
"கவலைப்படாதே! கல்யாணம் ஆனவுடனே விட்டுடுவான்" என்றாள் மங்களம்.
"அது எப்படி? என்னைக் கல்யாணம் கட்டிக்கிட்டப்பறம் என் புருஷன் குடிப்பழக்கத்தை விடலியே!"
"அதுக்கு என்ன செய்யறது? சில ஆம்பளைங்களுக்குக் கல்யாணம் ஆனப்பறம்தான் குடிப்பழக்கமே ஆரம்பிக்குது!"
"என்னடி சொல்ற?"
"நான் என் கதையைச் சொல்றேன் அக்கா!" என்றாள் மங்களம்.
"பின்ன, கல்யாணம் ஆனா என் பிள்ளை குடியை விட்டுடுவான்னு எப்படிச் சொல்ற?" என்றாள் மீனாட்சி.
"என் பிள்ளை விட்டுட்டான். அதை வச்சுத்தான் சொல்றேன்" என்றாள் மங்களம்.
மீனாட்சிக்குக் குழப்பமாக இருந்தது.
"கல்யாணம் பண்ணிக்கறதால மட்டும் குடியை விட முடியாது" என்றாள் மங்களம் சிரிப்புடன்.
மீனாட்சிக்குக் குழப்பம் அதிகரித்தது.
"என் அம்மா எவ்வளவோ சொன்னாங்க. என்னால குடியை விட முடியல. ஆனா உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சு கொஞ்ச நாள்ள விட்டுட்டேன்" என்றான் முருகன்.
"அது எப்படி? நீ குடிக்கக் கூடாதுன்னு நான் சொல்லலியே?" என்று கேட்டாள் நிலா.
"நீ சொல்லியிருந்தா கேட்டிருப்பேனோ என்னவோ! எங்கம்மா சொல்லி நான் கேக்கலியே! கேக்கக் கூடாதுன்னு இல்ல. என்னால விட முடியல. நீ சொல்லி நான் முயற்சி செஞ்சிருந்தாலும் என்னால விட்டிருக்க முடியாது."
"பின்ன எப்படி விட்டே?"
"உன் மொபைல்ல எப்பவும் பாட்டு ஓடிக்கிட்டே இருக்கு. நீ பேசறதே எனக்குக் கேக்கல. பாட்டை நிறுத்து இல்லே சின்னதாக்கு"
"பாட்டை நிறுத்த மாட்டேன். நான் வேணும்னா இறைஞ்சு பேசறேன். உன் அம்மா சொல்லி குடியை விட முடியல, நான் சொன்னாலும் விட முடிஞ்சிருக்காதுன்னு சொல்ற. அப்புறம் எப்படி விட்டேன்னு கேட்டேன்."
"அப்பா! அதுக்காக இப்படியா கத்துவ? சொல்றேன். ஏன் குடிச்சேன்? குடிச்சா ஒரு குஷி வருது. அதை போதைம்பாங்க, கிக்கும்பாங்க. ஆனா உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சப்பறம் குடிக்கும்போது வர போதை மாதிரி எப்பவுமே இருந்துக்கிட்டிருக்கு. ஏற்கெனவே போதை இருக்கும்போது எப்படிக் குடிக்கத் தோணும்?" என்றான் முருகன்.
"எனக்குப் புரியலையே!" என்றாள் நிலா.
முருகன் அவளுக்கு எப்படி விளக்குவது என்று யோசித்தபோது மொபைலிலிருந்து பாடல் ஒலித்தது.
மது உண்டால் போதையைக் கொடுக்கும்.
அந்த மயக்கம் காதலில் கிடைக்கும்!
"கவிஞர் அழகா சொல்லியிருக்காரு பாரு. இப்ப புரியுதா?" என்றான் முருகன்.
நிலா புரிந்து கொண்டதாகத் தலையை ஆட்டி விட்டுச் சிரித்தாள்.
காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 109
தகையணங்குறுத்தல் (தலைவியின் அழகு தலைவனை வருத்துதல்)
குறள் 1090
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்கண்டார் மகிழ்செய்தல் இன்று.
பொருள்:
கள் தன்னை அருந்துபவருக்குத்தான் மகிழ்ச்சியை (மயக்கத்தை/போதையை)க் கொடுக்கும். காதல் தன்னைக் கண்டவர்களுக்கு (உணர்ந்தவர்களுக்கு)க் கூட மகிழ்ச்சியை (மயக்கத்தை/ போதையை)க் கொடுக்கும்.
Read 'Why Did Murugan Give Up Drinking' the English version of this story by the same author.