Saturday, May 18, 2024

1316. தோழி செய்த எச்சரிக்கை!

கல்லூரி வாசலில் சுந்தரின் பைக் வந்து நின்றபோது கல்லூரி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்த சில மாணவிகள் அவனைப் பார்த்து விட்டுப் பேசாமல் கடந்து சென்றனர். 

ஒரு மாணவி மட்டும் சற்று தூரம் சென்று விட்டுத் திரும்ப வந்து சுந்தர் அருகில் வந்து அவனிடம் ஏதோ சொல்லி விட்டுத் திரும்பினாள்.

"என்னடி சொன்ன அவன்கிட்ட?" என்றாள் தோழிகளில் ஒருத்தி.

"அவன் ரம்யாவோட காதலன்."

"அதுதான் எல்லாருக்கும் தெரியுமே! நீ அவன்கிட்ட போய் என்ன பேசிட்டு வந்தேன்னுதான் கேக்கறோம்" என்றாள் முதலில் கேள்வி கேட்டவள்.

"ரம்யா இன்னிக்குக் காலேஜுக்கு வரலை இல்ல?"

"ஆமாம். அதனால அவளுக்கு பதிலா பார்க்குக்கோ பீச்சுக்கோ என்னை அழைச்சுக்கிட்டுப் போறீங்களான்னு கேட்டியா?" என்றாள் மற்றொரு தோழி.

இதைக் கேட்டதும் மற்றவர்கள் கொல்லென்று சிரிக்க, "சீ! என்னடி பேச்சு இது?  ரம்யா ரொம்ப சென்சிடிவ். அவகிட்ட கவனமாப் பழகுங்கன்னு சொல்லிட்டு வந்தேன்!" என்றாள் சுந்தரிடம் சென்று பேசி விட்டு வந்த பெண்.

"அது அவ்வளவு முக்கியமா? எனக்கென்னவோ நீ அவனுக்குத் தூண்டில் போடறியோன்னுதான் சந்தேகமா இருக்கு!" என்றாள் இன்னொரு தோழி.

"போங்கடி! நீங்க என்ன வேணும்னா சொல்லிட்டுப் போங்க. நான் சொன்னது எவ்வளவு முக்கியமான விஷயம்னு அவன் புரிஞ்சுப்பான்."

"நீங்க ரம்யாவைக் காதலிக்கறது ரொம்ப நல்ல விஷயம். ரம்யா ரொம்ப நல்ல பொண்ணு. ஆனா அவ ரொம்ப சென்சிடிவ். சென்சிடிவ்னா நீங்க கற்பனை பண்ண முடியாத அளவுக்கு சென்சிடிவ். அதனால அவகிட்ட நீங்க ரொம்ப ஜாக்கிரதையா நடந்துக்கணும்" என்று அந்தப் பெண் சொல்லி விட்டுப் போனது சுந்தரைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

ரம்யாவுடன் பழகிய வகையில் அவள் சென்சிடிவ் என்பது சுந்தருக்குத் தெரிந்ததுதான். ஆனால் 'நீங்கள் கற்பனை பண்ண முடியாத அளவுக்கு சென்சிடிவ்' என்று சொல்லி விட்டுப் போகிறாளே அதன் பொருள் என்னவாக இருக்கும் என்று  அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு ஒருநாள், அன்று மாலை தன்னால் வர முடியாது என்று ரம்யாவுக்கு ஃபோன் செய்யலாம் என்று சுந்தர் நினைத்தபோது ரம்யாவிடமிருந்தே ஃபோன் வந்தது.

"இப்பதான் உன்னைப் பத்தி நினைச்சேன். அதுக்குள்ள நீயே ஃபோன் பண்ணிட்டே!" என்றான் சுந்தர் உற்சாகத்துடன்.

