"என்னடி ஒரு கண் மட்டும் சுருங்கின மாதிரி இருக்கு?" என்றாள் ராணி, மகளைப் பார்த்து.
"இல்லியே!" என்றாள் மேகலை.
"இல்ல. ரெண்டு நாளாவே உன் கண் அப்படித்தான் இருக்கு. உனக்குக் கண்ணில வலியோ, கண் சுருங்கற மாதிரியோ எதுவும் தெரியலையா?"
"இல்லம்மா! எனக்கு ஒண்ணும் தெரியல. நீயா ஏதாவது நினைச்சுக்காதே!" என்றாள் மேகலை தாயிடம்.
"எதுக்கும் நந்தியாவட்டைப் பூவை கண்ணில பிழிஞ்சுக்க. ஏதாவது பிரச்னை இருந்தாலும் உடனே சரியாயிடும்!" என்றாள் ராணி விடாமல்.
"சரிம்மா!" என்று மேகலை சொல்லிக் கொண்டிருந்தபோதே அவள் தோழி துளசி வந்தாள்.
"அம்மா! நான் துளசியோட வெளியில போயிட்டு வரேன்!" என்று கிளம்பினாள் மேகலை.
"பாத்துடி! வெய்யில் பட்டு கண் இன்னும் மோசமாப் போயிடப் போகுது!" என்று எச்சரித்தாள் ராணி.
"அதான் கண்ணுக்கு எதுவுமே இல்லைன்னு சொல்றேனே!" என்று எரிச்சலுடன் பதிலளித்து விட்டு மேகலை கிளம்பினாள்.
வெளியில் வந்ததும், "கண்ணுக்கு என்னடி?" என்றாள் துளசி.
"ஒண்ணுமில்ல. எங்கம்மா ஏதாவது சொல்லிக்கிட்டிருப்பாங்க!" என்றாள் மேகலை.
மேகலையின் முகத்தைக் கையால் பிடித்துத் திருப்பி அவள் கண்களைப் பார்த்த துளசி, "ஆமாம். இடது கண் கொஞ்சம் சுருங்கின மாதிரிதான் இருக்கு!" என்றாள்.
"ஏண்டி, என் கண்ணில ஏதாவது பிரச்னை இருந்தா எனக்குத் தெரியாதா? எங்கம்மா மாதிரி நீயும் ஆரம்பிச்சுடாதே!" என்றாள் மேகலை.
தோழிகள் சற்று நேரம் தோப்பு, தோட்டம், ஆற்றங்கரை என்று சுற்றி விட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்தனர்.
சற்று நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். திடீரென்று மேகலை "ஒரு நிமிஷம் இரு, வந்துடறேன்" என்று சொல்லி விட்டு எழுந்து நின்றாள்.
ஐந்து நிமிடங்கள் கழித்து தோழி எங்கே போயிருக்கிறாள் என்று பார்க்க எண்ணி துளசியும் எழுந்து சென்றாள்.
ஆற்றங்கரையை ஒட்டிய சாலையோரம் மேகலை நிற்பது தெரிந்ததும், அவளை நோக்கிச் சென்றாள் துளசி.
துளசி தன் பின்னால் வந்து நிற்பதை கவனிக்காமல் மேகலை சாலையின் எதிர்ப்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே ஒரு இளைஞன் சாலையை ஒட்டி இருந்த நிலத்தில் நின்று கொண்டு ஒரு முதியவருடன் பேசிக் கொண்டிருந்தான்.
துளசி மெலிதாகத் தொண்டையைக் கனைத்தாள்.
மேகலை திடுக்கிட்டுத் திரும்பி, "நீதானா?" என்றாள்.
"நான்தான்! நீ உன் ஆளைத் திருட்டுத்தனமாப் பாக்கறதை வேற யாராவது கண்டு பிடிச்சுட்டாங்களோன்னு பயந்துட்டியா?" என்றாள் துளசி குறும்பாகச் சிரித்தபடி.
"என்னடி உளர்ற?"
"அதோ எதுத்தாப்பில நின்னு அந்தப் பெரியவர்கிட்ட பேசிக்கிட்டிருக்காரே, அவருதானே உன் ஆளு? ஏண்டி, உன்னோட நெருக்கமாப் பழகற எனக்கு இது தெரியாதா?" என்றாள் துளசி தன் கையால் எதிர்ப்புறம் இருந்த இளைஞனைச் சுட்டிக் காட்டி.
"கையைக் கீழ போடுடி! யாராவது பாத்தா ஏதாவது நினைச்சுப்பாங்க" என்று அவள் கையைக் கீழே இறக்கினாள் மேகலை.
"நீ அவரைப் பாக்கறது அவருக்குத் தெரியக் கூடாதுங்கறதுக்காகத்தானே வெய்யிலுக்காகக் கண்ணைச் சுருக்கிக்கிற மாதிரி ஒரு கண்ணை இடுக்கிக்கிட்டு அவரைப் பாக்கற? அடிக்கடி இப்படிப் பாத்தா கண்ணு சுருங்காம என்ன செய்யும்?" என்றாள் துளசி.
களவியல்
அதிகாரம் 110
குறிப்பறிதல்
குறள் 1095
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்சிறக்கணித்தாள் போல நகும்.
பொருள்:
அவள் என்னை நேராகப் பார்க்காவிட்டாலும் ஒரு கண்ணைச் சுருக்கிக் கொண்டு பார்ப்பது போல் என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்வாள்.