Sunday, August 23, 2020

1119. காதலிக்குக் கிடைத்த பரிசு!

"நம் புலவர் எப்போதுமே வித்தியாசமாகக் கற்பனை செய்பவர். பொதுவாக எல்லோரும் பெண்களின் முகத்தை நிலவுக்கு ஒப்பிடுவார்கள். ஆனால் நம் புலவர் இந்த வழக்கத்தை மாற்றி, நிலவு தன் காதலியின் முகத்தை ஒத்திருக்கிறது என்று எழுதி இருக்கிறார்!" என்றார் அமைச்சர்.

"புலவரே உங்களுக்கு உண்மையிலேயே காதலி இருக்கிறளா, அல்லது அது கூட உங்கள் பாடலைப் போல் ஒரு கற்பனையான விஷயமா?" என்றான் அரசன்.

புலவர் சற்று திடுக்கிட்டவராக "இருக்கிறாள் அரசே! அவள் முக அழகு நிலவின் அழகை மிஞ்சுவதாக எனக்குத் தோன்றியதால்தான் இப்படி எழுதினேன்" என்றார்.

"உங்களைப் பொருத்தவரை நீங்கள் எழுதியது சரியாக இருக்கலாம். ஆனால் நிலவு என் காதலியின் முகத்தை ஒத்தது என்று நான் எப்போதும் சொல்ல மாட்டேன்."

"ஏன் அரசே?"

"ஏன் என்பதை நீங்களே சிந்தித்துப் பார்த்துக் கண்டு பிடித்து நாளை கூறினால் உங்கள் பாடலுக்கு நான் இரு மடங்கு பரிசளிக்கிறேன்!" என்றான் மன்னன்.

ரவு முழுவதும் யோசித்தும் புலவரால் மன்னன் கூறியதற்கான காரணத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. 

காலையில் எழுந்ததும் தன் காதலியைத் தேடிப் போனார் புலவர். மன்னர் கூறியதை அவளிடம் சொல்லி விட்டு மன்னர் அப்படிக் கூறியதற்கான காரணத்தைத் தன்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதை அவளிடம் தெரிவித்தார்.

"இதை ஏன் என்னிடம் சோல்கிறீர்கள்?" என்றாள் காதலி.

"உனக்கு ஏதாவது தோன்றுகிறதா என்று பார்க்கத்தான்!"

"புலவரான உங்களுக்குத் தோன்றாத சிந்தனை தமிழ் இலக்கியம் பயின்று வரும் மாணவியான எனக்கு எப்படித் தோன்றும்?" 

"நீ தமிழ் இலக்கியம் பயின்று வருகிறாயே!  நீ படித்தவற்றில் இது போன்ற சிந்தனை ஏதாவது வந்திருந்தால் அதை நினைவு படுத்திச் சொல்லேன்!"

"அப்படியானால், மன்னர் தான் எங்கோ படித்ததை வைத்துத்தான் இப்படிச் சொல்கிறார் என்று நினைக்கிறீர்களா?" என்றாள் அவள் சிரித்துக்கொண்டே.

"நீ சிரிப்பதைப் பார்த்தால் உனக்கு இதற்கு விடை தெரிந்திருக்கும் போலிருக்கிறதே!"

"நான் படித்ததும் மன்னர் படித்ததும் நீங்களும் படித்தாகத்தானே இருக்கும்?"

புலவர் கையைச் சொடக்கியபடியே "நான் உன்னைத் தேடி வந்த்து வீணாகவில்லை. நீ எனக்கு வழி காட்டி விட்டாய்!" என்று சொல்லியபடியே அவளிடம் விடை பெற்று விரைந்தார.

"என்ன புலவரே, நேற்று நான் சொன்னதற்கு விடை கண்டு விட்டீர்களா?  என்றான் அரசன்.

"கண்டு விட்டேன் அரசே! நிலவை என் காதலியின் முகத்துடன் ஒப்பிட்டது என் தவறுதான். நிலவு பலரும் காணும் வகையில் உலா வருகிறது. என் காதலியின் முக தரிசனம் எனக்கு மட்டுமே கிடைக்கக் கூடியது. எனவே பலரும் காணும்படி தோன்றாமல் இருந்தால்தான் நிலவை என் காதலியின் முகத்துடன் ஒப்பிட முடியும்!"

"நன்று புலவரே! நான் கூறியபடி இரு மடங்கு பரிசுத்தொகையை உங்களுக்கு அளிக்கிறேன்" என்று சொல்லியபடியே பரிசுப்பையை எடுத்தான் அரசன்.

"வேண்டாம் மன்னரே! இது நான் சிந்தனை செய்து கண்டு பிடித்த கருத்தல்ல. திருவள்ளுவர் கூறிய கருத்துத்தான் இது. அதுவும் இதை நான் தேடிக் கண்டு பிடிக்க உதவியது என் காதலிதான்" என்றார் புலவர்.

"அதனால் என்ன புலவரே! நாம் எந்தக் கருத்தைக் கூறினாலும் அது ஏற்கெனவே திருவள்ளுவர் கூறியதாகத்தான் இருக்கும்! விடை கண்டு பிடிக்க உங்களுக்கு உதவிய உங்கள் காதலிக்கே இந்தப் பரிசைக் கொடுத்து விடுங்கள்!" என்று சொல்லிப் பரிசுப்பையைப் புலவரிடம் அளித்தான் அரசன். 

களவியல்
அதிகாரம் 112
நலம்புனைந்துரைத்தல்   

குறள் 1119
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.
பொருள்:
நிலவே! மலர் போன்ற கண்களை உடைய என் என் காதலியின் முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படி தோன்றாதே!
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

No comments:

Post a Comment

1309. நிழலின் அருமை!

"உங்களுக்கு சமைக்கத் தெரியுங்கறதுக்காக என் சமையல்ல குத்தம் கண்டுபிடிச்சுக்கிட்டு இருக்காதீங்க. வேணும்னா நீங்க சமையுங்க. நான் உக்காந்து ...