"என்னது இப்பதான் என்னைப் பத்தி நினைச்சியா? அப்படின்னா இவ்வளவு நேரம் என்னைப் பத்தி மறந்துட்டியா? நான் எப்பவும் உன்னையே நினைச்சுக்கிட்டிருக்கேன். ஆனா நீ எப்பவாவதுதான் என்னை நினைப்பே போல இருக்கு!" என்று படபடவென்று பொறிந்து தள்ளிய ரம்யா ஃபோனை வைத்து விட்டாள்.

'என்ன இவள் இப்படிப் பேசுகிறாள்?' என்று திகைத்து நின்ற சுந்தருக்கு 'நீங்க நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு சென்சிடிவ்'  என்று அன்றொரு நாள் ரம்யாவின் தோழி தன்னிடம் சொல்லி விட்டுப் போனது நினைவுக்கு வந்தது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 132
புலவி நுணுக்கம் (பொய்க் கோபம்)
குறள் 1316
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.

பொருள்:
நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.
குறள் 1317 (விரைவில்)
குறள் 1315

1315. பரிவாதினியின் பதற்றம்!

"இரண்டு ஆண்டுகளாகக் காதலிக்கிறோம். இன்னும் நமக்குத் திருமணம் ஆகவில்லை. எனக்குக் கவலையாக இருக்கிறது" என்றாள் பரிவாதினி.

"என்ன கவலை? வயதாகிக் கொண்டே இருக்கிறதே என்ற கவலையா?" என்றான் வீரவர்மன் சிரித்துக் கொண்டே.

"நீங்கள் தாமதிப்பதைப் பார்க்கும்போது அந்தக் கவலையும் நியாயமானதுதான். ஆனால் என் கவலை என்னவென்று உங்களுக்குத் தெரியாதா?"

"பரிவாதினி! நம் இருவர் வீட்டிலும் நம் காதலை அங்கீகரித்து விட்டார்கள். நான் அமைச்சரின் அந்தரங்க உதவியாளனாக இருப்பதால், தேசப் பாதுகாப்பு தொடர்பாக அடிக்கடி வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. ஒரு முக்கியமான வேலை முடிய வேண்டி இருக்கிறது. அது முடிந்ததும் எனக்கு இந்த ஊரிலேயே நிலையான வேலை என்று அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார். அவருக்கும் நம் காதல் பற்றியும் திருமணம் தாமதாமவது பற்றியும் தெரியும். 'உன் காதலியிடம் சொல். இன்னும் சில மாதங்கள்தான். அதற்குப் பிறகு திருமணம் செய்து கொண்டு தலைநகரிலேயே இருக்கலாம். உன் மனைவியுடன் குடித்தனம் நடத்த ஒரு பெரிய வீடு ஏற்பாடு செய்து தருகிறேன்' என்று அவர் நேற்று கூட என்னிடம் கூறினார்." 

"அப்படியா? நீங்கள் இப்படிச் சொல்வது நிம்மதியாக இருக்கிறது. ஆனால் திருமணம் தாமதமாவது கவலை அளிக்கிறது. எங்கே நீங்கள் என்னைப் பிரிந்து விடுவீர்களோ என்ற அச்சம் எனக்கு இருந்து கொண்டே இருக்கிறது."

"கவலைப்படாதே, பரிவாதினி. உனக்கு ஒரு உறுதி தருகிறேன். இந்தப் பிறவியில் உன்னைப் பிரிய மாட்டேன். இது சத்தியம்."

இதைக் கேட்டதும் பரிவாதினி வீரவர்மனை உற்றுப் பார்த்தாள். அவள் கண்களில் நீர் தளும்பி இருந்ததை கவனித்த வீரவர்மன், "இன்னும் ஏன் கண்ணீர்?" என்றபடியே அவள் கண்களைத் துடைக்க வந்தான்.

சட்டென்று விலகிப் பின்னால் சென்ற பரிவாதினி, "சொன்னதுதான் சொன்னீர்கள், 'இந்தப் பிறவியில் மட்டுமல்ல, இனி எந்தப் பிறவியிலும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்' என்று சொல்லி இருக்கலாமே. 'இவள் இந்தப் பிறவியோடு போதும், அடுத்த பிறவியில் வேறொரு பெண்ணுடன் உறவு கொள்ளலாம்' என்ற எண்ணம் உங்கள் மனதில் இருக்கிறது போலும்!" என்றாள் கோபத்துடன்.

