
"ஆமாண்டா! கொடியிடை அப்படின்னு எல்லாம் வர்ணிப்பாங்களே, இப்பதான் நேர்ல பாக்கறேன்."
"இடை மட்டும் கொடி இல்லை. உடம்பே ஒரு கொடி மாதிரி மெல்லிசா, தொய்வா இருக்கு பாரு."
"அவ நடந்து வரச்சே, அவ நடக்கற மாதிரி தெரியல. காத்து அவளைத் தள்ளிக்கிட்டு வர மாதிரி இருக்கு!"
"போதும். நாம பேசறதை யாராவது கேட்டுடப் போறாங்க. ஊர்ல எதோ தகராறுன்னு கேள்விப்பட்டு. அதைப் பத்தி சுவாரசியமா ஏதாவது தகவல் கிடைக்கும்னு நம்ப எடிட்டர் நம்ப ரெண்டு பேரையும் இங்கே அனுப்பினாரு. ஆனா, இங்க ஒண்ணும் சுவாரசியமா இல்ல. எல்லாம் அடங்கிப் போயிடுச்சு. உடம்பைப் புண்ணாக்கிக்காம ஊர் போய்ச் சேரற வழியைப் பாப்போம்."
"ஆமாம். ஏற்கெனவே ஒரு முரடன் நாம எதுக்கு வந்திருக்கோம்னு சந்தேகப்பட்டு நம்பளை மிரட்டி விசாரிச்சான். அவன்கிட்ட அடி வாங்கப் போறோம்னு நெனச்சேன். நல்லவேளை தப்பிச்சோம். மறுபடி நாம அவன் கண்ணில பட்டா நம்ப மூஞ்சியைப் பேத்துடுவேன்னு மிரட்டிட்டுதானே நம்பளை விட்டான்!"
"அதை ஞாபகப்படுத்தாதே. அவனை நினைச்சாலே பயமா இருக்கு. காட்டெருமை மாதிரி எப்படி இருந்தான், பாத்தாலே பயங்கரமா!"
"டேய்! காட்டெருமை மறுபடி வருதுடா!"
"எங்கே?"
"அங்க பாரு! ரோட்ல நடந்து வரான். நாம இந்த மரத்துக்குப் பின்னால ஒளிஞ்சுக்கலாம். ஐயையோ, அந்தக் கொடியிடைப் பொண்ணு இருக்கற இடத்துக்கு அவன் வரானே! அந்தப் பொண்ணு பாவம் அவன்கிட்ட மாட்டிக்கப் போறா. நாம கொஞ்சம் பக்கத்தில போய் மறைஞ்சு நின்னு பாப்போம். அந்தப் பொண்ணை அவன் ஏதாவது செஞ்சா, அவளைக் காப்பாத்த முயற்சி பண்ணலாம். நம்பளால முடியாதுன்னாலும், ஊர்ல யாரையாவது அழைச்சுக்கிட்டு வரலாம் இல்ல?"
இருவரும் மறைத்தபடியே நடந்து அந்தப் பெண் நின்ற இடத்துக்கு அருகே வந்தனர்.
அந்தப் பெண் அருகில் அந்த முரடன் வந்ததும், எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண் திரும்பி அவன் வருவதைப் பார்த்தாள். உடனேயே வேறு பக்கமாக நடக்கத் தொடங்கினாள்.
"பொன்னி, கொஞ்சம் நில்லு!" என்றான் முரடன்.
"ஒங்கிட்ட எனக்கென்ன பேச்சு? நேத்து நீ வருவேன்னு ரொம்ப நேரம் காத்துக்கிட்டிருந்தேன். நீ வராம ஏமாத்திட்டே!"
"இல்ல பொன்னி. நான் சொல்றதைக் கேளு" என்றான் முரடன்.
பொன்னி சரேலென்று திரும்பி அவனைப் பார்த்தாள். "என்னய்யா சொல்லப் போற? சொல்லு. நீ சொல்ற காரணத்தையெல்லாம் கேட்டுட்டு நான் உன் மேல தப்பு இல்லேன்னு நம்பிடறேன். நான் ஏமாளிதானே?" என்றாள் சிரித்துக் கொண்டே.
"பொன்னி! நீ என்னை என்ன வேணும்னா திட்டு. ஆனா என்னை அப்படிப் பாக்காதே. உன் பார்வை பட்டாலே என் உடம்பு வெலவெலத்துப் போகுது!" என்றான் முரடன்.
ஒளிந்து பார்த்துக் கொண்டிருந்த பத்திரிகை நிருபர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் கைகளால் தங்கள் வாய்களைப் பொத்திக் கொண்டார்கள்.
காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 109
தகையணங்குறுத்தல் (தலைவியின் அழகு தலைவனை வருத்துதல்)
குறள் 1084
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்பேதைக்கு அமர்த்தன கண்.
பொருள்:
பெண் தன்மை உடைய இந்தப் பேதையின் கண்கள் தம்மைப் பார்ப்பவரின் உயிரைக் குடிக்கும் தன்மையுடன் அமைந்து (அவள் பெண்மைத் தன்மையிலிருந்து) மாறுபட்டிருக்கின்றன.
Read 'The Reporters' Dilemma' the English version of this story by the same author.