," நல்லா சமாளிக்கற!" என்றபடியே, தன் இதழ்களைக் குவித்தபடியே, அவனிடம் நெருங்கி வந்தாள்.
பொருள்:
மென்மையான மொழிகளைப் பேசும் இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர், பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.