'இவள் உண்மையாகவே இப்படி நினைக்கிறாளா? இவளை எப்படிச் சமாதானப்படுத்துவது?' என்று புரியாமல் தவித்தான் வீரவர்மன்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 132
புலவி நுணுக்கம் (பொய்க் கோபம்)
குறள் 1315
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.

பொருள்:
காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரியப் போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள்.

1314. மைவிழியின் சந்தேகம்!

மைவிழி மிகவும் அறிவுக் கூர்மை உடையவள் என்பதில் பரிதிக்குப் பெருமை உண்டு. 

பொதுவாக ஆண்கள்தான் அறிவுசார்ந்த விவாதங்களில் கலந்து கொள்வார்கள். ஆனால் மைவிழி ஆண்களுக்கு நிகராகப் பல விவாதங்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறாள்.

இவ்வளவு அறிவாளியான பெண் தன்னிடம் காதல் கொண்டிருப்பது பற்றிப் பரிதிக்குப் பெருமை உண்டு.

 தான் ஒரு சாதாரண வியாபாரிதான் மைவிழியைப் போல் கல்வி அறிவோ, அறிவுக் கூர்மையோ இல்லாதவன் என்றபோதிலும் தன்னிடம் ஏதையோ கண்டு தன்னைக் காதலிக்கிறாளே இந்தப் பெண் என்று அடிக்கடி நினைத்து மகிழ்வான் பரிதி.

"நீங்கள் வியாபாரத்துக்குப் பல இடத்துக்குப் போகிறவர். போகிற இடங்களில் பல பெண்களைச் சந்திக்க் கூடும். அவர்கள் யாரிடமாவது மையல் கொண்டு விடாதீர்கள்!" என்றாள் மைவிழி ஒருமுறை.

"சேச்சே! உன்னைத் தவிர இன்னொரு பெண்ணை நான் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்!" என்றான் பரிதி.

"ஆண்கள் இப்படித்தான் சொல்வீர்கள். ஆனால் வேறொரு பெண் உங்களை விரும்பினால் உடனே உங்கள் மனம் அலைபாயத் தொடங்கி விடும்!"

"நான் அப்படி இல்லை!"

மைவிழி ஒரு பேச்சுக்காக அப்படிச் சொன்னதாகத்தான் முதலில் பரிதி நினைத்தான். ஆனால் ஒவ்வொரு முறை அவன் எங்காவது பயணம் சென்று விட்டு வந்தாலும், "அங்கே யாராவது பெண்ணைப் பார்த்தீர்களா?" என்று துருவித் துருவிக் கேட்பாள் மைவிழி.

'இவள் சந்தேகப்படும் இயல்பு கொண்டவள், இவளிடம் கவனமாக இருக்க வேண்டும்' என்று நினைத்துக் கொண்டான் பரிதி.

ருநாள் இரவு நிலவொளியில் ஒரு நந்தவனத்தில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அன்று மைவிழி அவன் மீது மிகவும் அன்பைப் பொழிந்து கொண்டிருந்தாள். 'இந்தப் பெண்ணின் காதலைப் பெற நான் என்ன பேறு செய்திருக்கிறேனோ!' என்று மீண்டும் நினைத்துக் கொண்டான் பரிதி.

சற்று நேர உரையாடலுக்குப் பிறகு இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாகி ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர்.

"மைவிழி! எந்தக் காதலர்களிடமும் இருக்கும் அன்பை விட நம் இருவரிடையே இருக்கும் அன்புதான் மிக அதிகம்!" என்றான் பரிதி உணர்ச்சிப் பெருக்குடன்.

சட்டென்று அவன் அணைப்பிலிருந்து விலகிய மைவிழி, "என்ன சொன்னீர்கள்?" என்றாள் கோபத்துடன்.

