Friday, February 9, 2024

1290. குறையாத கோபம்

"இனிமே என்னைப் பாக்காதே! என்னோட பேசாதே!" என்றாள் விசித்ரா கோபத்துடன்.

"நான் சொல்றதைக் கேளு!" என்று மன்றாடினான் வைபவ்.

"நீ சொன்னதைக் கேட்டு நான் ஏமாந்ததெல்லாம் போதும்!"

கோபமாக வெளியேறினாள் விசித்ரா. காதலியை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நின்றான் வைபவ்.

இது நடந்து நான்கைந்து நாட்கள் கடந்து விட்டன. அவளைத் தொடர்பு கொள்ள வைபவ் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஃபோன் செய்தால் உடனே துண்டித்தாள். 

மன்னிப்புக் கேட்டும், வருத்தம் தெரிவித்தும், தன் காதலைத் தெரிவித்தும் அவன் அனுப்பிய குறுஞ்செய்திகளும் பலனளிக்கவில்லை. 

'ஜனனி' திரைப்படத்தில் வரும் 'மன்னிக்க மாட்டாயா மனமிரங்கி' என்ற பாடலின் யூடியூப் வீடியோவை அனுப்பினான். அதற்கும பலன் இல்லை.

மாலை நேரத்தில் விசித்ராவின் அப்பாவும் அம்மாவும் நடைப் பயிற்சி செய்யப் போய் விடுவார்கள் என்பதால் அப்போது விசித்ரா வீட்டில் தனியாகத்தான் இருப்பாள் என்று அவள் ஒருமுறை கூறியது அவன் நினைவுக்கு வந்தது. அதனால் மாலை 6 மணிக்கு அவள் வீட்டுக்குச் சென்றான் வைபவ்.

அழைப்பு மணியை அடித்ததும் கதவைத் திறந்த விசித்ரா அவனைப் பார்த்தும்  திரும்பி உள்ளே போய் விட்டாள். நல்லவேளை அவனை வெளியே நிறக வைத்துக் கதவைச் சாத்தவில்லை!

வைபவ் முன்னறையில் போய் சோஃபாவில் அமர்ந்தான். சற்று நேரத்தில் விசித்ரா உள்ளிருந்து வந்து அவன் எதிரே உட்கார்ந்து 'எங்கே வந்தாய்?' என்பது போல் அவனைப் பார்த்தாள்.

"எங்கே?" என்றான் வைபவ்.

"என்ன எங்கே?"

"இல்லை. உள்ளே போனியே எனக்கு காப்பி போட்டு எடுத்துக்கிட்டு வரத்தானே? அதுதான் எங்கேன்னு கேட்டேன்!"

விசித்ரா சிரிக்கவில்லை. "உன் மூஞ்சில ஊத்தறதுக்காக வெந்நீர் போடத்தான் போனேன். இன்னும் கொதிக்கல. கொதிச்சதும் எடுத்துக்கிட்டு வரேன்!" என்றாள் சூடாக.

சற்று நேரம் மௌனமாக இருந்த பிறகு, "நீ இங்கே வரியா?" என்று சோஃபாவில் தன் பக்கத்தில் இருந்த இடத்தைக் காட்டினான் வைபவ்.

"வரேன். ஆனா நீ இங்கே வந்து உக்காரணும்!" என்று தான் அமர்ந்திருந்த நாற்காலியைக் காட்டினாள் அவள்.

இருவரும் இடம் மாற்றிக் கொண்டனர்.

சில விநாடிகள் கழித்து வைபவ் மெல்ல எழுந்து போய் சோஃபாவில் விசித்ராவின் அருகே அமர்ந்தான். அவள் எதுவும் சொல்லவில்லை.

சற்று நெருக்கமாக அவள் மேல் இடிப்பது போல் உட்கார்ந்தான். அவள் அவனைத் தள்ளவோ, தான் தள்ளி உட்காரவோ முயற்சி செய்யவில்லை. 

தன் கையை சோஃபாவின் பின்புறமாக மெதுவாக எடுத்துச் சென்று விசித்ராவின் தோளின் மீது வைத்தான் வைபவ். அவள் அவன் கையை உதறித் தள்ளவில்லை.

ஆனால் அவள் முகத்தில் மட்டும் கோபம் இன்னும் குறையவில்லை என்பதை கவனித்தான் வைபவ்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1290
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

பொருள்:
தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், ஊடலை மறந்து கூடிவிட்டாள்.

No comments:

Post a Comment

1319. கலைவாணியின் கேள்வி!

மருதவாணனின்  மனைவி கலைவாணி அவனுடன் ஊடல் கொண்டு மூன்று நாட்கள் ஆகி விட்டன. ஊடல் கொண்ட மனைவியை சமாதானப்படுத்த மருதவாணன் செய்த முயற்சிகள் எதுவு...