கைபேசியில் ஒலித்த பாட்டை அவசரமாக நிறுத்தினாள் சுமித்ரா. 'காலை வேளையில என்ன பாட்டுப் போடறாங்க, மனசில இருக்ற புண்ணைக் குத்தி வலியை அதிகமாக்கற மாதிரி!"
பல் விளக்கி விட்டு, காப்பி குடிக்க சமையலறைக்குப் போனாள் .
"என்னடி, கண்ணெல்லாம் சிவந்திருக்கு? ராத்திரி சரியாத் தூங்கலையா?" என்றாள் சுமித்ராவின் அம்மா, அவளிடம் காப்பிக் கோப்பையைக் கொடுத்தபடியே.
"ஆமாம். ஒரே கொசு. தூக்கமே வரல."
"ஏசி போட்டுக்கிட்டுத்தானே தூங்கின? அப்புறம் எப்படி கொசு வரும்?" என்றாள் அம்மா.
சுமித்ரா பதில் சொல்லவில்லை. பதில் சொல்ல முயன்றால், இரவு முழுவதும் கண்களில் நீர் சுரக்க வைத்த அழுகை மீண்டும் பீரிட்டு வந்து விடுமோ என்று அஞ்சிப் பேசாமல் இருந்தாள்.
சாத்விக் அவளை விட்டுப் பிரிந்து போய் ஒரு மாதம் ஆகி விட்டது. எங்கே போனான் என்று தெரியவில்லை. ஃபோன் செய்தால் எடுப்பதில்லை. குறுஞ்செய்திகளுக்கு பதில் இல்லை. முன்பு வாட்ஸ் ஆப் இணைப்பு பெற்றிருந்த அவன் தொலைபேசி எண்ணில், இப்போது அந்த இணைப்பு இல்லை.
தன்னுடன் தொடர்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கிறான். வேறு ஊரில் வேலை வாங்கிக் கொண்டு, தன்னிடம் சொல்லாமல் திடீரென்று ஊரை விட்டுப் போயிருக்கிறான். அவன் வீட்டு விலாசம் அவளுக்குத் தெரியாது. அவன் நண்பர்கள் யாரையும் தெரியாது. அவன் வேலை செய்வதாகச் சொன்னது ஒரு பெரிய நிறுவனம். அங்கே போய் அவனைப் பற்றி விசாரிக்க முடியுமா? விசாரித்தால்தான் என்ன பயன்? அவன் வேலையை விட்டுப் போய் விட்டதாகச் சொல்வார்கள்.
ஒருவேளை அவன் எங்கே இருக்கிறான் என்று தேடிக் கண்டு பிடித்து, அவனைப் போய்ப் பார்த்தாலும்...
'நான் வேண்டாம் என்றுதானே என்னை விட்டு விலகிப் போய் விட்டான்?'
கண்களில் குப்பென்று கண்ணீர் நிரம்பி வழிந்தது.
கைக்குட்டையால் கண்களைத் துடைத்தபோது, 'ஏ கண்களே! நீங்கள்தானே அவனைப் பார்த்து அவன் மீது ஆசையை உருவாக்கினீர்கள். இப்போது அவனைக் காண முடியவில்லையே என்று நீங்களே அழுகிறீர்கள்! உங்களிடமிருந்து பெருகும் நீரைத் துடைத்துத் துடைத்து, எனக்கல்லவா வலி எடுக்கிறது!' என்று கண்களைக் கடிந்து கொள்வது போல், கண்களை மெல்லத் தட்டியது அவள் கை.
கற்பியல்
பொருள்:
கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது! அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?