"தவறாக எதுவும் சொல்லவில்லையே! நம் இருவரிடையே உள்ள காதல்தான் மிக உயர்ந்தது என்றுதானே சொன்னேன்?" என்றான் பரிதி பதட்டத்துடன்.

"இதன் பொருள் என்ன? உங்களுக்குப் பல காதலிகள் இருக்கிறார்கள். அவர்களிடம் உங்களுக்கு உள்ள காதலை விட என்மீது உள்ள காதல் அதிகம் என்பதுதானே?"

"இல்லை. நான் மற்ற காதலர்களுடன்தான் நம்மை ஒப்பிட்டேன்."

"மற்ற காதலர்களிடையே உள்ள காதல் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? உங்களுக்கு உங்கள் மற்ற காதலிகளிடம் உள்ள காதலை விட என்மீது அதிகக் காதல் என்பதைத்தான் உங்களை அறியாமலேயே வெளிப்படுத்தி விட்டீர்கள். நான் சந்தேகப்பட்டது சரியாகப் போய் விட்டது. யார் யாரிடமெல்லாம் உங்களுக்கு இருக்கும் காதலை விட என்னிடம் அதிகக் காதல் இருக்கிறது? சொல்லுங்கள்!" என்று கோபமும் அழுகையும் கலந்த குரலில் மைவிழி புலம்பியபோது, 'இவள் அறிவாளியா, முட்டாளா? அல்லது அறிவாளியாக இருப்பதால்தான் இப்படியெல்லாம் விபரீதமாகச் சிந்திக்கிறாளா?' என்ற சிந்தனை பரிதியின் மனதில் தோன்றியது. 

அதே சமயம் 'இவளை எப்படிச் சமாதானப்படுத்தப் போகிறேன்!' என்ற கவலையும் அவன் மனதில் எழுந்தது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 132
புலவி நுணுக்கம் (பொய்க் கோபம்)
குறள் 1314
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

பொருள்:
காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.

Friday, May 17, 2024

1313. கார்குழலியின் கோபம்!

காதலியைக் காணக் கிளம்பிய மதிமாறன் தன் உடைகளைச் சரிபார்த்துக் கொண்டான். 

சிகையை முடிந்து கொண்டதும் கையில் வேப்பெண்ணெய் வாடை அடித்தது. தலையில் உள்ள பொடுகு நீங்க மருத்துவர் அளித்த ஆலோசனையின் பேரில் வேப்பெண்ணெய் தடவிக் கொண்டு வருகிறான். 

இந்த வாடை பற்றிக் கார்குழலி என்ன சொல்லப் போகிறார்களோ என்ற இலேசான கவலையுடனேயே வீட்டை விட்டுக் கிளம்பினான்.

மதிமாறனும், கார்குழலியும் தாங்கள் சந்திப்பதற்காகத் தேர்ந்தெடுத்திருந்த, நகரின் ஒதுக்குப்புறத்திலிருந்த அந்தப் பாழடைந்த வீட்டை நோக்கி மதிமாறன் நடந்து கொண்டிருந்தபோது வழியில் ஒரு இடத்தில் நறுமணம் வீசியது. அருகில் இருந்த ஒரு மரத்தில் மலர்ந்திருந்த மலர்களின் நறுமணம்தான் அது என்று உணர்ந்ததும், மதிமாறன் அந்த மரத்துக்கு அருகே சென்றான். 

மஞ்சள் நிறத்தில் அழகான தோற்றத்துடன் இருந்த மலர்களிலிருந்துதான் அந்த நறுமணம் வந்து கொண்டிருந்தது. அந்த மலரின் பெயர் அவனுக்குத் தெரியவில்லை. அதில் ஒன்றைப் பறித்துச் சிகையில் செருகிக் கொண்டு பார்த்தான். தலையிலிருந்த மலரின் மணத்தை அவனால் நுகர முடிந்தது.

இந்த மலரை அணிந்து கொண்டால் வேப்பெண்ணெய் நாற்றம் தெரியாமல் இருக்குமோ என்று யோசித்தான். அவனைப் போன்ற இளைஞர்களில் பலர் தலையில் பூச்சுட்டிக் கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருந்தாலும், மதிமாறன் தலையில் பூச்சூட்டிக் கொள்வதை விரும்பியதில்லை.

ஆயினும் வேப்பெண்ணெய் வாடையை மறைக்க உதவும் என்பதால் இன்று இந்த மலரை அணிந்து கொள்ளலாம் என்று நினைத்து, சில மலர்களைக் கொய்து அவற்றைத் தலையில் சரியாகப் பொருத்திக் கொண்டு நடையைத் தொடர்ந்தான். 

மலர் சூடி இருப்பது நறுமணத்தை அளிப்பதுடன் தோற்றப் பொலிவையும் அளிக்கும் என்பதால் கார்குழலி இதனால் மகிழ்ச்சி அடைவாள் என்று தோன்யது.

சந்திக்கும் இடத்தை மதிமாறன் அடைந்தபோது கார்குழலி அங்கே முன்பே வந்து காத்திருந்தாள்.

"ஏன் இவ்வளவு தாமதம்? எத்தனை நேரமாகக் காத்திருக்கிறேன்!" என்று பொய்க் கோபத்துடன் சிணுங்கிய கார்குழலியின் முகம் மதிமாறனிடமிருந்து வந்த நறுமணத்தை நுகர்ந்ததும் சற்றே மாறியது.

"என்ன இது வாசனை?" என்று கேட்ட கார்குழலி அவன் தலையில் மலர் சூட்டி இருப்பதை கவனித்தாள்.

"என்ன இது என்றைக்கும் இல்லாமல்.." என்று ஆரம்பித்தவள், "ஓகோ, அப்படியா?" என்றாள் கோபத்துடன்.

"அப்படியா என்றால்?" என்றான் மதிமாறன் புரியாமல்.

"எப்போதும் சிகையில் மலர் சூட்டிக் கொள்ளாத நீங்கள் இன்று சூட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அது ஏன்? இன்னொருத்திக்குக் காட்டுவதற்காக இந்த மலரைச் சூடிக் கொண்டு விட்டு, அவளைச் சென்று பார்த்து உங்கள் சிகை அழகைக் காட்டி விட்டு, என்னைப் பார்க்க வரும்போது தாமதமாகி விட்டதால் அதை அகற்றி விட்டு வர வேண்டும் என்ற நினைவு கூட இல்லாமல் வந்திருக்கிறீர்கள். உங்களுக்காக் காத்திருந்த நான்தான் ஏமாளி!"

கோபத்துடன் அங்கிருந்து கிளம்பினாள் கார்குழலி.

"கார்குழலி! நான் சொல்வதைக் கேள்!" என்றபடியே அவள் பின்னால் சென்றான் மதிமாறன்,  காதலியை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று யோசித்தபடியே.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 132
புலவி நுணுக்கம் (பொய்க் கோபம்)
குறள் 1313
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

பொருள்:
கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.

1312. ஏமாறப் போவதில்லை!

ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த அரவிந்த் "ஏறிக்க!" என்றான்.

"இருங்க, இருங்க" என்று அவனைத் தடுத்தாள் கமலி.

"என்ன ஆச்சு?" 

"மொதல்ல ஸ்கூட்டரை ஆஃப் பண்ணிட்டு, மறுபடி ஸ்டார்ட் பண்ணுங்க!"

"எதுக்கு?"

"பூனை குறுக்கே போச்சே, பாக்கலியா?"

"அதுக்கு?"

"பூனை குறுக்கே போனா நல்ல சகுனம் இல்ல. அதனாலதான் ஸ்கூட்டரை ஆஃப் பண்ணிட்டு மறுபடி ஸ்டார்ட் பண்ணச் சொன்னேன். இருங்க. கீழே இறங்கிட்டு, மறுபடி ஏறி உக்காந்து அப்புறம் ஸ்டார்ட் பண்ணுங்க!"

"சரியாப் போச்சு!" என்றபடியே அவள் சொன்னபடியே செய்தான் அரவிந்த்.

"இந்தக் காலத்தில இப்படிப்பட்ட மூட நம்பிக்கையெல்லாம் வச்சிருக்கியே!" என்றான் அரவிந்த் தொடர்ந்து.

"காலத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. சில விஷயங்கள் எல்லாக் காலத்துக்கும பொருந்தும்!" என்றபடியே ஸ்கூட்டரின் பின்னே அமர்ந்து கொண்டாள் கமலி.

திருமணமான ஆறு மாதங்களில் இது போல் பல நிகழ்வுகளைப் பார்த்து விட்டான் அரவிந்த். தினமும் அவன் அலுவலகத்துக்குக் கிளம்பும் முன் கமலி வீட்டுக்கு வெளியே வந்து சகுனம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கூறிய பிறகுதான் அவன் கிளம்புவது என்பது வழக்கமாகி விட்டது.

ஆனால் கடந்த ஐந்தாறு நாட்களாக இது நடப்பதில்லை. ஒரு சிறிய விஷயம் குறித்து நடந்த விவாதத்தினால் கமலி அவனிடம் கோபித்துக் கொண்டு விட்டாள். அவனிடம் பேசுவதில்லை. அவன் அலுவலகத்துக்குக் கிளம்புமுன் வாசலுக்கு வந்து சகுனம் பார்ப்பதில்லை. சமைத்த உணவுகளை சாப்பாட்டு மேசையில் கொண்டு வந்து வைத்து விட்டுப் போய் விடுவாள். அவனே எடுத்துப் போட்டுக் கொண்டுதான் சாப்பிட வேண்டும்.

ன்று இரவு உணவு மேசையில் அமர்ந்து உணவை உண்ணத் தயாரானபோது அரவிந்துக்கு ஒரு பலமான தும்மல் வந்தது.

பக்கத்து அறையிலிருந்த கமலி கணவனின் தும்மல் சத்தத்தைக் கேட்டு விட்டு ஒருவேளை அவனுக்கு உடல்நிலை சரியில்லையோ என்று நினைத்து என்னவென்று பார்க்க எண்ணி ஒரு அடி எடுத்து வைத்தாள். அப்போது அவளுக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

சில நாட்களுக்கு முன் ஒருமுறை அரவிந்த் தும்மியபோது அருகிலிருந்த கமலி உடனே 'தீர்க்காயுசு!' என்றாள்.

"அப்படின்னா?" என்றான் அரவிந்த்.

"தீர்க்காயுசுன்னா தெரியாதா? நீடூழி வாழ்கன்னு அர்த்தம்!"

"அது சரி. அதை எதுக்கு இப்ப சொல்ற?"

"ஒத்தர் தும்மும்போது அவங்க வாயிலேந்து கெட்ட ஆவி வெளியில போகுமாம். அப்ப தீர்க்காயுசுன்னு சொன்னா, அந்தக் கெட்ட ஆவி அதைக் கேட்டு பயந்து மறுபடி அவங்க பக்கமே வராதாம். அதனால அவங்க நோய்நொடி இல்லாம தீர்க்காயுசா இருப்பாங்களாம்!' என்று விளக்கினாள் கமலி.

அதைக் கேட்டுப் பெரிதாகச் சிரித்த அரவிந்த், "எந்த விஞ்ஞானியோட கண்டுபிடிப்பு இது?" என்றான்.

"எங்க பாட்டி சொல்லி இருக்காங்க. பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி. அதனாலதான் நான் அதையெல்லாம் கடைப்பிடிக்கிறேன்!" என்றாள் கமலி.

'அந்தச் சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு, தும்மல் போட்டால் நான் உடனே வந்து 'தீர்க்காயுசு' என்று சொல்லு விடுவேன், அப்புறம் எங்கள் ஊடல் சரியாகி விடும் என்று நினைத்துப் பொய்த் தும்மல் போடுகிறார் போலிருக்கிறது. ஆனால் நான் இதற்கு ஏமாறப் போவதில்லை' என்று நினைத்த கமலி எடுத்த அடியைப் பின் வைத்து இருக்கையில் போய் அமர்ந்து கொண்டாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 132
புலவி நுணுக்கம் (பொய்க் கோபம்)
குறள் 1312
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

பொருள்:
ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை நீடுவாழ்க என வாழ்த்துவேன் என்று நினைத்து.

1311. கல்லூரிச்சாலை - நோ என்ட்ரி!

கல்பனாவின் கல்லூரிக்கு வந்து அவளைத் தன் ஸ்கூட்டரின் பின்னே உட்கார வைத்துக் கொண்டு அவர்கள் வழக்கமாகச் செல்லும் பூங்காவுக்குச் சென்றான் பார்த்திபன்.

பூங்காவில் ஒதுப்புறமாக ஒரு இடத்தில் இருவரும் அமர்ந்தனர்.

எப்போதும் உற்சாகமாகப் பேசும் கல்பனா அன்று ஏதும் பேசாமல் மௌனமாக இருப்பதைக் கண்ட பார்த்திபன், "என்ன கல்பனா, ஏன் ஒரு மாதிரி இருக்கே? கிளாஸ் டெஸ்ட்ல உன்னை விட உன் ஃப்ரண்டஸ் யாராவது அதிகமா மார்க் வாங்கிட்டாங்களா?" என்றான் அவளைச் சீண்டும் விதமாக.

கல்பனா அவனை முறைத்துப் பார்த்து விட்டு மௌனமாகவே இருந்தாள்.

சுற்றுமுற்றும் பார்த்த பார்த்திபன், தங்களை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, கல்பனாவின் கையை மெதுவாகப் பற்றினான்.

சட்டென்று கையை உதறிய கல்பனா, "தொடாதே!" என்றாள் கோபமாக.

"ஏன் பார்க்ல நிறைய பேர் உக்காந்திருக்காங்களேன்னு பாக்கறியா? யாரும் நம்மை கவனிக்கல!" என்றான் பார்த்திபன்.

"நீயும் நானும் மட்டுமே இருந்தாக்கூட நான் உன்னைத் தொட மாட்டேன்!"

"ஏன் அப்படி?"

"ஏனா? இனிமே என்னை அழைச்சுக்கிட்டுப் போக என் காலேஜுக்கு வராதே!"

"என்ன கல்பனா, சம்பந்தம் இல்லாம பேசற? என்னைத் தொட மாட்டேன்னு சொன்ன. ஏன்னு கேட்டா, காலேஜுக்கு வராதேங்கற!"

"நீ காலேஜுக்கு வரப்ப என்ன நடக்குது தெரியுமா?"

"என்ன நடக்குது? உனக்கு இப்படிப்பட்ட அழகான காதலன் கிடைச்சிருக்கானேன்னு உன் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் பொறாமைப்படறாங்களா?"

"பொறாமைப்பட்டா நான் கவலைப்பட மாட்டேன். ஒவ்வொத்தியும் உன்னை அப்படியே கண்ணால முழுங்கற மாதிரி பாக்கறா. சில பேர் உங்கிட்ட வலுவில வந்து சிரிச்சுப் பேசறாங்க. நீயும் அவங்களோட சிரிச்சுப் பேசற!"

"என்னைப் பார்த்து 'ஹாய்'னு சொன்னா, பதிலுகு நானும் 'ஹாய்'னு சொல்றேன். அதில என்ன தப்பு?"

"தப்புதான். எனக்குச் சொந்தமான ஒரு பொருளை ஏதோ பொதுச் சொத்து மாதிரி என் தோழிகள் கண்ணால முழுங்கறதும் பேச்சுக் கொடுத்து நெருக்கமாக்கிக்க முயற்சி செய்யறதும் எனக்குப் பிடிக்கல. இனிமே நீ என் காலேஜுக்கு வர வேண்டாம். என் காலேஜ் இருக்கற சாலைக்கே நீ வரக் கூடாது! நானே பஸ் பிடிச்சு நேரா பார்க்குக்கு வந்துடறேன்!" என்றாள் கல்பனா.

"மகாராணியோட உத்தரவு எப்படியோ அப்படியே நடந்துக்கறேன். இனிமே கல்லூரிச் சாலையில எனக்கு நோ என்ட்ரி!" என்றபடியே கல்பனாவின் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான் பார்த்திபன். 

இப்போது கல்பனா தன் கையை விலக்கிக் கொள்ளவில்லை.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 132
புலவி நுணுக்கம் (பொய்க் கோபம்)
குறள் 1311
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு

பொருள்:
பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு உன்னை நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.

Sunday, May 5, 2024

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி.

"ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக.

"கிரீஷ் உங்கிட்ட பேசி எத்தனை நாளாச்சு?"

"ஒன்பது நாள்!"

"இந்த ஒன்பது நாள்ள நீ அவருக்கு எத்தனை தடவை ஃபோன் பண்ணி இருப்ப?"

"கணக்கு வச்சுக்கல!"

"மெஸ்ஸேஜ் அனுப்பினது?"

"ஒரு நாளைக்கு பத்துக்குக் குறையாது"

"ஆனா எதுக்கும் அவர்கிட்டேந்து பதில் இல்ல!"

மாதங்கி மௌனமாக இருந்தாள்.

"என்ன செய்யப் போற?" என்றாள் நளினி.

"தொடர்ந்து முயற்சி பண்ணிக்கிட்டே இருப்பேன். வேற என்ன செய்ய முடியும்?"

"இத்தனை நாளா இறங்கி வராதவர் இனிமே இறங்கி வருவாரா?"

"நான் திரும்பத் திரும்ப முயற்சி செஞ்சா என் மேல இரக்கப்பட்டாவது இறங்கி வர மாட்டாராங்கற நம்பிக்கைதான்!"

"ஒரு சின்ன சண்டை. அதுக்காக ஒரு நாள் ரெண்டு நாள் பேசாம இருக்கலாம். எனக்கும் பிரதீப்புக்கும் கூட இப்படி டந்திருக்கு. ஆனா அடுத்த நாள் அவரே வந்து சமாதானமாப் பேசுவாரு. ஆனா உன் ஆளு நீ இவ்வளவு தடவை ஃபோன் பண்ணியும், மெஸ்ஸேஜ் அனுப்பியும் சமாதானம் ஆகாம, ஒரு சின்ன ஊடலை இத்தனை நாள் இழுத்துக்கிட்டிருக்காரு. ஆனா நீ இன்னும் விடாம  அவரை சமாதானப்படுத்திக்கிட்டிருக்க!"

"நம்மகிட்ட கொஞ்சம் கூட அன்பு இல்லாதவர் மாதிரி நடந்துக்கிறாரே, அவர்கிட்ட நாம ஏன் திரும்பத் திரும்பப் போய்க் கெஞ்சணும்னு எனக்கே சில சமயம் தோணும். ஆனா..."

"ஆனா என்ன?" என்றாள் நளினி.

"அவர் மேல எனக்கு இருக்கற காதல்தான் என்னை இப்படிச் செய்யத் தூண்டுது" என்றாள் மாதங்கி ஒரு கணம் கண்களை மூடியபடி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 131
புலவி (பொய்க் கோபம்)
குறள் 1310
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.

பொருள்:
ஊடலைத் தணிக்காமல் வாட விட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் ஆசையே காரணம்.

1316. தோழி செய்த எச்சரிக்கை!

கல்லூரி வாசலில் சுந்தரின் பைக் வந்து நின்றபோது கல்லூரி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்த சில மாணவிகள் அவனைப் பார்த்து விட்டுப் பேசாமல் கடந்த...